நீல பெருங்கடல் வியூகம் – பாகம் 4

இந்த நீல பெருங்கடல் வியூகத்தை வணிக நிறுவனம் மட்டுமன்றி இலாப நோக்கு இல்லாத அரசு அல்லது தனியார் நிறுவங்களும் பயன்படுத்தலாம். இந்த உத்தி ஒரு மாற்றுச்சிந்தனை. வழக்கமாக நாம் பயன்படுத்தும் வியூகத் திட்டத்திற்கு (Long Term Strategic Plan) மாற்றாக, விரைந்து குறுகிய காலத்திலேயேப் பலன்களைப் பெறுவதற்கு இந்த நீல பெருங்கடல் வியூகம் உதவக்கூடும்.

வழக்கமான சிந்தனைகள் வெற்றி ஈட்டவில்லையெனில், ஒரு மாற்று சிந்தனையை முயன்று பார்க்கலாம். அதற்கு இவ்வியூகம் உதவக்கூடும்.

இந்த வியூகம் மூன்று அடிப்படை முன்மொழிவுகளை வலியுறுத்துகிறது

  1. மதிப்பு முன்மொழிவு (value preposition)
  2. செலவு முன்மொழிவு (cost preposition)
  3. மக்கள் முன்மொழிவு (people preposition)

1. மதிப்பு முன்மொழிவு (value preposition)

உங்களுடைய வாடிக்கையாளர்கள் அல்லது வாடிக்கையாளாராக வேண்டும் என நீங்கள் எதிர்ப்பார்க்கின்ற தரப்பினருக்கு, என்ன மாறுபட்ட மதிப்பு அல்லது புதுமையை வழங்கலாம் என சிந்திக்க வேண்டும். இன்றையிலிருந்து இந்த வேறுபாட்டை வழங்கப்போகிறேன், இதனால் இதுவரை என்னை விட்டுவிலகிப்போன வாடிக்கையாளரை ஈர்க்கப்போகிறேன் என நீங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் எடுக்கப்போகும் புதுமுயற்சி அதிக வாடிக்கையாளரை ஈர்க்க வேண்டும்.

2. செலவு முன்மொழிவு (cost preposition)

நீங்கள் வழங்கும் அந்தப் புதுமை, உங்களுக்கு அதிகச் செலவை ஏற்படுத்தி உங்களின் கையிருப்பைக் கரைத்துவிடக்கூடாது. மாறாக, உங்களின் செலவைக் கூட்டாமல் குறைக்க வேண்டும். ஆகவேதான், செலவு முன்மொழிவு மிக முக்கியமானது.

மதிப்புக் கூட்டப்பட்ட ஈர்ப்பாகவும் உங்களது புதுமுயற்சி இருக்கவேண்டும். கூடவே, செலவையும் குறைக்க உதவவேண்டும். இதைச் செலவு – மதிப்பு புத்தாக்கம் என்போம்.

எ.கா. ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனம் நூலொன்றை அச்சிட்டு விற்பனைக்குக் கொண்டுவருகிறது என வைத்துக் கொள்வோம். அச்சு செலவுடன் இதர செலவுகளையும் கூட்டினால் ஒரு நூலுக்கு ரி.ம. 10 தேவைப்படும் என வைத்துக்கொள்ளுங்கள். அந்த நூலை 1000 படிகள் அச்சிட்டால் மொத்த செலவு ரி.ம. 10,000 (பத்தாயிரம்). அந்த நூலை ரி.ம. 20-க்கு விற்பனை செய்தாலும், அந்த நூலின் உள்ளடக்கம், பயனைக் கருத்தில் கொண்டே மக்கள் வாங்குவதா, வேண்டாமா என முடிவு செய்வார்கள். நூல் வெளியீடு செய்து கையைச் சுட்டுக்கொண்ட பல எழுத்தாளர்களை இந்த நாடு கண்டிருக்கிறது.

எழுதி அச்சிட்டவருக்கு அதிகச் செலவையும், அதிமான வாசகர்களைச் சென்றுச் சேராமலும் அந்த நூல் பிறவிப்பயனை அடையாமலும் போய்விடக் கூடும்.

ஆகவே, நூலின் உள்ளடக்கம் குறித்தும், நூலை விற்பனை செய்யும் முறை குறித்தும், நூலைப் பரவலாக்கம் செய்கின்ற வழிமுறை குறித்தும் புதிய மாற்றுச் சிந்தனைகள், அதுவும் செலவைக் குறைக்கின்ற வகையில் அமைய வேண்டும்.

எ.கா. பள்ளிகளிலே கணினி அறை என்று ஆயிரக் கணக்கில் காசை விழுங்கிவிட்டு அதை முழுமையாகப் பயன்படுத்தாமலும், பின் கணினிகள் பழுதடைந்த நிலையில் அதை நிருவகிக்கப் போதுமான பணமின்றியும் போய்விடுகிறது. இப்பொழுது கோறனி காலம். பல கணினி அறைகள் பயன்படுத்தப்படாமல் கிடக்கும். இந்தச் சிக்கலை எல்லாம் எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்கு மாற்றுச்சிந்தனையை நீல பெருங்கடல் வியூகம் கொடுக்கும்.

3. மக்கள் முன்மொழிவு (people preposition)

இறுதியாக, ஒரு நிறுவனமோ இயக்கமோ வெற்றிப்பெறுவதற்கு அந்த நிறுவனத்தில் பணிபுரிகின்ற ஊழியர்கள் அல்லது இயக்கத்தின் செயலவை உறுப்பினர்கள் ஆற்றுகிற பங்கு அளப்பரியது.

இவர்கள் சரியாக இயங்கவில்லை, ஒத்துழைப்பு வழங்கவில்லை, முழுமையாக தங்களின் திறமையை வெளிப்படுத்தவில்லை என்றால் அதனால் அந்த நிறுவனம் கண்டிப்பாக வீழ்ச்சியுறும்.

இது பள்ளிக்கூடங்களுக்கும் பொருந்தும். ஆசிரியர்கள், பெற்றொர்கள் கீழறுப்பு வேலையில் ஈடுபட்டால் கற்றல் திட்டங்கள் நிறைவேறுமா, பள்ளிக்கூடம்தான் வெற்றிபெறுமா?

எனவே, மக்கள் முன்மொழிவு எனும் இந்த மூன்றாவது அடிப்படையில் நிறுவனத்தின் அல்லது இயக்கத்தின் ஊழியர்கள் / செயல்வீரர்கள் போன்றோரின் விருப்பம் (interest), ஆர்வம் (motivation), மனப்போக்கு (attitude), அரசியல் நோக்குகள் (politics within organization) இவற்றிலும் கவனம் செலுத்தினால், அவர்களின் செயலாற்றும் ஈடுபாட்டை அதிகரிக்க முடியும். அதன்வழி நிறுவனம் இலாபம் அடையலாம். ஊழியரின் புத்தாக்கமே வாடிக்கையாளருக்குப் புதுமையை வழங்கி ஈர்க்கும்.

பல பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களின் வயது, ஆர்வம், மனப்போக்கை உணர்ந்து, அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கி, அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதன் வழி பள்ளிக்கூடங்கள் இன்னும் சிறப்பான சேவையை வழங்க முடியும்.

ஆக்கம் :- முனைவர் இரா. குமரன் வேலு