இராகவன் கருப்பையா – பிரதமர் மஹியாடின் தனது பதவியைத் தொடர்ந்து தற்காத்துக் கொள்வதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தயாராய் உள்ளார் என்பதையே புலப்படுத்துகிறது வெள்ளிக்கிழமை (6.8.2021) மாலை அவர் செய்த அறிவிப்பு.
அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனக்கு ஆதரவளித்தால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனத் தொலைக்காட்சியில் அவர் செய்த அறிவிப்பானது எதிர்க்கட்சியினர் சொல்வதைப் போல ஒரு அதிகாரப்பூர்வ லஞ்சம்தான் என்பதில் ஐயமில்லை.
அவருடைய இந்நடவடிக்கையினால் பொது மக்கள் மேலும் சினமடைந்துள்ளனர் என்பதே உண்மை. நாட்டின் தற்போதைய அரசியல் நிலைத்தன்மை என்றும் இல்லாத அளவுக்கு ஆட்டங்கண்டுள்ளது.
அரசியல் தவளைகளின் சறுசறுப்பான நகர்வுகள், அரசாங்கத்தைப் பேரரசர் அண்மையில் கடிந்து கொண்டது, அரசு விவகாரத்தில் பேரரசர் தலையிடக்கூடாது என மஹியாடின் மறைமுகமாகச் சாடியது எல்லாமே வழக்கத்திற்கு மாறான ஒன்றுதான்.
தனது அண்மைய கால நடவடிக்கைகளின் வழி அரை நூற்றாண்டு ஜனநாயகப் பாரம்பரியத்தையும் கூட்டரசு அரசியலமைப்பையும் மஹியாடின் புரட்டிப் போட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
இத்தகைய குளறுபடிகள் நிறுத்தப்படவில்லை என்றால் நாட்டின் ஜனநாயகத்திற்கு அது பேரிடியாக அமைந்துவிடும்.
அரசியல்வாதிகளின் தற்போதைய பதவிப் போராட்டத்தினால் பொது மக்களின் வாழ்வாதாரம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதை நம்மால் காணமுடிகிறது. நிலைமை ஒரு பேரழிவின் விளிம்பில் உள்ளது என்றாலும் அது மிகையில்லை.
ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்து, பல்வேறு தொழில்துறைகள் மூடுவிழா கண்டு, மேலும் பல்லாயிரக்கணக்கானோர் பசி பட்டினியால் வாடுவது மட்டுமின்றி, மக்களின் மரணங்களும் வரம்பு மீறிப் போய்க்கொண்டிருக்கிறது.
‘ஆசியாவின் புலி’ என ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட மலேசியா இந்நிலைக்குத் தள்ளப்படும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இவ்வளவுக்கும் காரணம் கோறனி நச்சிலின் கொடூரம் இல்லை. பல்லாண்டுகளாக நீதி, நேர்மை, நியாயம், தகுதி முதலிய கோட்பாடுகள் புறந்தள்ளப்பட்டு ஒரே இனத்திற்கும் மதத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதன் எதிரொலிதான் இப்போது நாம் அனுபவிப்பது.
முன்னாள் மத்தியப் பொருளகத் துணை ஆளுனர் சுக்டேவ் சிங் குறிப்பிட்டதைப் போலத் தகுதியும் திறமையும் இல்லாதவர்கள் தலைமைத்துவப் பதவிகளுக்கு உயர்த்தப்பட்டு மக்கள் சொத்தை கொள்ளையடிக்க வழிவகுத்த ஒரு நடைமுறையின் இயற்கையான விளைவுதான் இது.
கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஷெரட்டன் நகர்வின் வழி கொல்லைப்புறமாகக் கைப்பற்றிய ஆட்சியைக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், தெளிவானதொரு இலக்கும் இல்லாமல் தங்களுடைய நிலைகளை அவர்கள் வளப்படுத்திக் கொண்டதுதான் மிச்சம்.
1MDB ஊழல் விவகாரம் மட்டும்தான் மக்கள் பணத்தின் கொள்ளை என்று சொல்லிவிடமுடியாது. மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு நிர்மாணிக்கப்பட்ட ஃபெல்டா நிலக்குடியேற்றத்திட்டம், ராணுவ வீரர்களுக்கான சேமிப்பு நிறுவனமான எல்.டி.ஏ.டி., ஹஜ் யாத்திரை செல்வதற்கான தாபுங் ஹஜி மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பணத்தை நிர்வகிக்கும் கே.டபல்யூ.ஏ.பி. முதலிய அரசாங்க நிறுவனங்களிலும் சூறையாடப்பட்டதானது அரசாங்கத்தின் எல்லா நிலைகளிலும் வரலாறு காணாத ஊழலுக்கும் கடனுக்கும் வழிவகுத்துவிட்டது என 14ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட உயர்மட்ட அறிஞர்கள் பேரவையின் தலைவர் டாய்ம் ஸைனுடின் ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.
தாங்கள் உண்மையிலேயே படு பயங்கர ஏமாற்றுப் பேர்வழிகள்தான் என்பதனைத் தங்களுடைய தொடர் நடவடிக்கைகளின் வழி அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
புகைப்படக்காரர்களே ஒருசேரப் படமெடுக்கத் தடுமாறும் அளவுக்கு மிகப் பெரிய அமைச்சரவையைக் கொண்டுள்ளார் மஹியாடின். சொகுசுக் கார்கள், வரம்புக்கு மீறிய வருமானம் மற்றும் கணக்கிலடங்கா இதர வசதிகளையும் அனுபவிக்கும் அவர்கள் அனைவருமே நாட்டுக்கான கடமையை மறந்த நேர்மையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தங்களுடைய திறமையின்மையைப் பல நிலைகளில் அவர்கள் வெளிக்காட்டி நோய்த் தொற்றை மேலும் மோசமாக்கிவிட்டனர். மலாய்க்காரர்களை மையமாகக் கொண்ட இந்த அரசாங்கத்தை மலாய்க்காரர்களே வெறுக்கும் அளவுக்கு வந்துவிட்டது நிலைமை.
இதற்கிடையே 47 ஊழல் குற்றச்சாட்டுகளையும் பண மோசடி வழக்குகளையும் எதிர்நோக்கியுள்ள அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட், பிரதமராகும் தனது இலக்கை முன்வைத்து மேற்கொண்டுவரும் நகர்வுகளுக்கு ஒரு சாரார் ஆதரவளிப்பதுதான் வேடிக்கை. நம் நாடு எந்த அளவுக்கு மிக மோசமாகத் தாழ்ந்துள்ளது என்பதையே இது புலப்படுத்துகிறது.
மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் துஷ்பிரயோகத்திற்குள்ளான நமது ஆட்சிமுறை தற்போது மிக மோசமாக உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.இந்த நடைமுறை மாற்றப்படவில்லை என்றால் புதிய பிரதமரோ பொதுத் தேர்தலோ நமது பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்க இயலாது.
மாற்றமில்லை என்றால் அழிவுதான், என்பதே நிதர்சன உண்மை!
குறிப்பு : டேனிஸ் இக்னேசியஸ் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் அடிப்படையில் சீரமைக்கப்பட்ட படைப்பு இதுவாகும்.