இராகவன் கருப்பையா – ஜூலை 26ஆம் தேதியிலிருந்து 5 நாள்களுக்கு நாடாளுமன்றம் கூடும் என அரசாங்கம் அறிவித்த அன்றே, நடக்கவிருக்கும் இலட்சணத்தை கணித்திருப்பார்கள், அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட நாட்டு மக்கள்.
தற்போது உள்ள 220 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் தரங்கெட்ட போக்கை அறிந்து வைத்திருக்கும் பொது மக்கள் அந்த 5 நாள் நாடாளுமன்ற நடப்புகளில் ஏமாற்றம் அடைந்திருக்கமாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் பசி பட்டினியால் மட்டுமின்றிக் கரை புரண்டோடும் நோய்த் தொற்றின் கொடுமையிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மரண ஓலங்களினாலும் பரிதவிக்கும் மக்களின் அவலங்களுக்கு மத்தியில் இவர்களுடைய சுயநல அரசியல் ஆர்ப்பரிப்பு எதிர்பார்த்த ஒன்றுதான் என்றால் அது மிகையில்லை.
நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் 3 கூறுகளாகப் பிரிந்து கிடக்கின்றன. அதாவது அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார மந்தநிலை மற்றும் நோய்த் தொற்று.
இம்மூன்று விவகாரங்களில் எதற்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனப் பள்ளி மாணவனைக் கேட்டால் கூடச் சட்டெனச் சொல்லிவிடுவான் முதலில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தி அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று.
ஆனால் தற்போது வரலாறு காணாத அளவுக்கு மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ள நமது அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநல அரசியலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இதர இரு பிரச்சினைகளையும் புறம் தள்ளிப் பரியும் அட்டகாசங்கள் வரம்பு மீறிப் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்.
நாடாளுமன்றத்தில் கொஞ்ச நேரம் தலையைக்காட்டி விட்டு மாயமாய் மறைந்த பிரதமர் மஹியாடினை எங்கே காணோம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் தேடத் தொடங்கிய மறுகணமே கூச்சலும் குழப்பமும் அவையை ஆக்கிரமித்தது.
மஹியாடினின் அரசுக்கான ஆதரவை அம்னோ மீட்டுக் கொண்டுள்ளது என அதன் தலைவர் அஹ்மட் ஸாஹிட் அனுதினமும் புலம்பித் திரியும் போதிலும் நாடாளுமன்ற அமர்வின் போது அரசாங்கத்திற்கு ஆதவான இருக்கைகளிலிருந்து அக்கட்சியின் உறுப்பினர்கள் நகர்ந்ததாகத் தெரியவில்லை. குவா மூசாங் உறுப்பினர் தெங்கு ரஸாலி மட்டுமே சுயேட்சையாக அமர கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே சமூக வலைதளங்களில் வீர வசனம் பேசும் அம்னோ உறுப்பினர்கள் உள்ளே வந்தவுடன் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என மூவார் உறுப்பினர் சைட் சாடி எழுப்பிய வினா நியாயமான ஒன்றுதான்.
‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ என்ற நிலைப்பாட்டில் அம்னோவின் இருத்தலைப் போக்கைத்தான் இது புலப்படுத்துகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க அவசரகாலச் சட்டம் ஜூலை 21ஆம் தேதியே மீட்டுக் கொள்ளப்பட்டுவிட்டது எனச் சட்டத்துறை அமைச்சர் செய்த அறிவிப்பு அவையில் குழப்பத்தை மேலும் அதிகரித்தது.
இதன் தொடர்பான வாக்குவாதங்கள் காரசாரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் தான் அச்சட்டத்தை நீக்கப் பேரரசர் அனுமதி வழங்கவில்லை என அரண்மனையிலிருந்து அறிக்கை வெளியானது.
எல்லாமே சட்டவிதிகளின்படிதான் நடந்தது எனப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையானது அரண்மனையின் அறிக்கைக்குச் சவாலாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனினும் வரலாறு காணாத சிரமத்தையும் துன்பத்தையும் சுமந்துகொண்டு அல்லோகலப்படும் மக்களுக்கு இவற்றையெல்லாம் பற்றிச் சிந்திக்க அவகாசம் இல்லை.
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவது பற்றிப் பேசமாட்டார்களா, அன்றாடம் அதிகரித்துவரும் மரணங்களைக் குறைப்பது பற்றிப் பேசமாட்டார்களா என ஏங்கித் தவித்த மக்களின் ஏமாற்றத்திற்கும் கோபத்திற்கும் அளவில்லை என்பதுதான் உண்மை.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவின் வூஹான் நகரில் நிகழ்ந்ததைப் போல ஒரு சிலர் ஆங்காங்கே தெருவில் இறந்து கிடக்கும் அவலங்களைக் கூட நம்மால் அவ்வப்போது காணமுடிகிறது.
இவ்வளவுக்கும் மத்தியில் நாட்டு மக்களின் நலனைக் கிஞ்சிற்றும் கவனத்தில் கொள்ளாமல் தங்களுடைய பதவி சுகபோகங்களே முக்கியம் என்ற நிலைப்பாட்டில் ஒவ்வொரு நகர்வுகளையும் மேற்கொண்டுவரும் நடப்பு அரசாங்கத்தின் அரசியல்வாதிகளை யார்தான் மன்னிப்பார்கள்?
நாடாளுமன்ற வளாகத்தில் நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை பிற்பகலில் 3 முறை ஒத்திவைக்கப்பட்ட அமர்வு பிறகு திங்கள் கிழமைக்குத் தள்ளப்பட்டது.
அதுவும் இப்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதானது ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்ற நிலைக்கு வந்துவிட்டது.
இனி எப்போது நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என யாருக்குமே தெரியாத நிலையில், ‘அப்பாடா, இம்முறையும் தலைத் தப்பியது’ எனும் களிப்பில் மஹியாடின் இருப்பார்.
இதற்கிடையே இஸ்லாமியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள இந்த அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குத்தான் பக்காத்தான் முயற்சிக்கின்றது எனப் பாஸ் கட்சித் தலைவர் ஹாடி குற்றஞ்சாட்டுகிறார்.
‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பதை’ போல, பிரதமர் அலுவலகத்திற்கு அரண்மனை அனுப்பிய அறிக்கை எதிர்க்கட்சியினர் வசம் எப்படிச் சென்றது என அக்கட்சியின் இளைஞர் பிரிவினர் காவல் துறையில் புகார் செய்துள்ளனர்.
ஆக நீண்ட நாள்களுக்குப் பிறகு கூடிய நாடாளுமன்றத்தின் மாண்பைச் சீர்குலைத்த இவர்கள் அதனை ஒரு நாடக மேடையாக மட்டுமின்றித் தெருக்கூத்துக் கொட்டகையாகவும் உருமாற்றம் செய்துவிட்டனர் என்பதே ஒரு வேதனையான விசயம்.