கடந்த ஆகஸ்ட் 16-இல் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் பிரதமர் பதவியைத் துறந்தார். மாமன்னரும் அதை ஏற்றுக்கொண்டு புதிய பிரதமரை நியமிக்கும் வரை முகைதீனையே பராமரிப்புப் பிரதமராக நியமித்துள்ளார்.
பதவி துறந்த பின், முகைதீன் யாசின் நாட்டுக்கு ஆற்றிய தமது உரையில், சில முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த உரையிலிருந்து வடித்தெடுத்த சிலவற்றைக் கவனிப்போம். அவர் தமது வீழ்ச்சிக்கு ஒரு சிலரைக் கடிந்ததோடு, தாம் விரும்பியிருந்தால் பிரதமர் பதவியில் தொடர்வதற்கு எல்லா சாத்தியக்கூறுகளும் இருந்ததாகத் தெளிவுபடுத்தினார். அதாவது தாம் மட்டும் சில தலைவர்கள் மீது நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளை மீட்டுக் கொண்டிருந்தால் அவருக்கு அளித்து வந்த ஆதரவு தொடர்ந்திருக்கும். ஆனால், தாம் கள்வர்களுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை என்கிறார்.
இதிலிருந்து என்ன புலப்படுகிறது? ஒரு கட்சியைச் சார்ந்த கள்வர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதை மீட்டுக்கொண்டால் தமது பிரதமர் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை; அதே சமயத்தில் அவர்கள் மீதான வழக்குகள் மீட்டுக் கொண்டால் அவர்கள் ஆட்சியில் பங்கு பெறலாம். எனவே, அந்தக் கள்வர்களுடன் செயல்பட தமக்கு மனம் இல்லை என்கிறார். நியாயமான கருத்து!
அவர் உரையின் இந்தப் பகுதி இரண்டு விதமான வியாக்கியானங்களைக் கொண்டிருக்கிறது எனலாம். ஒன்று, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைவர்கள் ஆளும் கட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டுமானால் அவர்கள் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளை அரசு மீட்டுக்கொள்ள வேண்டும். அப்படியானால், அவர்கள் சார்ந்த கட்சியின் ஆதரவு கரத்துக்கு ஒரு விலை பேசப்படுகிறது என்றுதானே பொருள். முகைதீன் யாசின் தம்மிடம் இத்தகைய கீழ்த்தரமான கோரிக்கையை முன்வைத்தோரின் அடையாளத்தை வெளியிடவில்லை.
அடுத்து, தங்கள் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொள்ளாவிட்டால் முகைதீன் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை மீட்டுக் கொள்ளப்படும் என்பது மிரட்டலா அல்லது சட்டத்துக்குப் புறம்பானச் செயலா? நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது, அதை மீட்டுக்கொண்டால் ஆட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்போம், மறுத்தால் ஆதரவை மீட்டுக் கொள்வோம். நாங்கள் ஆதரவை மீட்டுக்கொண்டால் அரசு கவிழும். இதை எந்த இரகத்தில் சேர்ப்பது? ஒன்று, ஊழல்! அல்லது தேசத் துரோகச் செயல் என்று வியாக்கியானம் செய்வது சிரமம் அல்லவே!
அரசைக் கவிழ்க்க நினைப்பது, அவ்வாறு செயல்படுவது ஜனநாயகத்துக்கு இழைக்கப்படும் துரோகமாகும். அது தேசத் துரோகம் என்று கூட சொல்லப்பட்டது. ஆனால், ஒரு சிலர், இவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள், மக்களால் தேர்ந்தெடுத்த ஆட்சியைக் கவிழ்த்த நடவடிக்கையை நாட்டு நலனுக்கு, மக்கள் நலனுக்கு என்று வியாக்கியானம் செய்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
முகைதீன் சற்று ஆழமாகச் சிந்திப்பாரேயானால் பதினெட்டு மாதங்களுக்கு முன்பு, இதே குழுமத்துடன் தானே உறவை ஏற்படுத்தி, அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பதவிகளைக் கொடுத்து, அவர்களை அரசு அதிகாரத்தில் அமர்த்தி, அலங்கரித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற நம்பிக்கை கூட்டணியைக் கவிழ்த்தார். அந்த நம்பிக்கை கூட்டணி ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு இவரும் ஒத்துழைத்தார் என்பதை மக்கள் மறக்கவில்லையே.
பொது தேர்தலின்போது, “இனி எக்காரணத்தை முன்னிட்டும் அம்னோவில் சேர மாட்டேன்” என்று மட்டுமா சொன்னார், அவருடைய பேச்சுகளிலிருந்து, அம்னோ ஊழல்வாதிகளுடன் எந்த உறவையும் கொண்டிருக்க வழியில்லை என்று ஆணித்தரமாகச் சொன்னவர், கடந்த ஆண்டு சொகுசு விடுதியில் உருவாக்கப்பட்ட நம்பிக்கை கூட்டணியைக் கவிழ்க்கும் கூட்டத்திற்கு இவரும் ஒரு காரணகர்த்தா அல்லவா? கள்வர்கள் என இவரே முத்திரையிட்ட பின் அரசியல் காரணங்களை முன் நிறுத்தி அதே கள்வர்களோடு உறவைப் புதுப்பித்தவர் இவர்தானே! இன்று தாம் கள்வர்களுடன் ஒத்துழைக்க மாட்டேன் என்பது அவர்களின் கோரிக்கைகள் நியாயமற்றவையாகத் தென்படுவதாலா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா?
அம்னோ தனது ஆதரவை மீட்டுக்கொள்வது உறுதியானதும் பல முயற்சிகளில் இறங்கிய முகைதீனுக்கு வெற்றி கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் அவரின் பெரும்பான்மை, தாம் பிரதமர் பொறுப்பை ஏற்றதிலிருந்து சந்தேகத்தில்தான் இருந்தது. இப்பொழுது அது உறுதியாகிவிட்டது.
அம்னோ முகைதீனைக் கைக்கழுவியதும், தாம் ஆட்சியில் நீடிக்கும் பொருட்டு பழைய நண்பர்களை அணுகினார். புது திட்டங்களுக்கு ஆதரவு தர முன்வந்தார். 2018ஆம் ஆண்டு நம்பிக்கை கூட்டணியை மக்கள் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியது எதற்காக? புது திட்டங்களைக் கொண்டு வந்து நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகத் தானே!
துன் டாக்டர் மகாதீர் முகம்மதும், முகைதீன் போன்றோர் பழைய இன, சமய அரசியலில் இருந்து மீளாது அதற்கு முக்கியத்துவமளித்து புது திட்டங்களை முடக்கியதைத்தானே நாடு கவலையோடும், வேதனையோடும் சகித்துக்கொள்ள நேரிட்டது.
அப்பொழுதே முகைதீன் இந்தப் புது திட்டங்களைப் பற்றி, பொது தேர்தலின்போது வெளியிட்ட கொள்கை அறிக்கையை மனசாட்சியுடன் செயல்பட்டிருந்தால், நாடு இன்றைய அவலநிலைக்குக் கொண்டுவரப்பட்டு இருக்குமா? இன்று நியாயத்தைப் பேசுகிறவர்கள் கடந்த ஆண்டு நம்பிக்கை கூட்டணியைக் கவிழ்க்க திட்டம் தீட்டியபோது சிந்தித்திருக்க வேண்டும் அல்லவா?
புது அரசு உடனடியாக என்ன செய்ய வேண்டும்? பெருந்தொற்று நோயின் கொடுமையைக் கட்டுப்படுத்த ஆக்ககரமானச் செயல்களில் இறங்க வேண்டும். தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை விரைவுப்படுத்த வேண்டும். பொருளாதாரச் சீர்த்திருத்தம் தேவை. மக்களின் அவலநிலையைப் போக்க தக்க நடவடிக்கைகள் தேவை. கோவிட்-19 குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது உடனடி நடவடிக்கை தேவை. இவை தவிர்க்க கூடாதவை.
சரி, நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பதாவது நல்லதாக இருக்கட்டும் என்று முகைதீன் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டால், தம்மிடம் நீதிமன்ற வழக்குகளை அரசு மீட்டுக்கொள்ள வேண்டுமெனக் கோரியது யார்? அவ்வாறு வழக்குகளை மீட்காவிட்டால் தமது ஆட்சிக்குத் தரும் ஆதரவை மீட்டுக் கொள்வதாகச் சொன்னவர்கள் யார்?
அவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும். புது ஆட்சி அரசு ஆணையத்தை நியமித்து, முகைதீன் சொன்ன குற்றச்சாட்டுகளை விசாரித்து, அவர் சொன்னதில் உண்மையிருப்பின், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் ஜனநாயகத்துக்கு எதிரான கீழறுப்புச் சக்திகளின் தீயச் செயல்களைக் கட்டுப்படுத்த இயலும். தடுக்கவும் உதவும்.
அதே சமயத்தில், ஜனநாயகத்துக்கு எதிராக, குறிப்பாக மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகச் சட்டம் இயற்றுவது பொருத்தமான ஜனநாயகச் செயல் எனலாம்.
ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் எண்ணம் இருப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவல் கலாச்சாரத்தைக் கைவிட வேண்டும். அதைத் தடுக்கும் சட்டமும் பலனளிக்கலாம். புது அரசு இதையும் மனத்தில் கொண்டு செயல்பட்டால் ஜனநாயகத்துக்கு மரியாதை செய்ததாகக் கருதப்படும்.