கணினிவழியான பொய் செய்திகள், ஒரு ‘பயங்கரவாத’ கலாச்சாரம்!    

கி.சீலதாஸ்- பொய் தகவல் கலாச்சாரம் வளர்வதற்கு, அது தீங்கு விளைவிக்க காரணியாக மாறுவதற்கு இன்றைய விஞ்ஞானம் உதவுகிறது. முகநூல் (ஃபேஸ்புக்), புலனம் (வாட்ஸ்எப்), கீச்சகம் (டுவிட்டர்) போன்ற சமூக ஊடகங்கள் செய்திகளை – அவை உண்மையோ, பொய்யோ என்பதைப் பொருட்படுத்தாது உடனுக்குடன் பரவ உதவுகின்றன. அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் தங்களின் உழைப்பும், நல்லெண்ணமும் தவறான முறையில் பயன்படுத்தப்படும் என்று ஊன்றி நினைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் புதுமையாக இருப்பினும் அவற்றைப் பயன்படுத்தும் முறை பழமையானது, ஊறிப்போன நாசத்தை ஏற்படுத்தும் குணத்தைக் கொண்டிருக்கிறது. வன்மையான பிரிவுணர்வை வளர்வதற்கு உதவுகிறது என்பதும் தெளிவு.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட கருத்துகளுக்குத் தெளிவற்ற விளக்கம், பொய்யான தெளிவுரை, மக்களை ஏமாற்றும் தரம் கொண்ட வியாக்கியானங்கள், திரித்துக்கூறல் போன்ற கலாச்சாரங்கள் யாவும் அன்றிலிருந்து இன்றளவும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது நம் கைகளில் இருக்கும் விரைந்து செய்திகளைப் பரப்பும் சாதன கருவிகள் இல்லாத காலத்தில் பொய் பிரச்சாரத்தின் கடுமை குன்றியிருந்தது என்றில்லை. உதாரணத்திற்கு, புனித நூல்கள் எனப்படும் நூல்களில் கூறப்பட்ட கருத்துக்கள் அல்லது ஒருவரால் சொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தும் பேச்சுகள் இன்றளவும் பலவித வேறுபட்ட வியாக்கியானங்களுக்கு இடமளிப்பது கண்கூடு.

அதே வேளையில் ஒரு சமயத்தினர் பிற சமயத்தினரைப் பற்றி தவறான பிரச்சாரங்கள் செய்ததையும் நமக்கு வரலாறு உணர்த்துகிறது. பிற சமயங்களைத் தரம் தாழ்த்திப் பேசுவது, விமர்சிப்பது சட்டப்படி குற்றம் என்பதை இன்று நேற்றல்ல, சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாம்ராட் அசோகன் பிரகடனப்படுத்தியதை வரலாறு இன்றும் நினைவுபடுத்துகிறது. இது ஒரு புறமிருக்க பல நாடுகளில் அமலில் இருக்கும் தண்டனைச் சட்டம் மற்ற சமயங்களைக் கீழ்த்தரமாக விமர்சிப்பதைக் குற்றம் என்கிறது. நாகரிகமான அரசியல் வாழ்வை விழையும் நாடுகள் பிற சமயத் தூற்றலை ஒரு போதும் உற்சாகப்படுத்துவதில்லை மாறாக கண்டிக்கத் தயங்கியதில்லை.

பேச்சுரிமை, பத்திரிக்கை சுதந்திரம், கருத்துரைக்கும் உரிமை என்பன போன்ற பாதுகாப்பு கோட்பாடு போர்வையின்கீழ் மறைந்து கொண்டு துவேஷப் பேச்சுக்கு இடமளிப்போர்தான் மிகவாகக் காணப்படுகின்றனர். இப்படிப்பட்ட பொய்யான தகவல்களைப் பரப்புவது அல்லது சொல்லப்பட்ட கருத்துக்குப் பற்பல துவேஷமான அர்த்தங்களைக் கற்பித்து மக்களிடையே வெறுப்பை வளர்க்கும் கலாச்சாரம் பழமையானதாகும். எனவே, இன்றைய முகநூல், புலனம், கீச்சகம் போன்ற துரிதமாகச் செய்தி பரப்பும் கருவிகள், சமூக ஊடகங்கள் பழைய தீய பழக்க வழக்கங்களான பொய் செய்தியைப் பரப்பும் கலாச்சாரத்தைப் பலப்படுத்த உதவுகின்றன.

அதே வேளையில் ஒரு சமயத்தைச் சார்ந்தவர்கள் அவர்களின் சமயத்தைப் புகழ்ந்து பேசி, பாடி மகிழ்வதில் எந்தத் தவறும் இல்லை. அவற்றில் குறை காண்பது, குறையை மிகைப்படுத்துவது அறிவு முதிர்ச்சியற்ற தன்மையை அம்பலப்படுத்துவதையும் காணலாம். இத்தகைய விஷமத்தனமான நடவடிக்கைகளால் சமுதாயத்தில் பிளவு மனப்பான்மை, பிறரை நம்பாத மனநிலை வலுபெறுவதையும் நாம் காண்கிறோம். இப்படிப்பட்ட குணாதிசயங்களை வளர்க்கும் இயக்கங்கள் பெருகி வருவது மட்டுமல்ல சில அரசியல் இயக்கங்கள் தங்களின் சுயநலத்தை முன்னிட்டு இத்தகைய ஆபத்தான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவது இயல்பாகிவிட்டது. அரசியல் ஆதாயத்தை நினைக்கிறார்களே அல்லாது நாடு, மக்கள் நலனில் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.

தவறான செய்திகள், பொய்யை அடிப்படையாகக் கொண்ட செய்திகள், கட்டுக்கதைகள் சாதாரண மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும் என்பது கல்விமான்கள், பொருளாதார நிபுணர்கள், அரசியல் மேதைகள், செய்தி சேகரிப்பதில் வல்லுனர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட பொய் செய்திகளை நம்பி மோசம் போனார்கள் என்பதற்கு நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்வோம்.

சிறப்பு மிகுந்த தகவல் செய்தி நிறுவனமான அசோஸிய்டெட் பிரெஸ் (அபி) வெளியிட்ட ஓர் அறிக்கையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததில் அதிபர் பாராக் ஒபாமா காயமடைந்தார் என்ற செய்தி கீச்சகத்தில் பதிவேற்றப்பட்டது. அந்தச் செய்தி, ஐந்து நிமிடங்களில் நாலாயிரம் முறை மறுபதிவு செய்யப்பட்டு பிறகு வைரலாகிவிட்டது. ஆம், இந்தச் செய்தியை உடனடியாக அபி மறுத்தபோதிலும் அந்தத் தகவல் வைத்த குறி தவறவில்லை, நிறைவேறியது. அந்தப் பொய்யான செய்தியை மற்றவரின் கணினியில் புகுந்து குழப்பம் விளைவித்தது சிரியா குழுமத்தினரின் வேலை என்பது தெரிய வந்தது. இதனால், பங்குச் சந்தையில் பலத்த இழப்பு ஏற்பட்டது. ஏறக்குறைய 136 ஆயிரம் கோடி டாலர் இழப்பைத் தற்காலிகமாக ஏற்படுத்தியது. பொருளாதார நாசத்தை விளைவிப்பதுதான் குறி. இதுதான் கணினி வழியிலான பயங்கரவாத நடவடிக்கை.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி சுவீடனில் நடந்த பொது தேர்தலில் பரப்பப்பட்ட செய்திகள் மூன்றில் ஒரு சதவிகிதம் பொய்யானது அல்லது வேண்டுமென்றே திரித்துக் கூறப்பட்ட தகவல்களாகும். இதுபோன்ற விஷமத்தனமான பிரச்சாரம், தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் தீயச் செயல்கள் அன்றாடம் நிகழ்கின்றன. மோசடி நடவடிக்கைகளுக்கு விஞ்ஞானம் அடிபணிந்துவிட்டது என்றால் மிகையாகாது. குரங்கு கையில் பூமாலை சிக்கினால் எப்படிப்பட்ட விளைவுகளை எதிர்பார்க்கலாமோ அதைத்தான் நிரபராதி சமுதாயம் பார்த்து நடுங்கிக் கொண்டிருக்கிறது.

இவை போன்ற பொய்யான தகவல்களைப் பரப்புவதற்கு முகநூல், புலனம், கீச்சகம் போன்றவை பயன்படுத்தப்படுவதை அரசு கவனத்தில் கொண்டிருக்கிறது என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை. எனினும், அது இயற்றிய சட்டம் சரியாக, பாரபட்சமின்றி அமலாக்கப்படுகிறதா என்ற கேள்வியின் ஒலி தணிகிறது என்று சொல்வதற்கில்லை. இது ஒரு புறமிருக்க, பொய் தகவல் பரப்பப்படுவதைத் தடுக்கும் சட்டம் இருந்தபோதிலும் அதை மக்கள் புரிந்து கொண்டார்களா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். பொய் செய்திகளால் ஏற்படும் வினைகளை, தொல்லைகளை, ஆபத்துகளை, விரயங்களைப் புலப்படுத்த வேண்டும். அதோடு, மக்கள் எவ்வாறெல்லாம் பாதிப்படைந்தார்கள், பாதிப்படைவார்கள் என்பதை விளக்குவதை ஒரு தொடர் கல்வியாக அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

நாம் மட்டும் வாழ வேண்டும் என்கின்ற எண்ணம், ஆர்வம், உணர்வு, உற்சாகம் போன்ற முதிர்ச்சியற்ற சக்திகள்தான் மேலே குறிப்பிடப்பட்ட பொறுப்பற்ற, தீய நடவடிக்கைகளுக்கு காரணம். ஒரு சாரார், அவர்கள் மொழி, பண்பாடு, சமயம் மட்டும்தான் உயர்வானது, பாதுகாப்புக்கு உரியது, உயர்நிலையில் நிறுத்தப்பட்ட வேண்டும் என்ற போக்கு, அரசியல் கொள்கை ஒரு காலத்திலும் எல்லோரும் மனிதர்களாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை வளர்க்காது என்று துணிந்து சொல்லலாம்.

இந்தக் காலகட்டத்தில் கணினி போர் ஆரம்பித்துவிட்டது. தாக்குவோரின் அடையாளத்தை எளிதில் கண்டுபிடிக்க இயலாது. இந்தப் போரில் – அதாவது உண்மையைப் பரப்புவதா அல்லது பொய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதா என்ற போரில் உண்மை வெற்றி பெற வேண்டும். இந்த இலக்கை அடைய விஞ்ஞானிகள் தீர்வு காண வேண்டியது அவர்களின் கடமையே.