அவதிப்படும் ஆசிரியர்களும் – பள்ளிப்பிள்ளைகளின் எதிர்காலமும்

இராகவன் கருப்பையா –  கோறனி நச்சிலினால் கடுமையாகப்  பாதிக்கப்பட்டிருந்த போதிலும் உலகின் பல நாடுகளில் பள்ளிக் கூடங்கள் கிட்டதட்ட வழக்க நிலைக்குத் திரும்பிவிட்டன.ஆனால் நமது பிள்ளைகள் இன்னமும் இலக்கற்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருப்பது பரிதாபகரமான நிலைதான்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆசிரியர் – மாணவர் உறவுகளில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள போதிலும் குறைபாடுகளைக் களைந்து மாணவர்களின் நலன்களை மட்டுமே முன்வைத்து அர்ப்பணிப்பு உணர்வில் துளியளவும் குறைவின்றி தங்களுடையப் பணிகளை செல்வனே ஆற்றிவரும் ஆசிரியர்களை இத்தருணத்தில் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

இயங்கலை வாயிலான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு அவசியம் தேவைப்படும் கணினி, வரைப்பட்டிகை அல்லது கைப் பேசி முதலிய சாதனங்கள் எவ்வளவுதான் இருந்தாலும் பள்ளிப் பிள்ளைகளுக்கு, குறிப்பாகச் சிறு பிள்ளைகளுக்கு அவை எல்லாமே நீண்டகாலத் தீர்வாக அமையாது.

உதாரணத்திற்கு இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் ஆண்டு வகுப்பைத் தொடக்கிய மாணவர்களைப் பொறுத்தவரையில் திங்கள் முதல் வெள்ளி வரையில் ஒவ்வொரு நாலும் காலையில் கணினி முன் அமர்வதுதான் பள்ளி வாழ்க்கை என்று நினைக்கிறார்கள்.

ஆசிரியர் தினமென்றால் என்ன, பள்ளி சிற்றுண்டிச் சாலையென்றால் என்ன, பள்ளி விளையாட்டுப் போட்டிகள் எப்படியிருக்கும், புதிய நட்புகள் எப்படியிருப்பார்கள், போன்ற பல முக்கியமான அம்சங்களைப் பற்றி அறியாமலேயே முக்கால் ஆண்டை அவர்கள் கடத்திவிட்டது மிகவும் வேதனையான விசயம்.

எனினும் தங்களுக்கே உரிய அர்ப்பணிப்பு உணர்வை சுயமாகவே தன்முனைப்பாக உருமாற்றி தங்களால் இயன்ற அனைத்தையும் சளைக்காமல் செய்துவருகிறார்கள் ஆசிரியர்கள்.

இருந்த போதிலும் வகுப்பில் இருக்கும் எல்லா மாணவர்களின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்து இயங்கலையில் பாடம் நடத்துவது அவ்வளவு சுலபமான காரியமில்லை என ஆசிரியர் துறையில் நீண்டநாள் அனுபவமுள்ளவர்கள் கூட கூறுகின்றனர்.

குறிப்பாக கல்வியில் சற்று பின்தங்கிய நிலையில் உள்ள பிள்ளைகளைக் கொண்ட வகுப்புகளை கையாள்வதில் அவர்கள் அதிக சவால்களை எதிர்நோக்குகின்றனர். அப்படிப்பட்ட பிள்ளைகள் பி40 தரப்பிலான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நிலைமை மேலும் சிக்கலாக உள்ளது.

பலரிடம், குறிப்பாக நகர்ப் புறங்களுக்கு அப்பால் உள்ளவர்களிடம் இன்னமும் கணினி வசதிகளோ வரைப்பட்டிகைகளோ இல்லை. கைப் பேசி இருந்தாலும் பெற்றோர் வேலைக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றனர். வீட்டில் கைப் பேசி இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள்  ஒரே சமயத்தில் அதனைப் பயன்படுத்த முடியவில்லை.

நிறைய பெற்றோர்கள் வேலையிழந்திருப்பது இதுபோன்றப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கியுள்ளது.

வசதி குறைந்த மாணவர்களுக்கு மொத்தம் 150,000 மடிக்கணினிகள் வழங்கப்படும் எனக் கடந்த நவம்பர்  மாதத்தில் அறிவிக்கப்பட்ட இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இவ்வாண்டு ஜூன் மாதம் வரையில் அதில் பாதிகூட வினியோகம் செய்யப்படவில்லை. நாட்டில் நிலவிய அரசியல் குளறுபடிகளுக்கு மத்தியில் அத்திட்டம் என்னவானது என இன்று வரையில் தெளிவாகத் தெரியாது.

இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கிடையே ‘வைஃபை’ எனப்படும் அருகலைச் சேவைகள் நிறைய இடங்களில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அச்சேவைகள் இருக்கும் பல இடங்களில், குறிப்பாகக் கிராமப்புறங்களில் பல வேளைகளில் அருகலை திடீரென துண்டிக்கப்பட்டு பாடங்கள் தடைப்படுகின்றன.

இது போன்ற சமயங்களில் திடீரென ஒரு சில மாணவர்களோ பல மாணவர்களோ வகுப்பிலிருந்து விடுபடும் போது ஆசிரியர்களுக்கு அது மன உளைச்சலையே ஏற்படுத்துகின்றது.

இந்த அருகலை பிரச்சினை மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் உள்ளது எனும் விவகாரத்தைக் கல்வி அமைச்சு உணரவில்லை என்பது மிகவும் வருத்தமான உண்மை.

அதனை நிவர்த்தி செய்தற்குச் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ‘ஸூம்’, கூகுல் மீட்’ அல்லது ‘கஹூட்’ எனப்படும் தளங்களைக் கணினியில் பயன்படுத்த வேண்டும். ஆனால்  சில தளங்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான செலவுகள் குறித்து கல்வியமைச்சு இதுவரையில் வாய்திறக்கவே இல்லை என்று நம்பப்படுகிறது.

நிறைய ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த செலவில் இப்பிரச்சினையைச் சமாளிக்கின்றனர். சமாளிக்க இயலாத  ஆசிரியர்களின் நிலை சற்று பரிதாபமாகத்தான் உள்ளது.

இவற்றுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு பாடத்தையும் போதித்து முடிப்பதற்கு நேரடி வகுப்பறை நேரத்தை விட இயங்கலை வழியான போதனா முறைக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.

கிட்டதட்ட எல்லா மாணவர்களுமே பள்ளிக்கூடம் சென்று பாடம் கற்கத்தான் விரும்புகிறார்களேத் தவிர இயங்கலை வாயிலான கற்றல் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

இவர்களுக்கு தன்முனைப்பு வழங்கி நேரத்தோடு வகுப்பில் இணைய ஊக்குவிப்பதும் ஆசிரியர்களுக்கு மற்றொரு சவாலாகும்.

இதற்கிடையே கோறனி நச்சிலின் அன்றாடத் தொற்று 25,000தையும் அதனாலான மரண   எண்ணிக்கை 400ஐயும் நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு அபாயகரமான சூழலில் எதிர்வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி எல்லாப் பள்ளிகளும் திறக்கப்படும் என கல்வியமைச்சர் முஹமட் ரட்ஸி கடந்த மாதம் ஒரு அறிவிப்பைச் செய்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

நாடளாவிய நிலையில் பெற்றோர்கள், தேசிய ஆசிரியர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள், போன்ற பல தரப்பினரின்  கடுமையான கண்டனத்தைத் தொடர்ந்து அந்தத் தேதி பிறகு அக்டோபர் 3-க்குத் தள்ளி வைக்கப்பட்டது.

நாட்டிலுள்ள எல்லா ஆசிரியர்களுக்கும் இன்னும் முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடிக்கப்படாத நிலையில் பள்ளிக் கூடங்களைத் திறந்தால் எத்தனைப் பெற்றோர்கள் தங்களுடைய ள்ளைகளைப் பாடசாலைகளுக்குத் துணிச்சலாக அனுப்புவார்கள் என்பதும் ஒரு கேள்விக் குறியே!