பரிதாபநிலையில் அம்னோ! இந்தியர்கள்?  

இராகவன் கருப்பையா – மலேசிய அரசியல் வானில் அஞ்சா சிங்கமாகக் கொடி கட்டிப் பறந்த அம்னோ தற்போது கோவிட் கண்ட நோயாளி போல் மூச்சுவிட தடுமாறி  அல்லோலப்படுவதைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பேராசைப்பட்டு பிரதமர் மஹியாடினின் அரசாங்கத்தில் இணையாமல் கொஞ்சம் பொறுமையாக எதிர்க்கட்சியாகவே  இருந்திருந்தால் அக்கட்சிக்கு இந்த அவலம் ஏற்பட்டிருக்காது என்று உறுதியாகச் சொல்லாம்.

நாட்டின் சமீபகால அரசியல் நடப்புகளைப் பார்த்தால் அம்னோவின் சிண்டு தற்போது மஹியாடின்  கையில்தான் உள்ளது என்பதில் ஐயமில்லை.

கடந்த 1946ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட அக்கட்சிக்கு முதல் தலைவராகப்  பொறுப்பேற்ற ஓன் ஜாஃபார் தொடங்கி நஜிப் வரையில் கிட்டதட்ட எல்லாத் தலைவர்களுமே ஓரளவு இரும்புக் கரங்களுடன் அதனை வழி நடத்தினார்கள்.

ஆனால் தற்போதையத் தலைவர் அஹ்மட் ஸாஹிட் கட்சியை ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வர இயலாமல் மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதை அண்மைய கால நடவடிக்கைகள் அப்பட்டமாகக் காட்டிவிட்டன.

மஹியாடின் அரசாங்கத்திற்கான ஆதரவைத் தனது கட்சி மீட்டுக் கொள்வதாக பெரும் ஆரவாரத்தோடு அவர் அறிவிப்பது இது முதல் தடவையல்ல. ஒவ்வொரு முறையும் இவ்வாறு அவர் அறிவிக்கும் போதெல்லாம் ஒரு அணுவும் அசைந்தபாடில்லை. ஏனென்றால் மஹியாடின் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அம்னோ அமைச்சர்களை வளைத்து தன் வசம் வைத்துக் கொள்கிறார்.

நான்கு நாள்களுக்கு முன்பும் இதுதான் நடந்தது.

இரவு 8 மணித் தொடங்கி பின்னிரவு வரையில் தனது கட்சியின் உச்ச மன்றக் கூட்டத்தை நடத்திய அஹ்மட் ஸாஹிட், அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்வதாக அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பில் எவ்விதமான சலசலப்பும் ஏற்படவில்லை என்பதுதான் வேடிக்கை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர்களுடைய அரசியல் சித்து விளையாட்டுகளைக் கண்டு அலுத்துப்போய்விட்டது மட்டுமின்றி அன்றாட வாழ்வாதாரத்திற்கு தற்போது போராடிக்கொண்டிருக்கும் பொது மக்களும் கூட அந்த அறிவிப்பைச் சட்டை செய்யவில்லை.

அமைச்சரவையில் தங்களுக்குக் கிடைத்துள்ள பதவி உயர்வுகளைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கும் அம்னோத் தலைவர்களுக்கு அஹமட் ஸாஹிட்டின் அறிவிப்பு வெறும் வெற்று வேட்டுதான்.

தங்களுடைய புதிய பதவிகளில் மஹியாடினுக்கு ஆதரவாக மேலும் சிறப்பாகச் செயலாற்ற எண்ணம் கொண்டுள்ளதாக முதன்மை அமைச்சராகப் பதவி உயர்வு பெற்ற ஹிஷாமுடினும் துணைப்பிரதமராக நியமனமான இஸ்மாய்ல் சப்ரியும்  அறிவித்ததானது அஹமட் ஸாஹிட்டின் கையாலாகத்தனத்தையேக் காட்டுகிறது.

தங்கக்கட்டியின் மேல் அமர்ந்திருப்பதைப் போல வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அம்னோவின் 9 அமைச்சர்களும் 8 துணையமைச்சர்களும் அஹ்மட் ஸாஹிட்டின் அறிவிப்புகளைச் சல்லிக் காசுக்குக் கூட மதிப்பதாகத் தெரியவில்லை.

அதற்கேற்றவாறு அஹமட் ஸாஹிட்டின் அறிவிப்பும் ஒரு உத்தரவாக இல்லாமல் வெறும் தகவலைப்போல்தான் உள்ளது.

அரசாங்கத்திலிருந்து அம்னோ விலகியது என அறிவிப்பு செய்துவிட்டு மஹியாடினை  ராஜினாமா செய்யச் சொன்னதை எல்லாரும் ஒரு கேலிக்கூத்தாகவே பார்க்கிறார்கள்.

முறைப்படி தங்களுடைய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யுமாறு அம்னோ  அமைச்சர்களுக்குத்தான் அவர் உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்தால் அரசாங்கம் தானாகவே பெரும்பான்மையை இழந்துவிடும்.

அம்னோ உச்ச மன்றத்தில் உள்ள 46 உறுப்பினர்களில் பெரும்பாலோர் அரசாங்கப் பதவிகளில் இல்லை. எனவே இவர்களும் மஹியாடின் வசம் உள்ளவர்களும் இரு வெவ்வேறுத் திசைகளில் கட்சியை இழுப்பதாகத் தெரிகிறது.

அமைச்சரவையில் உள்ள 17 பேரோடு எண்ணற்ற அரசாங்க நிறுவனங்களில் உயர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருப்போரும் மஹியாடினுக்கு விசுவாசமாகவும்  உச்சமன்ற உறுப்பினர்கள் அஹ்மட் ஸாஹிட்டுக்கு ஆதரவாகவும் இருப்பதால் இரண்டும் கெட்டான் நிலையில் உள்ள அக்கட்சி கூடிய விரைவில் பிளவுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்தியர்களின் நிலையென்ன?

அம்னோவின் பலவீனம் இந்தியர்களுக்கும் பலவீனமாகும். இன அடிப்படையில் இயங்கும் வகையில் உள்ள ஒரே இந்தியர் கட்சி மஇகா மட்டும்தான். மலாய்காரர்கள் வாக்குகள் இல்லாமல் இந்தியர்கள் எந்தத்தொகுதியிலும் வெற்றி பெற இயலாது. பல்லின அரசியல் கட்சிகளாக பிகேஆர், டிஏபி போன்றவை இருந்தாலும், அவை மலாய் அரசியலில் ஈடுபடும் போது இனவாத தன்மையில் தான் செயல்படுகின்றனர்.

தற்போதுள்ள அரசியல் சூழலில், பாதிப்பு என்ற வகையில் பார்த்தால், வெகுவாக பாதிப்படைந்துள்ளவர்கள் மலாய்காரர்கள்தான். அதற்குக் காரணம் அவர்களின் வாழ்வாதாரம் பெரும்பான்மையாக மலாய் அரசியலையும், அரசாங்க  பணப்புழக்கத்தையும் மையமாகக் கொண்டு இயங்குவதாகும். கோவிட் தாக்கத்தால் நாட்டின் வருமானம் கட்டுக்குழைந்தது. ஆனால், செலவினங்கள் அதிகரித்தன. தாக்காம் பணவீக்கமும் நாட்டின் கடனும் அதிகரித்தன. அரசாங்கம் வழி வெளியாகும் நிதிகள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களின் பணப்புழக்கம் முடக்கப்பட்டது.

இந்தியர்களை  பொருத்தமட்டில், ஓரளவு சமாளித்து வருவதுபோல்தான் தெரிகிறது. அப்படி வாழ்ந்து பழகிய அனுபவமும், எதிர்பார்ப்புகள் இல்லாத மனநிலையும் இருக்கும்போது இன்னும் ஏமாற என்ன உள்ளது?, என்ற வினாவுக்கு விடை தேவையில்லை.