இராகவன் கருப்பையா –நாட்டின் 9ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள இஸ்மாய்ல் சப்ரிக்கு அடுத்து வரும் சில தினங்கள் மிகவும் முக்கியமான நாள்களாகக் கருதப்படுகிறது.
இவ்வாரத்தில் தனது புதிய அமைச்சரவையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் யார் யாருக்கு எந்தெந்தப் பொறுப்புகளை வழங்கவிருக்கிறார் என்பதை அறிவதற்குப் பொது மக்கள் கழுகுப் பார்வையைக் கொண்டு காத்திருக்கின்றனர்.
மலேசிய வரலாற்றில் மிகவும் குறுகிய காலமான 39 நாள்களுக்கு மட்டுமே துணை பிரதமர் பதவியை வகித்த அவர் நாட்டை வழிநடத்துவதற்கான தலைமைப் பொறுப்புக்கு அனுபவமில்லாதவர் என்றால் அது மிகையில்லைதான்.
எனவே அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாகக் கவனிப்பதில் ஆச்சரியமில்லை.
முன்னாள் பிரதமர் மஹியாடினின் ஆட்சி கவிழ்ந்ததற்கு அவர் மட்டுமே பொறுப்பில்லை என்பது எல்லாருக்குமே தெரியும். மாறாக அவரைச் சுற்றியிருந்த அமைச்சர்களில் பெரும்பாலோரின் தகுதியின்மையும் திறமையின்மையும் சேர்ந்தே நிலைமையை மோசமாக்கி நாடு சீர்குலைந்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு வித்திட்டது.
நிலைமை இவ்வாறு இருக்க, புதிய பிரதமர் இஸ்மாய்ல் அவர்களையே ‘மறு சலவை’ செய்து மீண்டும் அமைச்சரவையில் இடம் பெறச் செய்வாரா, மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வாரா, அரசியலில் சம்பந்தப்படாத, தகுதியும் திறமையும் உடைய அறிஞர்களை உள்ளே கொண்டுவருவாரா அல்லது சில எதிர்க்கட்சியினருக்கும் வாய்ப்பளிப்பாரா என்று மக்கள் கூர்ந்து கவனிக்கும் தருணம்தான் இது.
மஹியாடினின் ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களில் கிட்டத்தட்ட எல்லாருடைய நடவடிக்கைகளும் மக்கள் எள்ளி நகையாடும் அளவுக்குக் கேலிக் கூத்தாகவே இருந்ததையும் நாம் கண்கூடாகப் பார்த்தோம்.
எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுடைய மரியாதையையும் பெறக்கூடிய, அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு அமைச்சரவை அமைக்கப்படுவது அவசியமாகும்.
ஆனால் இஸ்மாய்லுக்கு இந்த அமைச்சரவை அமைக்கும் படலம் அவ்வளவு சுலபமாக அமைந்துவிடாது என்று உறுதியாகக் கூறலாம்.
ஏனெனில் மலாய்க்காரர் முஸ்லிம் ஆதிக்கமுடைய ஆட்சிதான் மலேசியாவுக்கு வேண்டும் எனக் காலங்காலமாகப் பிடிவாதமாக நின்று தனது இனச் சமயக் கோட்பாடுகளைப் புகுத்த நினைக்கும் பாஸ் கட்சி ஒரு புறம், சுயநல வேட்கையில் காரியம் சாதிக்கத் துடிக்கும் அம்னோ தலைமைத்துவம் ஒரு புறம் மற்றும் நாட்டின் அதிகாரம் இன்னமும் தன் வசம்தான் உள்ளது எனச் சாதிக்கும் மஹியாடின் தரப்பு, ஆகியவற்றைச் சமாளிப்பதுதான் இஸ்மாய்லுக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும்.
ஆனால் பொது மக்களைப் பொறுத்த வரையில் எப்படியாவது நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தமாட்டார்களா, பரிதாப மரணங்களுக்கு ஒரு முடிவு காணப்படாதா, வாழ்வாதாரம் வழக்க நிலைக்குத் திரும்பாதா, போன்ற ஏக்கங்கள்தான் அன்றாட வாழ்க்கையை ஆட்கொண்டிருக்கிறது.
எது எப்படியாயினும் எந்த ஒரு தரப்புக்கும் அனாவசியமாக அடிபணியாமல் நாட்டின் நலன் கருதிச் சிறந்த ஆற்றலுடைய, திறமைசாலிகளை மட்டுமே அமைச்சரவைக்குள் கொண்டுவருவது அவசியமாகும்.
மஹியாடின் ஆட்சியின் போது சட்டதிட்டங்களைத் துச்சமென மதித்து விதிமுறைகளையும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளையும் தான்தோன்றித்தனமாக மீறியவர்கள் கண்டிப்பாக ஓரங்கட்டப்பட வேண்டும்.
கடந்த ஆண்டில் நோய்த்தாக்கத்தின் உச்சத்தின் போது வெளிநாடு சென்று திரும்பியவுடன் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இறுமாப்புடன் நாட்டை வலம் வந்தார் முன்னாள் மூலத்தொழில் அமைச்சர் கைருடின்.
யாரும் மாவட்டமோ மாநிலமோ கடக்கக் கூடாது எனும் கடுமைமான விதிகளை மீறித் தனது குடும்பத்தினரைச் சந்திப்பதற்கு நியூஸிலாந்து வரையில் சென்று திரும்பினார் கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் சந்திரக் குமார்.
நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைத் தூக்கியெறிந்துவிட்டு விருந்தோம்பல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மட்டுமின்றிப் பொதுப் பூங்காவில் தனது நண்பர்களுடன் உடல் பயிற்றுள்ளும் ஈடுபட்டார் முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் முசா.
பக்தர்கள் கோயில்களுக்குச் செல்லக்கூடாது என நாடிலுள்ள எல்லாக் கோயில்களும் பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் பத்துமலையில் தான் மட்டும் தைப்பூசம் கொண்டாடினார் மனிதவள அமைச்சர் சரவணன்.
இப்படியாக நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை மீறிய அரசியல்வாதிகளின் பட்டியலை மக்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள்.
இவர்கள் மட்டுமின்றி, வெந்நீர் அருந்தினால் கோறனி நச்சிலைக் கொன்றுவிடலாம் என்று அறிவித்துக் கோமாளியான முன்னாள் சுகாதார அமைச்சர் அடாம் பாபா, நடமாட்டக்கட்டுப்பாட்டின் போது வீட்டிலுள்ள பெண்கள் ‘மேக்கப்’ முக அலங்காரம் செய்து கொண்டு கணவன்மார்களைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கி அனைத்துலக ஊடகங்களின் கேலிக்கூத்துக்கு உள்ளான முன்னாள் மகளிர் நல அமைச்சர் ரீனா ஹருன் மற்றும் மக்கள் பசி பட்டினியால் வாடும் வேளையில் ‘டிக் டொக்’ போட்டிகளை ஏற்பாடு செய்த முன்னாள் உயர்கல்வியமைச்சர் நொராய்னி ஆகியோரையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் எல்லாருமே சரி சமம்தான் எனும் கோட்பாட்டை இஸ்மாய்ல் நிரூபிக்க வேண்டும்.
எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் சட்டத்தை மீறும் நபர்களைத் தண்டிக்க அவர் தயங்கக் கூடாது. அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம் பொது மக்களுக்கு ஒரு சட்டம் என்று இருந்த கடந்த கால நடைமுறைகளை அவர் தகர்த்தெறிய வேண்டும்.
அரசாங்கத்தின் மீது சிதைந்து கிடக்கும் மக்களின் நம்பிக்கையை மீண்டும் புதுப்பிப்பதற்கு இதுபோன்ற துணிச்சலான முடிவுகளை அவர் முன்னெடுப்பது அவசியமாகும்.
ஆகத் தேர்வு செய்வதற்கு நிறையப் புதுமுகங்கள் இருக்கும் வேளையில் மக்களின் சினத்திற்குள்ளானவர்ளை பழையபடி உள்ளே கொண்டு வந்தால் பொது மக்களினப் பார்வையில் புதிய அரசு தொடர்ந்து வெறுக்கத்தக்க ஒரு அரசாங்கமாக இருப்பது மட்டுமின்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு அது தடங்களாகவே இருக்கும் என்பதிலும் ஐயமில்லை.