தடுப்புக்காவலில் பலியாகும் உயிரும், அரசின் கடமையும் – கி.சீலதாஸ்

ஒரு மனிதனின் உயிரை யாராலும் பறிக்க இயலாது. சில குறிப்பிட்ட சட்டங்களின் வழி மட்டும்தான் அது இயலும். நமது வாழ்க்கை பயணம் எவ்வித தடையுமின்றி, தொல்லையுமின்றி, இடைஞ்சலுமின்றி சுமூகமாக அமைந்திருக்க வேண்டுமென நாம் விரும்புவதில், அக்கறை கொண்டிருப்பதில் எந்த ஆச்சரியமும் கிடையாது.

இப்படிப்பட்ட வாழ்க்கைக்கான அடித்தளம் அரசமைப்புச் சட்டத்தில் பதிவு பெற்றிருப்பதை நாம் பார்க்கிறோம். அது, நாம் தேடும், நாடும் பாதுகாப்புகளைத் தருகிறது. நம் உயிருக்கு எந்த ஒரு பொழுதும் ஆபத்து இருக்காது. சட்டப்படி மட்டும்தான் ஒருவரின் உயிரைப் பறிக்க முடியும்.

சட்ட ஒழுங்கு மிகவும் முக்கியமானதாகும். சட்ட ஒழுங்கு நிலவாத நாட்டில் அராஜகம் மட்டும்தான் எஞ்சும். சட்ட ஒழுங்குக்கு ஆபத்து ஏற்பட்டால் நாட்டில் அமைதி இருக்காது, நீதி இருக்காது. கட்டுப்படுத்த முடியாத கொடுங்கோன்மைதான் தலைவிரித்தாடும். அரசமைப்புச் சட்டம் தரும் பாதுகாப்புகளை நிர்வகிக்கும் பொறுப்பு காவல் துறைக்கு உண்டு.

எவரும் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொள்ள கூடாது என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு காவல் துறையைச் சாரும். அதனால்தான் காவல்துறை திறம்பட, நியாயமான முறையில் செயல்பட வேண்டும் என்ற நோக்குடன் அரசமைப்புச் சட்டத்தில் காவல் துறை ஆணையம் அமைக்கப் பெற்றிருப்பதைக் காணலாம். (காண்க: அரசமைப்புச் சட்டம், 14ஆம் பிரிவு).

காவல் துறை எவ்வாறெல்லாம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்பதை காவல் துறை சட்டம் விளக்குகிறது. இது ஒரு புறமிருக்க, பலவிதமான குற்றச்செயல்களைத் தண்டிக்க தண்டனை சட்டம் இருக்கிறது. புதிதாக வித்திடும் குற்றங்களைத் தடுக்கும் பொறுப்பு காவல் துறைக்கு உண்டு.

எனவே, அதன் பொறுப்பு குற்றத்தைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, குற்றவியல் செயல்களைத் தடுப்பதும், குற்றம் செய்பவர்களைக் கண்டுபிடித்து, தீர விசாரித்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டிய கடமையும் காவல் துறைக்கு உண்டு.

சட்டம் ஒழுங்காக நிர்வகிக்கப்படுகிறதா, நிர்வகிக்கப்பட்டதா என்பதைக் கண்டறியும் பொறுப்பும், அதிகாரமும் அரசமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பெற்ற நீதிமன்றங்களுக்கு உண்டு.

தனிமனிதனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

ஒரு சாதாரண குடிமகன் எதிர்பார்ப்பது என்ன? காவல் துறையானது தனிமனிதனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதோடு பாதுகாப்பை நல்குவதற்குத் தயக்கம் காட்ட கூடாது; தயக்கம் காட்டினால் தட்டிக்கேட்கும் அதிகாரம் நீதித்துறைக்கு உண்டு. காவல் துறையின் கடமைகளை உணர்த்தி அதன்படி நியாயமாக, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டுமெனச் சுட்டிக்காட்டும் அதிகாரத்தை நீதிமன்றம் கொண்டிருக்கிறது. சமுதாயமும் கொண்டிருக்கிறது எனின் மிகையன்று.

நமது நாட்டில் நல்ல, வலுவான காவல் துறை இருக்கிறது, சுயேச்சையான நீதித்துறை இருக்கிறது எனப் பெருமிதம் கொள்ளும்போது மிக முக்கியமாக காவல் துறை தனது கடமைகளைப் பாரபட்சமின்றி நிறைவேற்றுகின்றதா என்ற கேள்வி அடிக்கடி எழுந்து கொண்டிருக்கிறது. நாட்டினுள் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பும் அதனிடம் உண்டு என்பதும் தவிர்க்க முடியாத வினாவாகும். காவல் துறை தனது கடமையுணர்வில் திருத்தம் காணாத வரை கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும்.

காவல்துறை சட்டத்தை நிலைநிறுத்தும் பொறுப்பைக் கொண்டிருக்கிறது என்பதை அது ஒப்புக்கொள்ளும்போது, அதை கண்காணிக்க வேறோரு அமைப்பு தேவை இல்லை என்று வாதிடலாம். ஆனால், காவல் துறை தனது கடமைகளில் இருந்து நழுவுவதால் அதன் மீது சந்தேகம் எழுவதைத் தடுக்க முடியுமா என்ன?

காவல் துறை, பயிரை மேயும் வேலியா?

க நாட்டில் நடக்கும் சம்பவங்கள், கடந்த காலத்தில் காவல் துறையில் நடந்த சம்பவங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்ட சமீபத்தீல் ஓய்வுபெற்ற அத்துறையின் தலைமை அதிகாரி டான் ஶ்ரீ அப்துல் ஹமிட் படோர், அந்தத் துறையின் திறமையான ஆற்றலை, நல்ல விளைவுகளை உருவாக்குவதை விடுத்து கேவலமான விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பது மலேசிய காவல் துறையின் மீது வலுவான சந்தேகம் மேலிடுகிறது எனின் அது வேதனைக்குரியதே.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதாவது காவல் துறையில் உள்ள ஒரு சிலர் சமுதாயத் துரோக கும்பலின் கைப்பாவைகளாக மாறிவிட்டது என்கின்ற தலைமை அதிகாரி அப்துல் ஹமிட்டின் குற்றச்சாட்டு சாதாரண குடிமகனின் பாதுகாப்பு உதாசீனம் செய்யப்படுகிறது, காற்றில் பறக்க விடப்படுகிறது என்று சந்தேகிக்கச் செய்கிறது. இது உண்மையானால் இந்நிலை நம்மைத் துயரில் ஆழ்த்தும்.

சமீபத்தில் காவல் துறை பாதுகாப்பில் இருந்த அ.கணபதியின் மரணம் நாட்டில் நிலவும் பல சந்தேகங்களை உறுதிப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். கணேசன் காவல் துறையின் பொறுப்பில் இருந்தபோது பலத்த காயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

காவல் துறையின் பாதுகாப்பில் இருந்தபோது கணபதி கொடுமையாகத் தாக்கப்பட்டார் என்ற கூற்றை மறுக்கும் காவல் துறை அதிகாரி, கணபதி மூன்று முறை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதில் உண்மையிருந்தால் அதை அப்போதே வெளியிட்டிருக்கலாம் என்கின்ற விளக்கம் சிந்திக்க வேண்டியதாக இருப்பினும் தொடர்ந்து காவல் துறையின் பாதுகாப்பில் இருப்பவர்க்கு நீதிமன்றத்திற்கு அப்பால் எப்படிப்பட்ட பாதுகாப்பு இருக்கும் என்ற அச்சம் எழாமல் இருக்குமா?

விசாரணை என்ற பேரில் தடுப்புக் காவல் நீட்டிக்க வேண்டும் என்கின்ற அரசின் – காவல் துறையின் பரிந்துரையை நீதிமன்றம் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வது இயல்பு. காவல் துறை சொல்வதில் நியாயம் இருக்குமென நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக்கொள்ள கூடாது எனக் கூட்டரசு நீதிமன்றம் வலியுறுத்தியிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது நீதிமன்றங்களின் பொறுப்பாகும். (காண்க: Hassan Marsom & ors v. Mohd Hady Ya’akop [2018] 7 CLJ 403)

கணபதியின் விஷயத்தில் காவல் துறை சொல்லும் காரணத்தில் உண்மை இருக்கிறதா என்பதை புலனாய்வு செய்யும் பொறுப்பு அரசுக்கு உண்டு. இதனால்தான் வழக்குரைஞர்களின் மன்றம் நீதி விசாரணை ஆணையம் அமைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த ஆணையம் நீதி வழங்குமென எதிர்பார்க்கலாம்.

தாக்கப்பட்ட அன்வாருக்கு நீதி

இன்றைய எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம் தடுப்புக் காவலில் இருந்தபோது கடுமையாகத் தாக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்குத் தாங்கள் பொறுப்பல்ல எனக் காவல் துறை கூறியது.

அன்றைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது சொன்னது என்ன தெரியுமா? அன்வரே இந்தக் காயங்களை ஏற்படுத்தி இருக்கலாம் என்றார். உள்ளூர் மற்றும் அனைத்துலக நெருக்குதலின் காரணமாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அன்வர் காவல் துறையில் இருந்தபோது தாக்கப்பட்டார் என்று அம்பலமானது.

அந்தக் கடுமையான காயங்களை ஏற்படுத்திய அன்றைய காவல் துறை தலைமை அதிகாரியின் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை அனுபவித்தார் அந்தத் தலைமை அதிகாரி.

ஆகமொத்தத்தில், கணபதியின் மரணத்துக்குத் தாங்கள் காரணமில்லை எனக் காவல் துறை மறுத்த போதிலும் கணபதியின் குடும்பத்தினர்க்கும், நாட்டுக்கும் அவரின் மரணத்துக்கான விளக்கம் தேவை. அதைக் கோருவதில் நியாயம் உண்டு. அரசு இதனைத் தட்டிக்கழிக்கக் கூடாது.