கி.சீலதாஸ் – கோவிட்-19 தொற்றுநோய் தாக்க ஆரம்பித்தபோது அது தன் உறவினன் சார்ஸ் போல கட்டுப்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டதால் ஒதுங்கிவிடும் என்று நம்பப்பட்டது. அது தவறான நம்பிக்கையென இப்பொழுது தெளிவாகிறது. அந்தத் தொற்றுநோய் 2019ஆம் ஆண்டில் ஆரம்பித்தது போல் அல்லாமல் சார்ஸைவிட மாறுபட்ட வடிவம்கொள்ளும் தரத்தைக் கொண்டிருக்கிறது. இதனால் எண்ணற்ற மனிதர்கள் மாண்டுவிட்டனர். அதே சமயத்தில் இந்த நோயிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் திருப்தியாக இருக்கிறது என்பதனாது
குணமடையும் வாய்ப்பு மிகுந்தே காணப்படுகிறது. சிலர் நினைப்பதுபோல் அல்லது பிரச்சாரம் செய்வதுபோல் இந்த நோய் இனம், சமயம், ஒருவரின் சமுதாயப் படிநிலையைப் பார்த்துதான் தாக்குகிறது என்பது அவர்களின் அபத்தமான அறிவிலித்தனத்தை வெளிப்படுத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நோய்க்கு இன, சமய முலாம் பூசும் போக்கானது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதைச் சமயவாதிகள் உணராது நடந்து கொள்வது, பேசுவது; ஒன்று, அவர்களின் அறிவிலித்தனத்தை வெளிப்படுத்தும்; அல்லது இரண்டு, மக்கள் எப்பொழுதும் அறிவிலிகளாகவே இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.
நம்மை, உலகையே பயங்கரமாக உலுக்கும் கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நல்ல செயல் ஆரம்பித்துவிட்டது. அதுதான் தடுப்பூசி. இந்தத் தடுப்பூசி உற்பத்தியாகி அறிமுகப்படுத்தப்படும் முன் பலவிதமான எதிர்மறை கருத்துகளும், கேலிச்சித்திரங்களும் வெளிவரத் தொடங்கின. இன்றளவும் அப்படிப்பட்ட நடவடிக்கை நின்றுவிடும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இப்படிப்பட்ட தவறான தகவல்கள் மக்களிடையே சந்தேகத்தை எழச் செய்கின்றன. கோவிட்-19 தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரத்தை முறியடிக்கும் பொருட்டு மலேசிய அரசு மார்ச் மாதத்தில் சுமார் பத்து மில்லியன் ரிங்கிட் (அமெரிக்க டாலர் 2.4 மில்லியன்) கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டு ஏற்படும் பின்விளைவுகளுக்கு, மருத்துவச் செலவுகளுக்காக ஐம்பதாயிரம் ரிங்கிட்டும், இறப்பு நேரும் பட்சத்தில் அரை இலட்சம் ரிங்கிட் வழங்கப்படும் என அறிவித்தது.
கோவிட்-19 தடுப்பூசி இழப்பீடு அறிவிப்பு நியாயமானது என்ற எண்ணம் பரவும்போது, தடுப்பூசி மீது நம்பிக்கை பலம் பெறும்போது, இந்த இழப்பீடு அறிவிப்பானது தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஆபத்து இருப்பதைத்தானே உறுதிப்படுத்துகிறது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இழப்பீடு நிதி மக்களிடையே கோவிட்-19 தடுப்பூசி மீது நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்குப் பதிலாகப் பல சந்தேகங்கள் எழ காரணியானதும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அரசுக்கே கோவிட்-19 தடுப்பூசி மீது முழுமையான நம்பிக்கை இல்லாததால்தான் ஆபத்தான பின்விளைவுகள் நேரும் என்பதைக் கருத்தில் கொண்டு இழப்பீடு நிதி அமைக்கப்பட்டது என்ற பிரச்சாரம் கோவிட்-19 தடுப்பூசி மீதான சந்தேகத்தை நீக்கவில்லை, பலப்படுத்தியது.
எதிர்மறை பிரச்சாரங்களுக்குச் செவி சாய்க்காத மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டாது நடந்து கொள்வது அவர்களின் தைரியத்தை, மருத்துவ விஞ்ஞானத்தின் மீது இருக்கும் நம்பிக்கை, மூடநம்பிக்கைக்கு இடம் தராததைக் காண முடிகிறது. நானும் இரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டுவிட்டேன்.
இதற்கிடையில் தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் தீவிரம் அடைந்ததை அரசு உணர்ந்தது. இந்தச் சமுதாய விரோத நடவடிக்கையைத் தடுக்கும் பொருட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப் பிரதமர் துறையில் சட்ட அமைச்சராக இருக்கும் டத்தோ ஶ்ரீ தக்கியூடின் ஹசன் எச்சரிக்கை விடுத்துள்ளது காலத்துக்கேற்ற தேவை. 1948ஆம் ஆண்டு நிபந்தனைச் சட்டம் அல்லது 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் ஆகிய இரண்டில் ஒன்றைப் பயன்படுத்தலாம் என்கிறார். இந்த எச்சரிக்கை ஒரு புறமிருக்க சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஆதம் பின் பாபாவின் அறிவிப்பின்படி கொடுக்கப்பட்ட தேதியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வராதவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றார். நிர்ணயிக்கப்பட்ட தேதியன்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வராதவர்களைத் தண்டிக்கும் முறையைக் காண முற்படுகிறார் சுகாதார அமைச்சர்.
மேலே குறிப்பிடப்பெற்ற இரு நடவடிக்கைகளும் நியாயமானவை, தேவையானவை, தவிர்க்க முடியாதவை என்றபோதிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் கொண்டவர்களைத் தானே பார்க்கிறோம். தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் எப்படிப்பட்டது என்பதை ஆய்ந்துப் பார்க்கும்போது கோவிட்-19இன் தாக்குதலில் சிக்கி, சிகிச்சை பெற்றும் மரணம் நேர்ந்தால், மரணமடைந்தவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்கின்ற கூற்றை, பிரச்சாரத்தை எந்த ரகத்தில் சேர்ப்பது? தடுப்பூசிக்கு எதிரான நேரிடைப் பிரச்சாரமாக இல்லாவிட்டாலும், கோவிட்-19 தொற்றுநோயால் மரணம் அடைந்தோர்க்குச் சொர்க்கத்தில் இடம் இருக்கிறது என்ற கூற்று, விளக்கம் மக்களைக் குழப்பும் தரத்தைக் கொண்டிருப்பத்தைக் கவனிக்க வேண்டும். அதன்றி, ஒரு சமயத்தினர்க்கு மட்டும்தான் இந்தச் சலுகைகளை இறைவன் வழங்குகிறார் என்கின்ற கருத்து இறைவனின் கண்களில் பிற சமயத்தினர் தரம் குறைந்தவர்களாக அல்லவா காட்டுகிறார்கள். இது நியாயமற்றச் செயல். அறிவுக்கு ஒவ்வாத கருத்து.
இப்படிப்பட்ட குழப்பும் பிரச்சாரங்களையும் அரசு தயாரிக்கும் தடுப்பூசி எதிர்ப்பு அட்டவணையில் சேர்த்துக் கொள்வது சாலச் சிறந்ததாகக் கருதப்படும். எனவே, அரசு எச்சரிக்கை விடுப்பதோடு நின்றுவிடாமல் கோவிட்-19 தடுப்பூசி குறித்த எல்லாவிதமான தவறான, குழப்பமான கருத்துகள் வெளிவருவதைத் தடுக்க வேண்டும். ஒரு சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் சொர்க்கத்தின் வாசல் திறந்திருக்கும் என்பது சமயவாதிகளின் விஷமத்தனமான போக்காகும். இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை.
பல்லின மக்களும் அவர்கள் தம் சமயத்தைப் பேணி வாழ்வதற்கு இடமளித்த நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்றிருந்த பெருமை அழிந்துவிடக்கூடாது என்பதைப் பாதுகாக்கும் மன உறுதியை, திராணியை அரசு கொண்டு செயல்பட வேண்டும். அதே சமயத்தில் ஒரு சமயத்தினர்க்கு மட்டும் இறைவன் கருணை கரம் நீண்டிருக்கும் என்பதனாது பல சமயங்கள் இயங்கும் இந்நாட்டில் பொறுப்பான நல்லெண்ணத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் முட்டுக்கட்டையாக அமையும் என்பதையும் அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.