வணிக முன்னேற்றம் தொடர்பான உத்தியாக தொடங்கி, இன்று எல்லா வகையான முன்னேற்றத்திற்கும் தோதான ஓர் உத்தியாக, ஒரு பகுத்தாய்வுக் கருவியாக, ஒரு பகுப்பாய்வுச் சிந்தனை ஊக்கியாக மிளிர்கிறது நீல பெருங்கடல் உத்தி அல்லது வியூகம் (Blue Ocean Strategy).
இயக்கம் நடத்துவோர், சொந்தத் தொழில் புரிவோர், கல்விக் கூடங்களை நடத்துவோர், புகழ்பெறவும் பணம் சம்பாதிக்கவும் தங்களின் திட்டங்களை மறுபரிசீலனைச் செய்ய இந்த நீலப் பெருங்கடல் வியூகத்தை முன்னெடுக்கலாம்.
கடல் எப்படி பரந்து விரிந்து, நீலம் பொங்கக் காட்சியளிக்கின்றதோ, அதுபோல முன்னேறுவதற்கு நமது கண்முன் மாபெரும் வாய்ப்பு பரந்து விரிந்து கிடக்கிறது. நாம்தான் முட்டுச்சந்துக்குள் நம்மை முடக்கிக் கொண்டு, குறுகலான எண்ணங்களுடன் போட்டியில் ஈடுபட்டு முடங்கி விடுகிறோம் என்கிறது இந்த வியூகம்.
போட்டியிடும் வியூகத்தினால் நமது உழைப்பு, செல்வம், நேரம் கரைந்து விடுவதால் அதைச் செங்கடல் வியூகம் என்கிறோம். அதனால் குறைந்த பலனே கிடைக்கும்.
எந்தப் போட்டியும் இல்லாமல் இருக்கும் சூழலில், புதிதாகத் தொடங்கப்படும் ஒரு நிறுவனம் அல்லது இயக்கம் (pioneer) வாடிக்கையாளரின் ஆதரவைப் பெற்று வெற்றிபெறும்.
சீனி இல்லாத ஊரிலே இலுப்பைப்பூ சக்கரை என்பது போல, இந்தக் குறிப்பிட்டக் கடையோ, நிறுவனமோ, இயக்கமோ, பள்ளிக் கூடமோ, மருத்துவ மனையோ அமைந்திருக்கும் இடத்தில், போட்டிக்கு வேறு இல்லை என்றால் மக்கள் இவற்றை நாடிப் போவதைத் தவிர வேறு வழியில்லாமல் இருப்பர்.
புதிதாக வேறு ஒன்று தோன்றாமல் இருப்பதைத் தடுக்கவும் முடியாது. எனவே, ஒரே விடயத்தைப் பலர் செய்யும்போது, நமக்கான தனித்தன்மை இல்லாது போய்விடும் அல்லது குறைந்து விடும். எனவே, போட்டியைத் தவிர்த்து, புதிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதை வெகு சிலரே நன்கு புரிந்திருப்பர், அவர்களே நீடித்து நிலைத்த வெற்றியும் அடைகின்றனர்.
சினிமாத் தொழிலை ஓர் எடுத்துக் காட்டாகக் கொண்டால் போதும். எல்லோரும் சமூகப் படங்களையே எடுத்துவந்த சூழலில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கத்தக்க வகையில் திகிலும் நகைச்சுவையும் கலந்து காஞ்சனா திரைபடத்தை வெளியிட்டுப் பெட்டியைப் பணத்தால் நிறைத்த இராகவா லாரன்சை வியக்கத்தான் வேண்டும். உடனே, அதேச் சுவட்டில் (செல்நெறி – trend) வரிசையாகப் பேய்ப் படங்கள் வருவதும், அவை வந்தச் சுவடு தெரியாமல் காணாமல் போவதும் உண்டு.
எல்லோரும் கவிதை எழுதுகின்றனர், போட்டி வலுக்கிறது. கவிஞரிலே சிறந்த கவிஞராகப் புகழ்பெற யாரும் அதிகம் தொடாத பரப்பான குழந்தைகள் கவிஞராகத் தன்னை அடையாளப் படுத்தி, அந்தத் துறையில் கால் பதிப்பது ஒரு நீலப் பெருங்கடல் உத்தி.
எல்லோரும் மரபுக்கவிதை எழுதும்போது, சிலர் அதில் இருந்து மாறுபட்டு படிமக் கவிதை எழுதுவது ஒரு புதிய முனைப்பு. அவர்களுக்கான புதிய இரசிகத் தளங்களை உருவாக்கிக் கொள்ளுதல் அது.
எல்லோரும் பெரும்பான்மை சமூகத்தின் நேர்முறை அம்சங்களைப் புதினமாக எழுதும்போது, விளிம்பு நிலை மக்களின் குரலாக சிலர் தங்களைப் பாவித்துக் கொண்டு, அவர்களின் அன்றாட மொழி, வாழ்வியல் கூறுகளைக் கதையாக வடிப்பதைப் பார்க்கின்றோம்.
இருக்கின்ற மரபில் இருந்து நழுவி புதியதைப் படைக்க விரும்பும் முயற்சி இது. இவை உண்மையில் நீலப் பெருங்கடல் உத்தியா, இல்லையா என்று ஆய்ந்தால் புரிந்துவிடும்.
– முனைவர் இரா. குமரன் வேலு