இந்த நீல பெருங்கடல் வியூகம் (Blue Ocean Strategy), யாரோ ஒரு சில கல்விமான்களின் ஏரணச் சிந்தனையில் உதித்த உத்தி அல்ல. இது கல்விக் கோட்பாடும் (academic theory) அல்ல. இது நடைமுறையில், பயன்பாட்டில் உள்ள உத்திகளின் தொகுப்பு.
காலங்காலமாக (100 ஆண்டுக்கும் மேல்) நிலைத்து நிற்கும் பல்வேறு வணிக நிறுவனங்களின் வெற்றிக்குப் பின்னால் வீற்றிருந்த வியூகங்கள் எல்லாம் துல்லிய ஆய்வின் வழி கண்டறியப்பட்டு, பின் அவை தொகுக்கப்பட்டு நூலாக்கம் கண்டது.
முன்பே சொன்னது போல, இது ஒரு வியூகம். நடைமுறையில் உள்ள வெற்றிப்பெற்றவர்கள் பயன்படுத்தும் வியூகம். வெற்றிப்பெற்ற வணிக நிறுவனங்கள், இயக்கங்கள் எல்லாம் பயன்படுத்தும் பொதுவான உத்திகளைத் தொகுத்து, பொதுக் கலைச்சொற்களால் கொஞ்சம் அழகுப் படுத்தித் தந்திருக்கின்றனர் சான் கிம் எனும் வணிக நிருவாகவியல் ஆய்வாளரும் அவருடைய உதவியாளர் ரெனியும். இருவருமே வணிகவியல் கல்வியில் வல்லுனர்கள்.
அண்மையில், கோறனி தொற்றின் காரணமாக வேலையிழந்த நண்பர் ஒருவர் துரித உணவு விற்பனையைத் தொடங்கினார். தொடங்கிய சில காலம் தொழில் சிறப்பாக நடந்தது. அதன்பின் தொய்வுக் கண்டது. பலரும் இதே தொழிலைத் தொடங்க, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. பலரும் செய்கின்ற தொழிலில் போட்டி இல்லாமல் இருக்காது.
ஆனால், போட்டியிலும் வாடிக்கையாளரை இழந்துவிடாமல் இருக்க நீலப் பெருங்கடல் வியூகம் நல்ல பல ஆலோசனைகளை வழங்குகிறது. இந்த உத்திகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம், ஆனால் எந்த மாற்றமும் மனித முயற்சி இன்றி நடந்து விடாது.
இந்த வியூகம் கல்வி நிறுவனங்களின் வெற்றிக்கும் துணை புரியும் என்பதால் இதனை அறிந்து கொள்ளுதல் நல்லது. குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க அல்லது தேசியப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை ஈர்க்க மதிப்புக் கூட்டப்பட்ட (Value Added) வாய்ப்புகளைத் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் வழங்குவதைப் பற்றி சிந்திக்கலாம்.
தேசியப் பள்ளியைத் தேர்தெடுக்கும் வாடிக்கையாளர்களின் தன்மைகள் அல்லது தேவைகள் தெரியாமல் அவர்களை ஈர்க்க முடியாது அல்லவா?
எந்த உணர்ச்சி சிலரைத் தமிழ்ப்பள்ளி நோக்கி இழுக்கிறதோ, அதே உணர்ச்சி ஏன் மற்றவரை இழுக்க மாட்டேன் என்கிறது?
இவற்றை எல்லாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
அடிப்படையில் சில கலைச்சொற்களை முதலில் புரிந்து கொள்வோம். இவை அடிப்படையானவை. இவை நீலப் பெருங்கடல் உத்தியை அறிந்துகொள்ள உதவும்.
- முன்னோடி (Pioneer)
- மதிப்பு புத்தாக்கம் (Value Innovation)
- குறைந்த செலவு, உயர்ந்த தாக்கம் (Low Cost, High Impact)
- வாடிக்கையாளர் விரும்பும் ஆறு அனுபவங்கள்
- வாடிக்கையாளரின் அனுபவச் சுழற்சி (BEC)
- வாடிக்கையாளர் வகைகள்
- மதிப்பு புத்தாக்கம் செய்ய 6 வழிகள்
- குறை, கூட்டு, விலக்கு, ஆக்கு (ERRC)
- புதியத் தொக்குவரி (Tagline)
1. முன்னோடி (Pioneer)
தொடக்கத்தில், ஒரு புது தொழிலைத் தொடங்கும் ஒருவர், நல்ல பணம் பார்த்துவிட்டு, பின் பலரும் போட்டிக்கு வந்து போட்டி அதிகரிக்கும்போது அந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறு ஒரு புது தொழிக்கு மாறிவிடுவது சிலரின் உத்தி. ஆயினும் அவர்களே அத்தொழிலின் முன்னோடி. வரலாற்றில் அவர்களின் பெயர் நிலைத்து நிற்கும்.
புதிதாக ஒன்று தொடங்குவதாலே அது மக்களின் வரவேற்பைப் பெற்றுவிடும் என்று சொல்வதற்கில்லை. மக்களின் தேவையை அது நிறைவு செய்ய வேண்டும். அவர்களின் இடர்களை அது குறைக்க வேண்டும். அவர்களின் சுமையைக் குறைக்க வேண்டும்.
எந்த வேலையையும் எளிதாகவும் விரைவாகவும் செய்து முடிக்க அது உதவ வேண்டும். புதிது எல்லாம் புத்தாக்கம் ஆகிவிடாது. புத்தாக்கம் என்றாலே அது முன்பைவிடவும் பலமடங்கு நன்மை அளிக்கிறது எனப் பொருள்படும். புதிது வேறு புத்தாக்கம் வேறு.
பலபேர் புதிதாக படைக்கிறேன் என்று கிளம்புகின்றனர். ஆனால் அந்த புதியது மக்களின் வரவேற்பைப் பெறுவதில்லை. காரணம் மக்களின் தேவையையும் எற்றிப்பார்ப்பையும் அது நிறைவு செய்வதில்லை.
கல்வியில் முன்னோடி
மலேசியத் தமிழ்க்கல்வி, உலகில் முதன்முதலில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் பரிந்துரைத்த 17 நீடுநிலைக்கும் வளர்ச்சி இலக்குகளை (SDG எனப்படும் Sustainable Development Goals) பாடத் திட்டத்தில் அதிரடியாக இணைத்து உலகப் புகழ் பெற்ற தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சங்கா சின்னையா அவர்கள்.
இவர் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர். இவரின் அரிய முயற்சியைப் பார்த்துவிட்டு, மேனாள் கல்வியமைச்சர் இவரின் பள்ளிக்கு 20,000 வெள்ளி நன்கொடையாகத் தந்தார். குழந்தைகள் குதூகலமாகக் கற்கும் வழிதனை இவர் அறிமுகம் செய்தார்.
எல்லோரும் இருமொழித் திட்டம் (டி.எல்.பி.) இருந்தால்தான் மாணவர் எண்ணிக்கை தமிழ்ப்பள்ளியில் அதிகரிக்கும் என்றார்கள். இவர் அதை முறியடித்து, தமிழ்வழிக் கல்வியிலே மாணவர் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டினார். பெற்றோர்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும் கல்விமுறையை அறிமுகம் செய்தார். இன்று கல்வி உலகில் நாடறிந்த தலைமை ஆசிரியர் அவர். தமிழ்வழி மாணவர்களின் ஆன்மீகத் தேவையையும் நிறைவு செய்கிறார். இவரின் பள்ளியில் ஆய்வை மேற்கொண்டு, அதைக் கட்டுரையாக உலகத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மாநாட்டில் படைத்தேன். பல்லுயிர் பகுத்துண்டு வாழுதல், இயற்கையை நேசித்தல், காத்தல் எனும் பழந்தமிரின் கோட்பாட்டை கடைபிடித்தும் வருகின்றார்.
இவரைப் போல தமிழ்ப்பள்ளிகள் உலகப் புகழ்பெற முன்னோடித் திட்டங்கள் தேவை. அவை தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தும், தமிழ்ப்பள்ளிகளுக்கு வாடிக்கையாளரை ஈர்க்கும்.
- முனைவர் இரா. குமரன் வேலு