மக்களவை எப்போது கூடும், இன்னல்கள் எப்போது தீரும்?

இராகவன் கருப்பையா – கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி நாட்டில் அவசரகாலச் சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டதிலிருந்து நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்து வருகிற போதிலும் கடந்த சில வாரங்களாக அந்த நெருக்குதல் அதிகம் தீவிரமடைந்துள்ளது.

மக்களவையை விரைவில் கூட்டுங்கள் என பேரரசர் ஆலோசனை வழங்கியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களும் அம்னோவைச் சேர்ந்த ஒரு சாராரும் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து வருகிற போதிலும் பொது மக்களின் நிலைப்பாடு சற்று மாறுபட்டதாகக் காணப்படுகிறது.

தங்களுக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை துச்சமென மதித்து கடந்த ஆண்டு முற்பகுதியில் சுயநல வேட்கையை தலைமேல் வைத்து தவலைகளைப் போல் தாவித்திரிந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் போக்கை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

வரலாறு காணாத அந்தக் நிகழ்வுகள் மக்களின் மனதிலிருந்து இன்னமும் அகலாமல் இருக்கும் இவ்வேளையில் நாடாளுமன்ற அமர்வு வழக்கமான உற்சாக உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மாண்புடைய மக்களவையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவிழ்த்துவிட்ட காளைகளைப்போல தரங்கெட்டு நடந்துகொண்ட விதம் மக்கள் மனதிலிருந்து இன்னும் மறையவில்லை.

இனத்துவேசக் கருத்துகளை உமிழ்ந்த சாலாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின், இந்தியர் நிறத்தைக் கிண்டல் செய்த பாலிங் உறுப்பினர் அப்துல் அஸிஸ், கொச்சை வார்த்தைகளைக் கக்கிய சபா துணை முதல்வர் புங் மொக்தார், ஆழ்ந்த நித்திரையிலிருந்த மனிதவள அமைச்சர் சரவணன், தனது இருக்கையில் அமர்ந்தவாறே புகைபிடித்த வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின், மற்றும் முக்கியமான அமர்வுகளின் போது கூட கூட்டத்திற்கு மட்டம் போட்ட  உறுப்பினர்கள், இவ்வாறு பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தற்போதைய சிக்கலான காலக்கட்டத்தில் நாடளாவிய நிலையில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்து, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, வருமானம் குறைந்து, ஒரு வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியின்றித் தவிக்கின்றனர்.

இன்னும் பலர் நோய்க்கு இலக்காகி முறையான உதவி வந்து சேராமல் இலக்கற்றுத் தள்ளாடுகின்றனர்.

இந்தக் காலக்கட்டத்தில் குடும்ப வன்முறை, சிறார் கொடுமை, குடிப்பழக்கம் போன்ற எதிர்மறையான சம்பவங்களும் கூட அதிகரித்துள்ளதாக நம்பப்படுகிறது.

மேலும் பலர் மன நலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதை மறுப்பதற்கில்லை. கடந்த 5 மாதங்களில் பினேங் மாநிலத்தில் மட்டும் என்றும் இல்லாத அளவில் 53 தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

நாடளாவிய நிலையில் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை என்னவெனத் தெளிவாகத் தெரியவில்லை.

இதுபோன்ற அவலங்கள் எல்லாம் நிறைய அரசியல்வாதிகளின் செவிகளுக்கு இன்னமும் எட்டவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இப்போதைக்கு அவர்களுடைய கவனமெல்லாம் அரசாங்கப் பதவிகள் மீதுதான் உள்ளது என்ற உண்மை நமக்குத் தெரியாமல் இல்லை.

அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பதவிகளை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் அதே வேளை எதிரணியில் உள்ளவர்களின் நிலை ‘அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்’ என்பதைப் போல்தான்.

மக்களவைக் கூட்டம் தொடர்பாக பேரரசர் ஆலோசனை வழங்கியுள்ள போதிலும் ஆட்சியிலுள்ள பெர்சத்து, கிழக்கு மலேசியக்கட்சிகள் மற்றும் பாரிசான் அமைச்சர்கள், ஆகியோருக்கு அதற்கான அவசரம் இப்போதைக்கு இல்லை என்றேத் தோன்றுகிறது.

இயல்பாக, அரசாங்கத்தில் இடம்பெறாத அம்னோ தலைவர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும்தான் நாடாளுமன்றம் விரைவில் கூட வேண்டும் என தரையில் போட்ட மீன்களைப்போலத் துடிக்கின்றனர்.

மக்களவை கூடுவது தொடர்பாக செயற்குழு ஒன்று அமைக்கப்படுவதாக மஹியாடின் அறிவித்தார். ஆனால் நாடாளுமன்றப் பூட்டுகளைத் திறப்பதற்கு சிறப்புக் குழு எதற்கு என பள்ளிப் பிள்ளைகள் கூட நகைப்பது நம் காதுகளில் விழத்தான் செய்கிறது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரமாட்டோம். எனவே தைரியமாகக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என எதிர்க்கட்சியினர் உத்தரவாதமளிக்கும் அளவுக்கு மஹியாடின் தயங்கி நிற்கிறார்.

வழக்கமாக இல்லங்களில் பயந்து நிற்கும் குழந்தையைப் பார்த்து, ‘அடிக்க மாட்டேன் செல்லம், வந்து சாப்பிடு ராஜா’ என்று  தாய்மார்கள் சொல்வதைப் போல்தான் உள்ளது நிலைமை.

நாடாளுமன்றக் கதவுகளின் அவலம் இவ்வாறு இருக்க அளவில்லா இன்னல்களில் அவதிப்படும் மில்லியன் கணக்கான மக்கள்,  குறிப்பாக பி40 தரப்பினர், ஒவ்வொரு விடியலையும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஏக்கப் பெருமூச்சோடுதான் வரவேற்கினறனர்.

மக்களவைத் தொடரின் போது, நோயை ஆக்ககரமாகக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள், தடுப்பூசி நடவடிக்கைகள், மீட்புத்திட்டம், ஏழைகளுக்கான நிதி உதவி, நலிந்துபோன நிறுவனங்களையும் துறைகளையும் மீட்சியடையச் செய்வது மற்றும் நாட்டின் பொருளாதாரம் போன்றவை மீதான விவாதங்கள் நிச்சயம் நடைபெறும் என்ற போதிலும் அன்றாடப் பிழைப்புக்கு அவதிப்படும் மக்களுக்கு உடனடி நிவாரணம் எப்போது வரும் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

 

படங்கள் :courtesy of FMT