நீல பெருங்கடல் வியூகம் – பாகம் 3

நீங்கள் முன்னோடியா பின்னோடியா? ~ முனைவர் இரா. குமரன் வேலு

முதலில் முன்னோடி என்பதற்கும் பின்னோடி என்பதற்கும் விளக்கம் காண்போம்.

ஒரு புதிய நடைமுறை, புதிய வழிமுறை, புதிய உத்தி, புத்தாக்க கண்டுபிடிப்பு, புதிய கருவி என பலவகை ஏடல்களை முதன் முதலில் நீங்கள்தான் அறிமுகப்படுத்தினீர் என்றால் நீங்கள் ஒரு முன்னோடி.

உங்களைப் பார்த்து உங்கள் கண்டுபிடிப்பை அல்லது உத்தியைப் பிறர் அச்சுப்பிசகாமல் அப்படியே பயன்படுத்தினால் அவர்கள் உங்கள் பின்னோடி. நீங்கள் செய்தததில் சில மாற்றங்கள் செய்து, அதை மற்றவர்களிடம் பயன்படுத்த கொடுப்பவர்கள் இடையோடிகள்.

வாடிக்கையாளர் 

ஒரு நிறுவனம் தொழில் (விற்பனை, உற்பத்தி) செய்தாலும், பொதுச் சேவை வழங்கினாலும் வாடிக்கையாளர்கள் இன்றி அந்த நிறுவனத்திற்கு இலாபமோ நற்பெயரோ கிடைக்காது.

இங்கே வாடிக்கையாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம். நம்முடைய நிறுவனம் உற்பத்தி செய்து விற்கும் பொருளை நேரடியாக வாங்கிப் பயன்படுத்துகின்றவர்கள் அல்லது பிறர் வாங்கித் தர அதைப் பயன்படுத்துகின்றவர்கள் அல்லது நம்முடைய நிறுவனம் வழங்கும் சேவையை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெறுகின்றவர்கள்.

தமிழ்ப் பள்ளிக்கூடங்களை நிறுவனங்கள் என்று எண்ணிக்கொள்ளுங்கள். தமிழ்ப்பள்ளிகளில் கல்விச் சேவை வழங்கப்படுகிறது. இங்கே வாடிக்கையாளர்கள் என்பவர்கள் பெற்றோர்களும் மாணவர்களும்.

இவர்கள் தமிழ்ப்பள்ளிகளை நாடாவிட்டால் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும்.

தமிழ்ப்பள்ளியை விரும்புகின்றவர்களை ‘வாடிக்கையாளர்’ என்றும், விரும்பாதவர்களை ‘வாடிக்கையாளரல்லர்’ என்போம். இன்றைய நிலையில் இந்திய மாணவர்கள் 52 % தமிழ்ப்பள்ளியிலும் 48 % தேசியப்பள்ளி மற்றும் சீனப்பள்ளியிலும் படிக்கின்றனர். இந்த 48 விழுக்காட்டினரைத் தமிழ்ப்பள்ளி பக்கம் திருப்ப நாம் கையாள போகும் உத்திகள் எவை?

அதாவது, தமிழ்ப்பள்ளிக்கான வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க ‘வாடிக்கையாளரல்லர்’ எனப்படுபவர்களை நாம் கவரவேண்டும். இங்கே ‘48% இந்தியர்கள் வாடிக்கையாளரல்லர்’ என்பதையும் தாண்டி, சீன, மலாய், இன்னபிற இனங்களையும் ‘வாடிக்கையாளல்லர்’ எனப் பார்க்க வேண்டும். அப்படியென்றால், நமக்கான சாத்தியமான (potential customers) வாடிக்கையாளர்கள் நீல கடல்போல் விரிந்து கிடக்கின்றனர் என்று பொருள்.

நம் நாட்டு கல்விச் சட்டத்தின்படி, யார் வேண்டுமானலும் எந்த மொழி தொடக்கப்பள்ளியிலும் படிக்கலாம். தமிழ்ப்பள்ளியெனச் சான்றளிக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளிக்கு, எந்த இன மாணவரும் தமிழ்மொழியைத் தெரிந்துகொள்ள வந்து தமிழ்ப்பள்ளியில் படிக்கலாம்.

சிரம்பான் நகரிலே உள்ள சீனப்பள்ளி ஒன்றில் 50% மாணவர்கள் மலாய்க்கார மாணவர்கள். இதை 2016-இல், நான் நேரிடையாகச் சென்று கண்டிருக்கிறேன். கேமரன் மலையில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியில், அதிகமான ‘ஒராங் அசுலி’ பழங்குடி (பூர்வக்குடி) மக்களின் குழந்தைகள் படிக்கின்றனர் (இப்பொழுது அப்பள்ளி தேசியப் பள்ளியாக உருமாற்றம் கண்டுவிட்டதா இல்லையா எனத் தெரியவில்லை).

வேற்று இனக் குழந்தைகள் படிப்பதாலே, ஒரு பள்ளி தன் அடையாளத்தை இழந்துவிடும் என்பதற்கில்லை. பிற இனத்தினரும் தமிழ்ப் படிப்பதால் அது தமிழுக்கான வளர்ச்சி என்று பார்க்கவேண்டும். இங்கே வேற்று மொழி பேசுகின்ற இனங்கள் நமக்கு தற்போது வாடிக்கையாளர் அல்லர். ஆயினும், அவர்களும் சாத்தியமான வாடிக்கையாளரே. தமிழ்ப்பள்ளிகளின் தொடர்வாழ்வுக்கு (sustainable survival) வாடிக்கையாளரல்லர் எனப்படுவோரை வாடிக்கையாளராக மாற்ற முயல்வதே சிறந்த உத்தி எனலாம்.

எனவே, எல்லாத் தொழிலுக்கும் சேவைக்கும் ‘வாடிக்கையாளர்’, ‘ வாடிக்கையாளரல்லர்’ என இருதரப்பினர் இருப்பர்.

வாடிக்கையாளர் அல்லாதவரை வாடிக்கையாளராக மாற்றும் உத்தியே நீல பெருங்கடல் வியூகம்.

அவ்வாறு மாற்றுதற்கு நாம் என்ன புதுமையை வாடிக்கையாளர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றவாறு வழங்குகின்றோம் என்பதுதான் திட்டமிடலின் முதல்பகுதி.

இங்குதான் வருகிறது ‘புத்தாக்க மதிப்பு’ (value innovation).

இந்த ‘value’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லுக்குள் நுழைவதற்கு முன்பு, ‘value’ என்றால் மதிப்புமிக்க, அதிகம் விரும்புகின்ற, விழுமியம் போன்று பெருமதிப்புமிக்க என்று பொருள் கொள்ளவேண்டும். எதை நாம் அதிக மதிப்போடு பார்க்கின்றோமோ அதை நாடி அடையவே விரும்புவோம்.

எனவே, புத்தாக்கம் ஒரு பொருளிலோ அல்லது சேவையிலோ செய்யும்பொழுது அது வாடிக்கையாளர் விரும்பும் ‘மதிப்புமிக்கதாய்’ மாறியிருக்கவேண்டும்.

இங்குதான் முன்னோடிகள் (முதன்முதலில் உருவாக்குகின்றவர்கள்) முந்திக் கொண்டு புத்தாக்கம் செய்கின்றனர். இவர்கள் பிறர் செய்யும்வரை காத்திருப்பதில்லை. தாங்களே முயன்று புத்தாக்கம் படைக்கின்றனர்.

ஏற்கனவே, சொன்னதுபோல ‘புதியது’ எல்லாம் புத்தாக்கம் அல்ல. புத்தாக்கம் வாடிக்கையாளரின் தேவையை நிறைவு செய்யும் வண்ணம் புதிய மதிப்பை ஏற்படுத்துகிறது. புதியது புத்தாக்கம் கொண்டிருக்கும் என்பது கட்டாயமில்லை.

ஆகவே, நீங்கள் பள்ளியிலோ, தொழிலிலோ உற்பத்திப் பொருளிலோ செய்திருக்கும் மாற்றங்கள், புத்தாக்க மதிப்பு உள்ளதா என்பதை ஆய்வுச் செய்யுங்கள். அப்படி இருந்தால் அது புதிய வாடிக்கையாளரை உங்கள் பக்கம் இழுக்கும். உங்களின் புகழ் அதிகரிக்கும். இதை நீங்கள் முதன்முதலில் செய்தால், நீங்கள் முன்னோடி (pioneer), உங்களைப் பார்த்து பிறர் ‘உங்களைபோல’ (காப்பியடித்தால்) செய்தால் அவர்கள் பின்னோடி. எல்லோரும் உங்களைப்போல செய்து கொண்டிருந்தால் அது போட்டி. எனவே, நீங்கள் வேறு ஒரு புத்தாக்கத்தைப் பற்றி சிந்தித்தல் நன்று.

அப்படி சிந்திக்கத் தொடங்கும்போது இப்பொழுது எந்த வகை புத்தாக்க மதிப்பை உங்கள் வாடிக்கையாளருக்கு உங்களின் உற்பத்திப் பொருள் அல்லது சேவை வழங்கிறது எனப் பாருங்கள் (as is strategy). போட்டி அதிகரித்து விட்டதால், எங்கெல்லாம் எதனை நீக்கலாம், குறைக்கலாம், கூட்டலாம், புதிதாக உருவாக்கலாம் எனச் சிந்தித்துத் திட்டமிட்டுப் பாருங்கள் (to be strategy).

அப்படி திட்டமிடும் போது நீங்கள் வழங்கும் ஒரு பொருள், கருவி, சேவை உங்களின் வாடிக்கையாளர் விரும்பும் ஆறுவகை பயன்பாட்டு சமனோடு பொருந்துகிறதா என்று ஆய்வு செய்யுங்கள்.

அ. உற்பத்தி ஆற்றல் (productivity)

பிறர் வழங்கும் சேவையை (பொருளைவிட) விட கூடுதலாகவும் விரைவாகவும் உங்களின் சேவை வாடிக்கையாளருக்குக் கிடைக்க வேண்டும்.

எ.கா. :- உங்கள் பள்ளியில் மலாய்மொழி, ஆங்கில மொழித் திறனை விரைவாகவும் தரத்தோடும் கைக்கொள்ளும் வகையில் கற்பிக்கும் திறன்பெற்ற ஆசிரியர்கள் இருக்கின்றனர். அதனால், உங்கள் பள்ளி மாணவர்கள் உள்நாட்டு அளவிலோ அனைத்துலக அளவிலோ தங்களின் படைப்பை ஆங்கிலத்தில் / மலாயில் வெளியிடுகின்றனர் என்றால் அது மாபெரும் மதிப்புமிக்க புத்தாக்கம். தேசியப் பள்ளியை விடவும் அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலம், மலாய், தமிழ் என மும்மொழியிலும் உலகப் புகழ் பெறுகின்ற செய்திகளே நீங்கள் வாடிக்கையாளருக்கு வழங்கும் உற்பத்தி ஆற்றல் (productivity).

ஆ. எளிமை (simplicity)

பருப்பொருள் அல்லது நுண்ணறிவு தொடர்பான இடர்கள் இல்லாமல் இருந்தால் செய்யும் வேலை எளிதாகலாம்.

எ.கா. :- ஓர் இயங்கலை விண்ணம் செய்து முடிப்பதற்குள் பல இன்னல்களை நாம் கடக்க வேண்டியிருக்கும். இணையம் வேண்டும், கமுக்க சொல் மறவாமல் வேண்டும், பதிவேற்றம் செய்ய ஆவணங்கள் வேண்டும் அதுவும் பி.டி.எஃப்.-இல் வேண்டும். இவையெல்லாம் இல்லாமல் ஒரு விரல் பதிவில் எல்லாம் சரிசெய்யப்பட்டால் அது எளிமை. மருத்துவமனைக்குப் போகாமலே வீட்டில் இருந்தே மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றால் அஃது எளிமை.

இ. வசதி (convenience)

அங்கிங்கு அலையாமல், எல்லாம் ஓரிடத்திலே பெறும்வண்ணம் வசதிகள் இருந்தால் அதை வாடிக்கையாளர்கள் விரும்புவர்.

ஈ. இடர் (Risk)

நேரச் செலவு, பணச் செலவு, வேலை, நம்பகத்தன்மை தொடர்பான இடர்களை வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை.

எ.கா. :- தமிழ்ப்பள்ளியில் படித்தால் ஆங்கிலம் பேசத்தெரியாது, அதனால் எதிர்காலத்தில் வேலை கிடைப்பதில் இடர் ஏற்படும் என எண்ணுவோர் கண்டிப்பாக தமிழ்ப்பள்ளிக்கு வாடிக்கையாளர் ஆக மாட்டார்கள்.

உ. மகிழ்வும் மதிப்பும் (fun and image)

ரோல்சு ராயிசு மகிழுந்து வைத்திருப்பது ஒரு மதிப்பாக, கெளரவமாகப் பார்க்கப்படுவதால் அதன் உரிமையாளருக்கு அதனால் மகிழ்வுண்டாகும்.

தமிழ்ப்பள்ளியில் படித்ததில் ஒரு மகிழ்ச்சி, அது ஒரு கெளரவத்தைச் சமுதாயத்தில் ஏற்படுத்தியிருக்கிறது எனும் பார்வை தமிழ்ப்பள்ளிகளை வாடிக்கையாளர்கள் தேடிவர உதவும்.

ஊ. நட்பான சுற்றுச்சூழல் (environmental friendliness)

சுற்றுச்சூழல் மேம்பாட்டை வலியுறுத்தும் அல்லது அதற்கு ஏது செய்யும் சூழலை வாடிக்கையாளர் விரும்புவர்.

எ.கா. :- நெகிழிக் கழிவுகளை உருவாக்கி தூய்மைக்கேட்டைப், போலிசுத்திரின் (polysytrene) பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல்.

பினாங்கு பாயன் லெப்பாசு தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திரு சங்கா இந்த முயற்சியின் முன்னோடி. இன்று அது தொடர்பான உரையாடல்கள் மாநாடுகள் என்றால் கூப்பிடுங்கள் சங்காவை எனும் அளவுக்கு உலகப் புகழ் பெற்றிருக்கின்றார்.

எனவே, நீங்கள் முன்னோடியாகத் திகழ்வதற்கு இந்த ஆறுவகை பயன்பாடு சமன்கள் உதவும். இப்பொழுது உங்கள் நிறுவனத்தில் நீங்கள் வழங்கும் அனைத்து வகை சேவை, உற்பத்திப் பொருள் குறித்து ஆய்வு செய்யுங்கள்.

அவை புத்தாக்க மதிப்பு உள்ளவையா? அவை வாடிக்கையாளர் விரும்புகின்ற தன்மையைக் கொண்டிருக்கின்றனவா?