தடுப்புக்காவல் மரணங்கள்: பிரதமர் என்ன சொன்னார்?

இராகவன் கருப்பையா – கடந்த மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த தடுப்புக்காவல் கைதி கணபதி தொடர்பான சலசலப்புகளும் கண்டனங்களும் கோபமும் சோகமும் இன்னும் தணிந்திராத நிலையில் ஒரு மாதம் கழித்து அதே காவல் நிலையத்தில் நிகழ்ந்துள்ள மற்றொரு மரணமும் ஜொகூரில் நிகழ்ந்த ஒரு மரணமும் நம்மை மேலும் உலுக்கியுள்ளது.

கணபதி மரணத்தோடு இத்தகைய கொடூரங்களுக்கு ஒரு தீர்வு பிறக்கும் என்ற நம்பிக்கையில் திளைத்திருந்த போதுதான்  42 வயது சிவபாலனும் சிம்பாங் ரெங்காம் சிறையில் 21 வயது சுரேந்திரனும் மரணித்த செய்தி நம் மீது ஈட்டி போல் பாய்ந்துள்ளது.

நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்த கணபதியின் இறப்பைத் தொடர்ந்து பிரதமரிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசப் போவதாக மனிதவள அமைச்சர் சரவணன் குறிப்பிட்டிருந்தார்.

அது குறித்து முன்னாள் மனிதவள அமைச்சர் குலசேகரனுடன் அவர் செய்த தர்க்கம் சமூக வலைதளங்களில் பரவலாக வெளியானதும் எல்லாரும் அறிந்த ஒன்று.

அமைச்சரவை கூட்டத்தின் போது அது குறித்துப் பிரதமரிடம் எடுத்துரைக்கப் போவதாகவும், அந்தச் சமயத்தில் பேசினால்தான் இதர அமைச்சர்களுக்கும் இந்த விசயம் தெரியவரும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

சரியான தருணத்தில் பிரதமரிடம் இந்தப் பிரச்னையைக் கொண்டு செல்வதே சிறப்பு எனும் அவருடைய திட்டம் விவேகமான ஒன்று என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஏனெனில் கடந்த காலங்களில் முன்னாள் பிரதமர்கள் படாவியிடமோ,  நஜிபிடமோ, மகாதீரிடமோ எந்த இந்திய அமைச்சரும் இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கொண்டு சென்று ஆக்ககரமான தீர்வுக்கு வழி வகுத்ததாகத் தெரியவில்லை.

ஐந்து வாரங்களில் 3 மரணங்கள் என்ற நிலையில் சங்கிலித் தொடராக நிகழ்ந்துவரும் தடுப்புக் காவல் மரணங்கள் நம் இனத்தவருக்குக் காலங்காலமாக இருந்து வரும் ஒரு சாபம் போலாகிவிட்டது.

வலிப்பு வந்து இறந்தார், ஆஸ்துமாவினால் மடிந்தார், தற்கொலை செய்து கொண்டார், மாரடைப்புக்குப் பலியானார் போன்ற இதே புராணங்களைக் கேட்டுக் கேட்டு நமக்கும் புளித்துப்போய்விட்டது, அலுத்துப்போய்விட்டது.

எனவே கடந்த மாதப் பிற்பகுதியில் வெளியான சரவணனின் அறிவிப்பு நமது செவிகளுக்குக் குளிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்தது என்றால் அது மிகையில்லை.

எனினும் தற்போது ஏறத்தாழ ஒரு மாதக் காலம் கடந்துவிட்ட நிலையில் பிரதமரோ உள்துறையமைச்சரோ மற்ற அமைச்சர்களோ இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நமது அமைச்சரும் கூட மௌனமாகத்தான் இருக்கிறார்.

பிரதமரிடம் இதன் தொடர்பாகச் சரவணன் பேசினாரா இல்லையா, அப்படிப் பேசியிருந்தால் பிரதமர் என்ன சொன்னார், பேசவில்லையானால் ஏன் பேசவில்லை போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் நம் சமூகத்தினர் குழப்பத்தில் இருப்பது நியாயமான ஒன்றுதான்.

நமக்குத் தெரிந்த வரையில் நம் நாட்டின் அமைச்சரவை ஒவ்வொரு புதன்கிழமையும் கூடுவது வழக்கம்.இல்லையெனில் நாடாளுமன்றம் பூட்டப்பட்டுள்ளதைப் போல அமைச்சரவைக் கூட்டமும் முடக்கப்பட்டுள்ளதா என்றும் தெரியவில்லை.

மக்களிடையே நிலவும் இத்தகைய குழப்பங்களைக் களைய வேண்டியது சரவணனின் கடப்பாடு மட்டுமின்றித் தார்மீகப் பொறுப்பும் கூட.

இதற்கிடையே கிளேங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் சந்தியாகோ தலைமையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இந்த விசயம் தொடர்பான ‘மெமோரண்டம்’ எனப்படும் குறிப்புப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பிக்க வியாழக்கிழமை காலை உள்துறை அமைச்சுக்குச் சென்றனர்.

ஆனால் தாங்கள் வருவதை அறிந்து அமைச்சின் முன் கதவுகள் இழுத்து மூடப்பட்டதாகச் சால்ஸ் குற்றஞ்சாட்டினார். வேறு வழியின்றி அப்பத்திரத்தை அந்தக் கதவிலேயே செருகி வைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது அவர்களுக்கு. அவ்விடத்தை விட்டு அவர்கள் நகர்ந்தவுடன் அந்தக் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆகப் பிரதமரிடம் தடுப்புக் காவல் மரணங்கள் குறித்துச் சரவணன் பேசியிருந்தால் அரசுத் தரப்பில் இப்படி ஒரு அலட்சியப்போக்கு நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது.