மு குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் , ஈப்போ பாராட் .கோவிட் தடுப்பூசியை கையாளும் விதத்தில் மிக மோசமான அடைவு நிலையை கொண்டிருக்கும் பெரிக்காத்தான் அரசாங்கம் அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக கையாண்ட விதம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.இதுவே அதன் படு தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது
தடுப்பூசி போடும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படாததால் ஜுன் 20ந் தேதி வரையில் மலேசியாவில் கோவிட் 19ன் தாக்கம் திடுக்கிடும் வகையில் உயர்ந்து 696,408 ஐ எட்டியுள்ளது . இதில் மரண எண்ணிக்கை 4,408 ம் அடங்கும் .
தடுப்பூசி வாங்கும் ஒப்பந்தத்தில் காலந்தாழ்த்தி செயல் பட்டதால் , மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி வாங்குவதில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியா மிகவும் பின் தங்கி இருக்கிறது.
ஜுன் 19 ந் தேதி வரை முதல் கட்ட தடுப்பூசி 42 லட்சம் பேருக்கும் இரண்டாவதுக் கட்ட தடுப்பூசி 16 லட்சம் பேருக்கும் போடப்பட்டுள்ளது . இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் 5% ஆகும் . உலக நாடுகளில் சராசரியாக 9.9% மக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். இதனுடன் நம்நாட்டை ஒப்பிட்டும் போது நாம் மிகவும் பின்னாள் இருக்கின்றோமென்பது விளங்கும். அதே போல மரண எண்ணிக்கையை ஒப்பிட்டுப்பார்க்கும் போது 10 லட்சம் பேருக்கு 137 மரணங்கள் என மலேசியாவில் நிகழ்ந்துள்ளது , இதுவே சிங்கப்பூரில் 6 ,தாய்லாந்தில் 24 ,ஸ்ரீ லங்காவில் 122 என மரணங்கள் பதிவாகியுள்ளன. ஆகவே மரண எண்ணிக்கையில் நாம் அதிகமாகி தடுப்பூசி போடுவதில் பின்னால் இருக்கிறோம்.
உள் நாட்டு சுகாதார நிபுணர்கள், தனியார் நிறுவனங்கள் சுயமாக தடுப்பூசி வாங்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் அதற்கு நடப்பு அரசாங்கம் செவி சாய்க்காமல் இருக்கிறது.
“மக்களை நாடி சேவை” என்ற கொள்கையை இந்த அரசு கடைப்பிடிக்கவில்லை ; மாறாக , அவர்களின் வயது, பொருளாதார நிலைமை, தடுப்பூசி பற்றிய போதிய விழிப்புணர்வு எதுவும் இல்லாத பட்சத்தில் அவர்களை அரசாங்கம் நிர்ணயித்த இடங்களுக்கு மட்டுமே போய் தடுப்பூசி போட வேண்டுமென்று நிர்ப்பந்தித்திருப்பது மக்களின் மேல் அதன் அக்கறையின்மையை காட்டுகிறது.
மை செஜாத்ரா என்னும் செயலி ஒழுங்காக செயல் படாத காரணத்தினால் , அதில் தடுப்பூசிக்காக பதிவு செய்ய விழைவோர் விரக்தியடைந்து போகிறார்கள். இந்த செயலி வரி செலுத்துவோரின் பணத்தில் 70 மில்லியனை விழுங்கி இருந்த போதிலும் , அது வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்கவில்லை என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டு . சமீபத்தில் அதன் குளறுபடியான செயல்பாட்டால் , அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பூசிக்கு முன் பதிவு செய்யும் அழைப்பு விடுக்கப்பட்ட போது அது செயல்படாமல் போனதால் அதன் தரம் குறித்து பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சிலரை அழைத்து ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு நிர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு வரச் சொல்லி விட்டு அங்கு சென்று பார்த்தால் அந்த இடம் மூடிக் கிடக்கிறது. மேலும் சிலருக்கு முதல் ஊசி போடமலேயே இரண்டாம் ஊசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்ற்க்கிறது. இது எல்லாம் இந்த செயலியினால் ஏற்பட்ட தவறுகள் .
இந்த கோவிட் 19 தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து அரசாங்கம் பொருளாதார ஊக்குவிப்பிற்காக ரி ம 72.6 பில்லியனை சிறப்பு தொகையாக 7 தவணைகளில் வழங்கி வந்துள்ளது. இது சராசரி ஒரு மலேசியருக்கு ரி ம 2,250 வெள்ளியாகும். இவ்வளவு பெரும் நிதியை செலவு செய்திருந்தும் , பெரிக்காத்தான் அரசால் கோவிட் 19 ஐ கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால் இது வரை 4,408 இறப்புகள் ஏற்பட்டுவிட்டது. நாடு 55 % நேரடி வெளி நாட்டு முதலீடுகளில் சரிவு கண்டுள்ளது ;அதிகமான இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர் ; பல தொழில் துறைகள் முடக்கம் கண்டன ; மொத்தமாக பொருளாதார சுணக்கம் ஏற்பட்டு இந்த அரச தோல்வி கண்டுள்ளது.
கோவிட் 19 தடுப்பூசி போடும் மையங்களுக்கான வாடகை அதிக அளவிற்கு இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. எதற்காக தனியார் மண்டபங்களை வாடகை எடுக்கவேண்டும் என்ற கேள்வி எழச்செய்கிறது. வாகனத்தில் இருந்த படியே தடுப்பூசி செலுத்துவது, நாடு முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் அரசாங்க சுகாதார மையங்களை பயன்படுத்துவது போன்றவற்றை பரீசிலித்திருக்கலாம்.பள்ளிக்கூட மண்டபங்கள் இந்த கோவிட் கால கட்டத்தில் சும்மா மூடிக் கிடக்கின்றன. அவைகளை இலவசமாகவே ஊசி போடுவதற்கு பயன் படுத்தி இருக்கலாம் .நாட்டில் ஏறக்குறைய 7,000 தனியார் கிளிக்குகள் செயல்படுகின்றன, அதே எண்ணிக்கையில் மருந்தகங்களுமுள்ளன.
இவர்களுடன் அரசாங்கம் கூட்டுமுயற்சியுடன் செயல்பட்டு , தடுப்பூசிகள் விரைவாக மக்களிடம் போய்ச்சேருமாறு செய்யலாம். இது அரசாங்கத்தின் சுமையை குறைக்கும் , மக்கள் விரும்பியபடி விரும்பிய தனியார் கிளினிக்குகளுக்குச் சென்று ஊசி போட்டுக்கொள்ள வசதியாக இருக்கும். இதனால் நெரிசல் குறையும் ; நேர விரயமும் தவிர்க்கப்படும். இது போன்ற பல ஆலோசனைகளை நிபுணர்கள் வழங்கியிருந்தும் பெரிக்காத்தான் அரசாங்கம் அவற்றை தட்டிக்கழித்து தன்னிச்சையாக இவ்வளவு வாடகைப் பணத்தை எதற்காக செலவிட வேண்டும்.
வெளிப்படையான தன்மையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்காக முக்கியமானதும் கடுமையானதுமான இந்த குற்றச்சாட்டுகளுக்கு பெரிக்காத்தான் அரசாங்கம் பதில் சொல்லும் என்று நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன் .