இராகவன் கருப்பையா – கடந்த ஆண்டு முற்பகுதியில் பிரதமர் மஹியாடின் கொல்லைப்புறமாக வந்து அரசாங்கத்தை கைப்பற்றாமலிருந்து பக்காத்தான் ஹராப்பானே இன்னும் ஆட்சியிலிருந்தால் கோறனி நச்சிலின் ஆட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என்பதுவே மக்களின் தற்போதைய பொதுவான கருத்தாக உள்ளது.
ஆட்சி மாற்றமும் நோய்த் தொற்றும் கிட்டதட்ட ஒரே சமயத்தில் நம்மைப் பீடித்த இரு துரதிர்ஷ்டவச சம்பவங்கள் என்று சொன்னாலும் அது மிகையில்லை.
தனது சிறுபான்மை அரசாங்கத்தைத் தக்க வைப்பதற்கு அவசர அவசரமாக அமைச்சரவையை அமைத்த மஹியாடினுக்கு, அந்த சமயத்தில் தனக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றலை மதிப்பீடு செய்ய அவகாசம் இல்லாமல் போய்விட்டது.
எனவே வந்த ‘வரைக்கும் சரி’ என்ற நிலையில் அவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து கணக்கில் சேர்த்துக்கொண்டார் என்றுதான் நமக்கு என்னத் தோன்றுகிறது.
இந்நிலையில் நாட்டை ஆட்சி செய்வது ஒரு புறமிருக்க கோறனி நச்சில் எனும் கொடிய தொற்றைச் சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்புக்கு எல்லாருமே ஆளாக நேரிடும் என யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
இருப்பினும் அன்றிலிருந்து இன்று வரவையில் அமைச்சரவையில் உள்ளவர்களில் பெரும்பாலோரின் கவனம் முழுவதும் தங்களுடைய பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதில் மட்டுமே இருப்பதை மக்கள் கவனிக்காமல் இல்லை.
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றத் தெரியாமல் தடுமாறுவதை பார்த்தால், தேன் எடுக்கும் ஆர்வத்தில் கூண்டைக் கலைத்துவிட்டு இப்போது நாலாப்பக்கமும் கொட்டு வாங்கிக் கொண்டிருப்பதைப் போல் உள்ளது அவர்களுடைய நிலைமை.
இவ்வளவுக்கும் காரணம் முன்னாள் பிரதமர் மகாதீர்தான் என மக்கள் அங்கலாய்த்துக் கொள்ளும் போதிலும் தனது ஆட்சியின் கீழ் உயர் கல்வி பெற்ற, மிகுந்த ஆற்றலுடைய, திறமைசாலிகளையே அவர் அமைச்சர்களாக நியமித்திருந்தார் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
அந்த அமைச்சரவையின் ஒரே குறைபாடு அனுபவமின்மை மட்டுமே.
அவர்களில் ஒரு சிலரின் தலைக்கனம் அவ்வப்போது தலை தூக்கிய போதிலும் பெரும்பாலோர் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
உதாரணத்திற்கு சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் ஸுல்கிஃப்லி பிரிட்டனில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து அங்கேயே முதுகலைக் கல்வியையும் மேற்கொண்ட ஒரு திறமைசாலியாவார்.
அவருக்கு துணையமைச்சராக இருந்த டாக்டர் லீ புன் சாய் ஒரு இருதய நோய் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவத்து துறையில் மிகுந்த ஆற்றலுடைய இவ்விருவரும் சுகாதாரத் துறை இயக்குநர் நோர் ஹிஷாமுடன் சேர்ந்து இந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் கோறனி நச்சிலிருந்து நம் நாட்டை விடுவித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பக்காத்தான் அரசாங்கம் ஆட்சியிலிருந்திருந்தால் சபா தேர்தலுக்கான தேவை ஏற்பட்டிருக்காது, நோன்புப் பெருநாள் சந்தைகளும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். ஆக நோய்த் தொற்றும் கூட நம் நாட்டில் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்திருக்காது.
நோர் ஹிஷாம், அரசியல்வாதிகளின் தலையீடின்றி தனது திறமைக்கு ஏற்ப சுதந்திரமாகச் செயல்படுகிறாரா எனும் ஐயப்பாடு மக்கள் மனதை ருடிக் கொண்டிருக்கும் அதே வேளை ஸூல்கிஃப்லியும் லீ புன் சாயும் அவ்வப்போது வழங்கும் யோசனைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவும் தயாராய் இல்லை.
தற்போதைய சுகாதார அமைச்சர் அடாம் பாபா கடந்த ஆண்டு முற்பகுதியில் 500 நாடுகளுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுடன் இயங்கலை வழியாக உரையாடியதாக அறிவித்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு வெந்நீர் அருந்தினால் நோய்க்கிருமி மடிந்துவிடும் என்றும் குறிப்பிட்டு எல்லாருடைய நகைப்புக்கும் ள்ளானார்.
அவருடைய துணையமைச்சர் நோர் அஸ்மி, நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றத் தவறி விருந்தோம்பல் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதால் சட்டத்தின் பிடியில் ஒரு முறை மாட்டிக்கொண்டதைத் தவிர்த்து மற்ற சமயங்களில் வெளியே தலையைக் காட்டுவது அபூர்வம்தான்.
இப்படி ஒருவர் இருக்கிறார் என்பதே நிறையப் பேருக்குத் தெரியாது போல் உள்ளது நிலைமை.
சுகாதார அமைச்சர்களின் லட்சணம் இவ்வாறு இருக்கத் தடுப்பூசி நடவடிக்கைகளை அறிவியல், தொழில் நுட்ப, புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக எப்பொழுதோ குறைந்திருக்க வேண்டிய நோய்த்தொற்று நம் நாட்டில் வரம்பு மீறிப் போனதற்குத் திறமையற்ற அமைச்சர்களும் ஒரு காரணம் எனும் உண்மையை மக்கள் உணராமல் இல்லை.
இந்த பொம்மலாட்ட அரசியலில், பதவிகளில் உள்ள ஒவ்வொரு அரசியல்வாதியும், எப்படி ஆட வேண்டும் என்ற நியதியில் பலத்த சிக்கல் உள்ளது. ஆதரவை வைத்து மிரட்டும் தங்களின் கட்சிக்குத் தகுந்த ஆட்டத்தையும் அதோடு அமைச்சரவை பதவியைத் தற்காக்கப் ரதமருக்கு ஏற்ற ஆட்டத்தையும், துரோகமற்ற வகையில் செய்யவேண்டும். இதில் வஞ்சிக்கப்படுபவர்கள் மக்களாகும்.