நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் – பிரதமருக்கா- மாமன்னருக்கா?

 கி.சீலதாஸ் – மனிதன் இயல்பாகவே அச்சத்தில் வாழ்பவன், அவ்வாறு வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டான். சுமார் ஓராண்டுக்கு மேலாக அவன் புது விதமான அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். பல இலட்சக் கணக்கில் மனித உயிரிழப்பு உலகெங்கும் நேர்ந்தது. இதற்குக் காரணம் கோவிட்-19. அது, இதுகாறும் மனிதனால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி மனிதர்களை வதைக்கிறது. உலக நாடுகளிடையிலான தொடர்பை அறுத்துவிட்டது.

நாட்டின் உள்ளேயும் நடமாட்டக் கட்டுப்பாடு, நாட்டு எல்லையைக் கடப்பதிலும் கட்டுப்பாடு. இப்பொழுது மனிதர்கள் மூகமுடிகளாக வாழ்கிறார்கள். அதை அணியாமல் வீட்டுக்கு வெளியே நடமாடக் கூடாது, அப்படிப்பட்ட தடையை மீறினால் தண்டிக்கப்படுகிறார்கள். அபராதத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஆகமொத்தத்தில், மனிதர்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இவையாவும் கோவிட்-19 மனித குலத்துக்குத் தாரைவார்த்து தந்த பரிசு.

மலேசியாவைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு மார்ச் பதினெட்டாம் தேதி ஆரம்பித்த நடமாட்டக் கட்டுப்பாடு பலவிதமான மாற்றங்களுடன் அமலில் இருக்கிறது. இந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் ஆரம்பித்த நடமாட்டக் கட்டுப்பாடு இருபத்தெட்டாம் தேதியோடு முடிவு காணும் என நம்பப்பட்டது, அறிவிக்கப்பட்டது. அது முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை. அதில் மாற்றம் வேண்டுமானால், நம்முடைய அன்றாட வாழ்க்கை மாமூல் நிலைக்குத் திரும்ப வேண்டுமானால் நாள் பிடிக்கும்.

எப்பொழுது அந்த நல்ல நாள் வரும் என்று சொல்ல முடியாது. எல்லாம் மக்களின் கையில்தான் இருக்கிறது. அரசும் அதைத்தான் சொல்லுகிறது. ஆனால், மக்கள் தங்களின் பிடிவாத குணங்களைக் கைவிடுவதாகத் தெரியவில்லை. கைவிட வேண்டும் என அரசு சொல்கிறதே தவிர அமலாக்கத்தில் வலுவிழந்த தன்மை இருப்பதாகச் சொல்லப்படுவதையும் கவனிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசு எல்லா தரப்பினரையும் அரவணைத்து நல்லதொரு தீர்வைக் காண முற்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட முயற்சியில் அரசு விருப்பம் காட்டியதற்கான சான்று குறைவு. ஆனால், அரசியல் பேச்சுதான் முன்நிலை வகிக்கிறது. எல்லோரும் அரசியல் பேசுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் கோவிட்-19 குறித்த பேச்சு குறைந்து நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் யாருக்கு உண்டு என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

மலேசியர்களில் பலர் ஒரு வேளை சாப்பாட்டுக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டுவிட்டதை ஏனோ நினைத்துப் பார்க்க துணிவதில்லை. நாட்டில் ஏராளமான குடும்பங்களுக்கு உதவும் நல்ல பணிகளில், பணக்காரர்கள் அல்ல, சாதாரண மலேசியர்கள் ஈடுபாடு கொண்டுள்ளனர். குறிப்பாக, ஒரு வேளை சாப்பாடு வழங்கப்படுவதைக் காணலாம் மற்றும் சிலர் அவதிப்படும் குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குகின்றனர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டினால் ஏற்பட்டிருக்கும் சங்கடங்கள் அவதியுறுவோரை அடையாளம் காண்பது எளிதல்ல. எனவே, நல்நெஞ்சங்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். உதவி வேண்டுவோர் ஒரு வெள்ளை துணியைத் தங்கள் வீட்டின் முன்வாசலில் தொங்கவிட்டால் தவறாமல் உதவுவோம் என்று கூறுகிறது அந்த அழைப்பு.

இவ்வாறு உதவ முன்வந்தோரின் பெரும்பாலோர் இராமன் ஆண்டால் என்ன! இராவணன் ஆண்டால் என்ன? என்ற எண்ணம் உடையவர்கள் அல்ல. நாட்டில் நல்லாட்சி வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆவலைக் கொண்டவர்கள். மக்கள் ஒரு பொழுதும் உணவுக்காக அல்லல்படக்கூடாது, பட்டினியில் வாடக்கூடாது என்பதே அவர்களின் தலையாய நோக்கம். சுப்ரமணிய பாரதியாரின், “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா?

உணவும், உணவுப் பொருட்களை இலவசமாக வழங்குவோருக்கு இந்நாட்டு நடப்பில் கரிசனம் உண்டு. தவறான ஆட்சி முறை மக்களுக்கு நன்மை தராதே! அந்தப் பயம் அவர்களுக்கு உண்டு. இப்பொழுது நடக்கும் ஆட்சியில் ஒற்றுமை உணர்வைக் காண முடிகிறதா? பல கட்சிகளின் ஆதரவோடு இயங்கும் இன்றைய அரசு மீது நட்பு கட்சிகளே திருப்தி கொண்டிருப்பதாகச் சொல்ல முடியவில்லையே.

நெருக்கடி கால பிரகடனத்தை அறிவிக்க ஆலோசனை வழங்கியவர் பிரதமர். இந்தப் பிரகடனத்தின்படி நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் இயங்க முடியவில்லை. நெருக்கடி காலத்தில் எல்லா கட்சிகளின் ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவைப்படும். அதை உணர்ந்து செயல்பட அரசு காட்டும் தயக்கம் புரியாத புதிராக இருக்கிறது.

நாடாளுமன்றம் கூடினால் நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படும். அப்படி நடந்தால் சிறுபான்மை அரசு கவிழ வாய்ப்புண்டு. ஆனால், பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிய மாட்டோம் என்று சொன்ன பிறகும் நாடாளுமன்றத்தைக் கூட்ட தயங்குவது ஏன்?

இப்படிப்பட்ட குழப்பத்திற்கிடையே மாமன்னர் நாடாளுமன்றம் கூடலாம் என்று சொல்லிவிட்டார். விரைவில் கூட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார். யார் நாடாளுமன்ற கூட்டத்திற்கான அழைப்பை விடுவது என்பதே இப்போதைய விவாதம். ஒரு சிலர் மாமன்னர் நாடாளுமன்ற கூட்டத்திற்கான ஆணையைப் பிறப்பிக்கலாம் என்கின்றனர்.

ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் 40(1)ஆம் பிரிவு தெளிவாக இருக்கிறது. மாமன்னர் அமைச்சரவை அல்லது அமைச்சரவை நியமித்த ஒருவரின் ஆலோசனைபடிதான் தனது அரசமைப்பு அதிகாரங்களைச் செலுத்துவார், பயன்படுத்துவார். வழக்கப்படி அமைச்சரவையின் உறுப்பினர்களை நியமிப்பவர் பிரதமர்.

எனவே, பிரதமரின் ஆலோசனைபடிதான் மாமன்னர் செயல்படுவார். அமைச்சரவையானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பாகும். அதன் தலைவர்தான் பிரதமர். எனவே, பிரதமரின் ஆலோசனைபடி மாமன்னர் செயல்படுவதானது மக்களின் விருப்பத்துக்கு இடமளிப்பது, மதிப்பளிப்பது என்று சொல்லலாம். இதை ஏற்க மறுக்கும் தரப்பினர் மாமன்னர் சிறப்பு அதிகாரங்கள் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அபிப்பிராயங்கள் கருத்தாழமிக்கதாக இருக்கலாம்.

ஆனால், அவைதான் சரியான விடையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இப்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசமைப்புச் சட்ட சர்ச்சை கோவிட்-19 பிரச்சினையைத் தீர்க்குமா? தீர்வு காண உதவுமா? சந்தேகம்தான்.

இப்பொழுது தேவைப்படுவது என்ன? அரசியல் நடவடிக்கையோ சட்ட விவாதமோ அல்ல. மாறாக, ஏற்பட்டிருக்கும் இன்றைய பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது என்பதாகும். எப்படி மக்கள் தங்களின் இடுக்கண் நிலையிலிருந்து மீள முடியும்? இதுவல்லவா முக்கியம்? இதற்குத் தேவை அரசியல் அல்ல; சட்டத் தீர்வும் அல்ல. இரண்டுமே பிடிவாத குணத்தை வெளிப்படுத்தும்.

அரசியல் வழியாக எல்லா பிரச்சினைகளும் தீர்வு காண முற்படுவது, சட்ட நுணுக்கம், சட்ட நிபுணத்துவம் யாவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைக் காட்டிலும் அவை வளர்ந்து மென்மேலும் பகைமை உணர்வை, விரிசலை வளர்க்கும். இவற்றிற்கிடையே கம்பீரமாகக் காணப்படுவதுதான் மேதகைமை. இது பகைமை, விரிசலைக் கட்டுப்படுத்தி நல்ல உறவுக்கும் வழிகோலும்.

அரசியல்வாதிகள் அல்லது சட்ட நிபுணர்கள் மேற்கொள்ளும் சர்ச்சையை விரிவுப்படுத்தும்நடவடிக்கையை விடுத்து மேதகைமையைப் பின்பற்றினால் நல்ல பலனைக் காண்பது மட்டுமல்ல, நீண்டகால நல்லெண்ணத்தை வளர்வதற்கும் உதவும். அதாவது அரசியல், சட்டம் இவை இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு சுமூகமான அணுகுமுறை தேவை. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை தேவை. அதைப் பயன்படுத்தினால் அற்புத இலக்கை அடையலாம். அத்தகைய நல்லெண்ணத்தைப் பேணி வளர்த்தால் கோவிட்-19 பிரச்சினை மட்டுமல்ல வேறு எந்தச் சிக்கலையும் தீர்க்கலாம். ஒருவேளை இவை ஈடேறாவிட்டாலும் மாமன்னர் – பிரதமர் இருவருக்கும் இடையே பிரச்சினை உருவெடுப்பதைத் தவிர்க்கலாம்.

நாம் ஒரு வரலாற்று உண்மையை எப்பொழுதும் மனத்தில் கொண்டிருக்க வேண்டும். மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் இருந்துதான் எல்லோரும் தங்களின் அதிகாரத்தைப் பெறுகிறார்கள், மாமன்னர் உட்பட. அந்த அரசமைப்புச் சட்டத்தை எல்லா மாநில ஆட்சியாளர்களும் ஏற்றுக்கொண்ட ஓர் அற்புதமான சாசனம். அதற்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது. குந்தகம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையிலும் கவனம் காட்டக்கூடாது. இப்பொழுது ஏற்பட்டிருக்கும் நாடாளுமன்றம் கூடுவதற்கான அழைப்பை விடுக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பது போன்ற கேள்விகள் அவ்வப்போது எழலாம். எனவே, அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தை அமைக்க அரசு கவனம் செலுத்துவது காலத்துக்கேற்ற ஓர் ஆலோசனையாகும். சிந்திக்குமா?