கோவிட் இறைவனால் தரப்பட்டதா? யாருக்கு அதிகாரம், அரசா? மாமன்னரா?

 கி.சீலதாஸ் –  நாட்டில் நிலவிய கோவிட்-19 பெருந்தோற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு பிரதமர் டான் ஶ்ரீ முஹிடீன் யாசின் நல்கிய ஆலோசனையை ஏற்று நெருக்கடி நிலை பிரகடனம் செய்தார் மாமன்னர். இதன் விளைவு, நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டது. நெருக்கடி காலத்தின்போது நாடாளுமன்றத்தைக் கூட்ட இயலாது. பெருந்தோற்று நோயின் கொடுமையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஒரு பக்கம், எல்லா தரப்பினரின் ஆலோசனையைப் பரிசீலிக்கும் தராதரம் கொண்டிராத மனப்போக்கு மறு புறம். ஆகமொத்தத்தில், அவதிக்கு உட்படுத்தப்பட்டவர்கள் சாதாரண மக்கள்.

நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்வதாக இல்லை. அதே சமயத்தில், சிறுபான்மை அரசு மக்களின் நலிவுகளைக் களைவதில் கவனத்தைச் செலுத்துவதைக் காட்டிலும் தனது அதிகாரத்தைப் பலப்படுத்துவதில்தான் கவனமாக இருந்தது என்பதை உலகே அறியும். இறுதியில் மாமன்னர், தமது சக மாநில ஆட்சியாளர்களோடு கலந்து ஆய்ந்து எடுத்த முடிவு நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதாகும்.

யார் நாடாளுமன்றத்தைக் கூட்ட அதிகாரம் கொண்டிருக்கின்றனர் – அரசா ? மாமன்னரா? என்ற பிரச்சினை அரசமைப்புச் சட்டச் சிக்கலை நோக்கிச் செல்கிறது என்ற சந்தேகம் எழுந்த வேளையில் ஜூலை 26ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் என அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் ஆலோசனைக்கிணங்க மாமன்னர் நாடாளுமன்ற கூடுவதை அனுமதித்துள்ளார். இந்த அணுகுமுறை போற்றத்தக்கது என்பதோடு அரசமைப்புச் சட்டச் சிக்கல் நீக்கிவிட்டது எனலாம். எனவே, இந்தப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தி கொண்டிருந்தவர்களுக்கு வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டிய காலம் என்று கூட சொல்லலாம்.

நாடாளுமன்றம் கூடும்போது அதில் எந்த நிபந்தனையும் இருக்கக் கூடாது. குறிப்பாக, பேச்சு சுதந்திரத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் யாதொரு தடையும் இருக்கக் கூடாது. ஏறத்தாழ ஆறு மாதங்களாக யாதொரு கருத்துப் பரிமாற்றத்திற்கு இடந்தராமல் செயல்பட்ட அரசு இப்பொழுதாவது பல ஆக்ககரமான கருத்துகளுக்கும் ஆலோசனைகளுக்கும் இடமளிக்கும், மதிப்பளிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருக்குமானால் முதிர்ந்த அரசியல் தரத்தை வெளிப்படுத்தும். அதைவிடுத்து, ஒரு சிலரின் குறிப்பாக, அமைச்சர்களின் கருத்துக்கும், அவர்களை ஆதரிப்பவர்களின் மனப்போக்கிற்கு மட்டும் முக்கியத்துவம் அல்லது இடமளிக்கும் ஓர் அரங்கமாக வரும் நாடாளுமன்ற தொடர்வைப் பயன்படுத்தக் கூடாது.

(photo courtesy of FMT)

கோவிட்-19 பெருந்தோற்றினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருப்பதை அரசு உணர வேண்டும். அந்தச் சேதங்களைக் கட்சி வேறுபாடின்றி எல்லா உறுப்பினர்களும் நடந்து கொள்ள வேண்டும். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை அரசு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பதை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் உணர்ந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ​​சட்டம் இயற்றும்போது பிரத்தியேகமாக நெருக்கடி காலத்தில் நாடாளுமன்றம் செயலற்று இருந்தபோது இயற்றப்பட்ட சட்டங்கள் மக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால், மக்களின் நடத்தையில் ஒழுங்கு, கட்டுப்பாடு போன்ற நற்குணங்களைப் பதிய விழையும் சட்டம் அந்தச் சட்டத்தை இயற்றியவர்களுக்கு விலக்கு அளிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துவதோடு, சில தலைவர்கள் மக்களைக் குழப்புவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எதைச் சொன்னாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அவர்கள் சொல்லுவது காலத்துக்கேற்றதாக இல்லாதிருந்தாலும் அதை அரசு தடுப்பதும் இல்லை, கண்டிப்பதும் இல்லை. இனிமேலாவது அரசு பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் இதுபோன்ற தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டால் நல்லதாகும்.

உதாரணத்திற்கு, கோவிட் தடுப்பூசி குறித்த தவறான செய்திகளைப் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்கள். நல்ல அணுகுமுறை, ஏனெனில் தடுப்பூசி குறித்து தவறான, எதிர்மறை கருத்துக்கள் ஏராளம். இவை பொது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் தன்மை கொண்டவை, கண்டிக்கத்தக்கவை. இவ்வாறு பொது மக்களைக் குழப்புவோரின் மீது நிச்சயமாகச் சட்ட நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும்.

ஆனால், ஒரு சில தலைவர்கள் இந்தக் கோவிட்-19 இறைவனால் தரப்பட்டது, இறைவன் நம்மைச் சோதிக்கிறான் என்பன போன்ற கருத்தும் மக்களைத் தவறான சிந்தைக்குக் கொண்டு செல்லும் என்பதை அரசு உணர மறுப்பது ஏன்? இப்படி தவறான கருத்தை வெளியிடும் தலைவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள தயங்குவது, மறுப்பது பதவியைத் தற்காத்துக் கொள்ள நினைப்போரின் குறுகிய மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு நியாயமானதாகவே தென்படுகிறது அல்லவா?

மக்களைச் சோதிக்கும் பொருட்டு இறைவன் கோவிட்-19 அனுப்பினான் என்றால் கடுமையான போர்கள் நடத்தப்பட்டு மனித அழிவை ஏற்படுத்தினவே, அவையும் இறைவன் விரும்பியச் செயலா? மனிதனைச் சோதித்தானா இறைவன்?

போரில் தோல்வி கண்ட நாடு வெற்றி பெற்ற நாடுகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். இறைவனின் சோதனை என்ற காரணத்தைக் காட்டி இழப்பீடு வேண்டாமென மக்களைக் குழப்பும், பலவிதமான காரணங்களை உரைக்கும் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? இன்று நாட்டில் வாகன விபத்து நிகழாத நாளே இல்லை! விபத்தைக் கூட இறைவன் மீது பழிபோடும் தலைவர்கள் விபத்தில் காயமுற்றோர் அல்லது மரணமுற்றோரின் வருவாயில் நம்பி வாழ்வோர் இறைவன் சோதிக்கின்றான் என்ற எண்ணத்தோடு இழப்பீடு கோராமல் இருப்பார்களா? ஏன் இதையும் இறைவனின் சோதனை ரகத்தில் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா? இதை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் கருத்துரைப்போரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அரசு என்ன செய்ய நினைக்கிறது?

கோவிட்-19 பெருந்தொற்று விளைவுகளுக்கும், விளைவித்துக் கொண்டிருக்கும் கொடுமைகள், இழப்புகள் ஏராளம். இவற்றில் வறுமையோடு வாழ்வோரின் நிலை படுமோசமாகிவிட்டது. கை ஏந்துகிறார்கள்! அவற்றையும் சமயக் கண்களோடு பார்ப்போர் எந்த உலகத்தில் வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை. தற்கொலையும் பெருகி வருகிறது.

இவையாவும் இறைவனின் சோதனை பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாமா? கோவிட்-19 மனிதனின் தவறால், கவனக்குறைவால் ஏற்பட்டதா என்ற கேள்விக்குப் பதில் தேடி ஆய்வு நடந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், இது இறைவனின் சோதனை என்கின்ற கருத்து உண்மை நிலவரத்தை உணராதவர்களின் நிலை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் பல கொடுமையான நிகழ்வுகள் நம்மை நெருடுவதைப் புரியாதவர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். அதை அரசு உணர வேண்டும். முறையே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களை மட்டும் கண்டித்தால் போதாது! சட்டம் எல்லாருக்கும் பொதுவானது. தவறான கருத்துகளைப் பரப்புவோர் எவராக இருந்தாலும் அதைத் தடுக்க வேண்டும், தண்டிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தொடர் மக்களின் தேவைகளை, துயர்களைப் புரிந்துகொண்டு செயல்படும் என்று நம்பும்போது மக்களை ஏமாற்றும் வகையில், மயக்கும் வகையில் பேசுவோரைக் கண்டிக்க, தண்டிக்கத் தயங்காத அரசாகத் திகழ்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புவோமாக!