இராமாயண பாலகண்டத்தில் அற்புதமான ஒரு காட்சி. மாமுனிவர் விசுவாமித்திரர் தசரத மன்னனைக் காணுவான் வேண்டி பின்னவனின் அரண்மனைக்குச் செல்கிறார். விசுவாமித்திரரின் வருகையை ஏவலாளியிடம் இருந்து அறிந்த தசரதன் உடனடியாக மாமுனிவரை வரவேற்கச் சென்று அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ததும், விசுவாமித்திரர் திருப்தியடைந்து, “அயோத்திய மக்களின் நல்வாழ்வு, நாட்டு வளம்” போன்றவற்றைப் பற்றிக் கேட்டறிந்து மகிழ்ந்தார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை ஒரு சாதாரண காட்சி என்று சொல்லலாம். உண்மைதான். ஆனால், அதில் பொதிந்திருக்கும் அர்த்தத்தைப் புரிந்து கொள்வது நல்லது.
தசரதனைக் காண வந்த விசுவாமித்திரரின் நோக்கமே வேறு; அது, இராம, இலட்சுமணன் இருவரையும் தம்மோடு அனுப்பும்படி கோர வந்தவர்; மக்களின் நலன், நாட்டு வளத்தைப் பற்றிக் கேட்டறிகிறார் என்றால், அவை இரண்டுமே மிகவும் முக்கியமானவை என்பதை உணர்த்துகிறது அல்லவா? நாட்டின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருப்போர் அவற்றில் மிகுந்த கவனம் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தப்படுவதைத் தானே இது சுட்டுகிறது. இவற்றோடு விசுவாமித்திரர் நின்றுவிடவில்லை. நாட்டைக் குறித்த மற்றும் பல தகவல்களைக் கேட்டறிந்து திருப்தி கொள்கிறார்.
இந்தக் காட்சியை மனத்தில் வடிவமைத்துப் பார்த்தால் அரச நிர்வாகத்தை ஏற்றிருப்போர் அவர்கள் மன்னர்கள் அல்லது மக்களாட்சி அரசியல் மரபுப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். எவராக இருந்தாலும் நாட்டுக்கும், மக்களுக்கும் அவர்கள் கொண்டிருக்கும் கடமை உணர்வு வித்தியாசமானது அல்ல, ஒரே தரத்தைக் கொண்டது. நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இத்தகைய நல்ல கடமை உணர்வுகளை இன்றைய அரசியல் மேதாவிகளிடம் காண முடிகிறதா? மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டியவர்கள் மக்கள்தான். அரசியல் மேதாவிகளின் நலனைத் தற்காக்க வேண்டும் என்ற கேவலமான நிலை ஏற்பட்டிருப்பதை உணராது கிணற்றில் கிடக்கும் பாறையைப் போல் இருப்பது யார் குற்றம்?
விசுவாமித்திரரைப் போல் வெளியிலிருந்து வந்து அரசாளும் பொறுப்பேற்றவர்களுக்கு, மக்களுக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும் என உணர்த்த வேண்டுமா அல்லது மக்களே அரசுக்கு நினைவூட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அல்லது மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற, மாநிலச் சட்டமன்ற மற்றும் ஏனைய சமுதாய அமைப்புகளில் பொறுப்பேற்றிருக்கும் நபர்களின் பொறுப்பு என்பதில் என்ன தப்பு?
இந்து தர்மப்படி இப்பொழுது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. கலியுகத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் கிருஷ்ண பரமாத்மா சொன்னதைக் கூர்ந்து கவனிக்கும்போது அதில் புதைந்து கிடக்கும் எச்சரிக்கைகளை அறிந்து கொள்ளலாம். அவற்றில் முக்கியமானது ஒன்றைக் கவனிப்போம். கிருஷ்ண பரமாத்மாவின் சொல்படி கலியுகத்தில் நன்னெறி, நேர்மை, நியாயம் போன்ற குணங்களைக் கொண்டவர்கள் இருக்க மாட்டார்கள்; மக்கள் நேர்மையற்ற, ஒழுக்கங்கெட்ட முறையில் வாழ்வார்கள்.
ஊழல் வழியாக வாழ்க்கையை நடத்திச் செல்வர். விரைந்து பரவி மக்களைக் கொல்லும் தரம் கொண்ட நோய்; அறநெறிகளை மறந்தவர்கள் அல்லது அறியாதவர்கள், அவற்றின் தனிச் சிறப்பை உணராதவர்கள், மக்கள் சில்லறைக் காரணங்களுக்காகச் சண்டையிடுவர் போன்ற எதிர்மறை பண்புகள் மலிந்திருக்கும். கிருஷ்ண பரமாத்மா அளித்த கலியுக விளக்கத்தில் இவை அடங்கும்.
இன்று நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் எப்படிப்பட்ட அரசியல் வாழ்வைக் காண்கிறோம்? கிருஷ்ண பரமாத்மா தெளிவுபடுத்திய காரணங்களை ஒதுக்கும் அல்லது தவிர்க்கும் தரத்தைக் காண முடிகிறதா? இல்லை! நேர்மையை மறந்த, நீதியைத் துறந்த, ஊழலைப் பேணும் அரச நிர்வாகிகள் அன்றோ எங்கும் பரவி காணப்படுகிறார்கள்; அரசியல் அதிகாரத்தைத் தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில் நம்மைச் சிறிது சிறிதாக வருத்துவது, கொல்வது என்ன? கோவிட்-19 என்கின்ற கடும் நோய். இதன் தாக்கம் கொடுமையாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறது. இது முதல் தடவை அல்லவே. இன்றைய பொருளாதாரக் குழப்பம் புதுமையானது என்று நினைப்பது தவறு! அதே சமயத்தில், இப்படிப்பட்ட குழப்பங்கள் அடிக்கடி ஏற்படாவிட்டாலும் ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் எப்பொழுதுமே இருந்திருக்கின்றனவே.
2009-2011ஆம் ஆண்டுகளில் கூட பெருத்த பொருளாதாரக் குழப்பத்தை உலகம் சந்திக்க நேரிட்டது. பல நாடுகள் பொருளாதாரப் பாதிப்பினால் அதன் சுமையைத் தாங்க முடியாமல் தவித்தன. உலகப் பொருளாதாரத்துக்கு மையமெனக் கருதப்பட்ட அமெரிக்கா கூட அந்தப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கத் திணறியது. இன்றும் திணறுகிறது.
அதே போன்ற நிலையைத்தான் நாம் இன்று காண்கிறோம். ஏறத்தாழ எல்லா தொழில் துறைகளும் பாதிப்புற்றிருப்பதைக் காணலாம். வேலை இல்லை! வேலை இருந்தும் செய்ய முடியாத நிலை! கைத்தொழில் இருக்கிறது. ஆனால், அதைப் பயன்படுத்த முடியாமல் தடுக்கிறது அரசின் கட்டளைகள். இப்படிப்பட்ட சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் சாதாரண மனிதனைத் தானே பாதிக்கிறது.
ஊழல் வழியாக, தவறான வழியில், சட்டத்துக்குப் புறம்பான வழியில் பொருள் ஈட்டியவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். அவர்கள் சுரண்டிய பணம் பல நூறாயிரம் கோடிக்கணக்கில் இருக்கிறது. இவையாவும் பறிமுதல் செய்ய முடியவில்லை. ஏனெனில், சட்ட முறைகளைக் காட்டி இழுக்கடிக்கிறார்கள். யார் இதற்கெல்லாம் காரணம்?
மக்கள் ஏமாறுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள்! இதுதான் உண்மையான நிலவரம் என்றால், மக்கள்தான் இத்தகைய அநீதிகளுக்கும், அநியாயங்களுக்கும் காரணம்! ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ் ஏமாற்றும் அரசியல் நடத்தப்படுகிறது என்பது பட்டவர்த்தனமாகப் புலப்பட்டப் பின்பும் ஏமாற்றுக்காரர்களை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம்? ஜனநாயகம் மக்களின் உரிமையை, நலனைக் காக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
ஆனால், மக்கள் தங்கள் உரிமையை இழந்து, சக்தியற்று நிர்வாணமாக நிற்கிறார்கள். அவர்களின் வேதனைக்குரல் கேட்கவில்லை. கேட்காதபடி அராஜக அரசு செயல்படுவது இயல்பாகிவிட்டது. “மக்கள் குரலே, மகேசன் குரல்” என்ற சத்தியவாக்கு அழிக்கப்பட்டு அதிகாரத்தில் இருப்போரின் வாக்கே இறைவனின் வாக்கு என்ற அவலநிலை ஏற்பட்டிருப்பதை தெரியாத மக்கள், தூங்கும் மக்களை எப்படி உசுப்புவது?
அளவற்ற, அத்துமீறிய ஊழல், சட்டவிரோதச் செயல்கள், மனித நேயத்தைத் துச்சமென நினைத்துச் செயல்பட்ட ஜனநாயக போலித் தலைவர்கள், மன்னர்கள் கொடிகட்டி ஆண்ட காலம். துனிஷியாவின் சாதாரண குடிமகன், இருபத்தாறு வயது இளைஞனான முகம்மது புஆசிஸ் தமக்கு நேர்ந்த அநீதியை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு 2010ஆம் ஆண்டு டிசம்பர் பதினேழாம் நாள் தீக்குளித்துக் கொண்டார்.
4.1.2011ஆம் தேதி தாமே ஏற்படுத்திக் கொண்ட காயங்களுக்கு இரையாகி விடுகிறார். இந்தச் சம்பவம் துனிஷியாவின் ஆயுட்கால சர்வதிகார அதிபரை நாட்டை விட்டே துரத்தியது. சினங்கொண்ட மக்கள் அராஜக வெறியர்கள் மீது வெறுப்பு கொண்டனர். ஆட்சி மாற்றத்திற்கான புரட்சியில் இறங்கினர்.
இந்த 2011ஆம் ஆண்டு புரட்சி, 1848ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் நடந்த புரட்சியைப் போல் அமைந்திருந்தது. காட்டுத் தீ போல் எங்கும் பரவத் தொடங்கி அரேபிய வசந்தம் என்ற அடையாளத்தைப் பெற்றது. அவர்கள் எழுப்பிய அஷ்-ஷாப் யூரிது இஸ்கட் அன்-நிஸாம் – ஆட்சியை மக்கள் இறக்குவர் என்ற சுலோகம் எங்கும் பரவியது. துனிஷியாவின் அண்டை நாடுகளிலும் அது பரவி ஆட்சி மாற்றத்திற்குக் காரணியாயிற்று. சர்வதிகார ஆட்சிகள் கவிழ்ந்தன. புஆசிஸின் தீக்குளிப்பைப் பற்றிப் பலவிதமான தகவல்கள், கதைகள் வெளிவந்தன.
உண்மையைத் திரித்துக் கூறி புரட்சியை ஏற்படுத்தியதாகக் கூட சொல்லப்படுகிறது. இது உண்மையானால் உண்மையை மறைப்பதில், திரித்துக் கூறுவதில் கைதேர்ந்தவர்கள் அரசியல் மேதாவிகள் என்பது நிரூபணமாகிவிடுகிறது. ஆனால், தீக்குச்சி ஒன்று மட்டும் பெரும் புரட்சிக்கு வித்திடும் என்பதை இளைஞன் புஆசிஸின் மரணம் உணர்த்துவதைப் புறக்கணிக்க முடியாதே.
அரேபிய வசந்தம் இந்த நாட்டில் பரவக்கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்தலாம்; அது போதுமா? போதாது! அரபு தலைவர்கள் இழைத்த கொடுமைகளைத் தவிர்க்க வேண்டும். மக்களை மக்களாக நினைத்து அவர்களின் நியாயமான தேவைகளுக்கு வழிகாட்ட வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஊழல் வாழ்வு, ஊழல் அரசியல் போன்றவை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.
இவற்றை விடுத்து, அரச அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் பதவிகளை, அந்தஸ்தை, சலுகைகளை மட்டும் தற்காத்துக் கொள்வதில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்துவார்களேயானால் மக்கள் அவர்களை நிச்சயமாகக் கீழே இறக்கிவிடுவார்கள்.
நாட்டு நலனில், மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிய அரசு தமது அதிகாரத்தைத் தற்காத்துக் கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தினால் அது ஆபத்தான அணுகுமுறையாகும். மக்கள் எப்பொழுதும் தூக்க நிலையிலேயே இருப்பார்கள் என்ற எண்ணம் தவறானது என்பதை அரபு நாடுகளில் நிகழ்ந்த புரட்சி உணர்த்துகிறது. விசுவாமித்திரர் காட்டிய பொறுப்புணர்வு எல்லா அரசியல் மேதாவிகளுக்கும் தேவை. அது எக்காலத்துக்கும் பொருந்தும்.