இராகவன் கருப்பையா – திங்கள்கிழமை (30/8/21) பதவியேற்ற நாட்டின் புதிய அமைச்சரவையில் மனிதவள அமைச்சராகச் சரவணனும் சுற்றுலாத்துறை துணையமைச்சர் சந்திரக் குமாருமாக 2 இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
இதில் அதிர்ச்சியோ ஆத்திரமோ ஆச்சரியமோ படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் பிரதமர் மஹியாடின் அறிவித்த அமைச்சரவையிலும் இந்த இருவருக்கு மட்டும்தான் இடம் கிடைத்திருந்தது.
அதுவும் கூட இன அடையாளத்திற்கு போட்ட பிச்சை போலத்தான் நடந்து கொள்கிறார்கள் அவர்கள். ஏனெனில் ஆட்சியைக் கைப்பற்றிய பெர்சத்துவும் கூட்டுச் சேர்ந்த பாஸ் கட்சியும் இன வாதத்தை முன்வைத்து ‘மலாய் முஸ்லிம்’ அரசாங்கம் அமைப்பதில் மட்டுமே முனைப்பு காட்டுகின்றன இன்று வரையில்.
பல்லினக் கூட்டணி எனக் கடந்த 64 ஆண்டுகளாக நட்பு பறைசாற்றும் தேசிய முன்னணிக் கூட ம.சீ.ச.வையும் ம.இ.கா.வையும் ஒரு இடைவெளியில்தான் வைத்திருந்தது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.
இந்நிலைமை நமக்கு ஒரு புதிய விசயமல்ல. காலங்காலமாக நமது அரசியல்வாதிகள் அனைவருமே நன்கு உள்வாங்கியிருக்கும் அப்பட்டமான இனவாத கட்சி அரசியல் ஒதுக்கீடு என்று கூடச் சொல்லலாம்.
எனவே கூடுதலாகப் பிரதிநிதித்துவம் இருந்தால் நம் சமுதாயத்திற்கு அதிகமான சலுகைகள் கிடைக்கும், குறைவாக இருந்தால் கொஞ்சம்தான் கிடைக்கும் என்று எண்ணுவதெல்லாம் மூடத்தனம் அல்லது அறியாமை என்றே நினைக்கத் தோன்றுகிறது.
ஒற்றை அமைச்சராக இருந்த காலம் ஒரு புறமிருக்க, 2 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட சமயம் மட்டுமின்றி, 4 அமைச்சர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்திலும் கூட நம் சமுதாயத்திற்கு என்னதான் விடிவுகாலம் பிறந்தது என்ற கேள்வி நம் இதயங்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டுதான் இருக்கிறது.
கடந்த 1970ஆம் ஆண்டுகளில் மாணிக்கவாசகம் மற்றும் ஆதி நாகப்பன் ஆகிய இரு முழு அமைச்சர்கள் நம் சமூகத்தைப் பிரதிநிதித்தார்கள்.
அதன் பிறகு மகாதீரின் 22 ஆண்டுகால ஆட்சியின் போதும், படாவி பிரதமராக இருந்த 6 ஆண்டு காலத்திலும் சாமி வேலு மட்டுமே நமது அமைச்சராக இருந்தார். எண்ணிக்கை சுருங்கியதற்கு அவ்விரு பிரதமர்களும் காரணமா அல்லது சாமிவேலு பொறுப்பா என்று வெளிப்படையாகத் தெரியாது.
நஜிப் பிரதமர் பொறுப்பை ஏற்றக் கொஞ்ச நாள் கழித்துப் பழனி வேலு மற்றும் சுப்பிரமணியம் ஆகிய இருவரையும் குறுகிய காலத்திற்கு முழு அமைச்சர்களாக நியமனம் செய்தார்.
தொடர்ந்து நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு 2ஆவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்ற மகாதீர் யாரும் எதிர்பாராத வகையில் குலசேகரன், கோபிந் சிங், வேதமூர்த்தி மற்றும் சேவியர் ஜெயகுமார் ஆகிய 4 பேரை முழு அமைச்சர்களாக நியமனம் செய்து சரித்திரம் படைத்தார்.மற்றவையெல்லாம் மக்கள் நன்கு அறிந்து ஏமாந்து போன வரலாறுதான்.
ஆக இவர்கள் அனைவருடைய பின்னணியையும் ஆற்றலையும் சேவைத் தரத்தையும் சற்றுத் திரும்பிப் பார்ப்போமேயானால் அமைச்சரவையில் எத்தனை இந்தியர்கள் இருந்தார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை என்பது புலப்படும். மாறாக அவர்கள் சமுதாயத்திற்கு என்ன செய்தார்கள் என்பதை அலசி ஆராய்வதுதான் அவசியம்.
பிரதமர் இஸ்மாய்ல் தனது அமைச்சரவையை அறிவித்த நாளிலிருந்து பொது மக்கள் மட்டுமின்றிச் சில அரசியல்வாதிகளும் கூட நம்முடைய பிரதிநிதித்துவம் குறித்துத் தங்களுடைய ஆதங்கத்தைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.யாருடைய நன்மைக்காக அவர்கள் போராடுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியுமா என்ற ஐயப்பாடும் நம்முள் எழவே செய்கிறது.
ஆண்டாண்டு காலமாகத் துவண்டு சுருண்டு கிடக்கும் நமது சமுதாயம் இத்தகைய அறிக்கைகளினாலோ ஒற்றை அமைச்சராலோ ஒரே நாளில் எழுந்து ஓடாது என்பதை எல்லாத் தரப்பினரும் உணரவேண்டும்.காலங்காலமாக நம்மில் பலர் அறிக்கை விடுவதில்தான் வல்லவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில் இத்தகைய அறிக்கைகள் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைவதில்லை.
எனவே இத்தகைய வீண் விதண்டாவாத நடவடிக்கைகளில் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் தேவைப்படும் சேவைகளைச் சம்பந்தப்பட்ட அமைச்சுகளிடமிருந்து எப்படிப் பெறுவது போன்ற நடைமுறைகளைக் கண்டறிய வேண்டும்.அமைச்சர் அல்லிக் கொடுப்பார் எனும் காலம் கடந்த வீண் நம்பிக்கையைக் களைந்து நேரடியாகவோ அரசு சாரா இயக்கங்களின் வழியாகவோ சம்பந்தப்பட்ட இலாகாக்களைப் பொது மக்கள் அணுக வேண்டும்.
அரசியல்வாதிகளை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதைக் கடந்த காலக் கசப்பான அனுபவங்கள் நமக்கு நிறையப் பாடம் கற்றுத் தந்துள்ளன.
அமைச்சர்களிடமிருந்து எதிர்பார்ப்புகளை விட்டொழித்து நம் கையே நமக்குத் துணை எனும் நிலையில் வெகுசன மக்களின் உரிமை அடிப்படையில் நமது வாழ்க்கை போராட்டத்தை முன்னகர்த்திச் சென்றால் ஏமாற்றங்கள் இருக்காது. ஒரு அமைச்சர் இருந்தாலும் ஒன்பது அமைச்சர்கள் இருந்தாலும் நம் சமுதாயத்தின் தலைவிதியில் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்ற உண்மையை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாட்டின் மேம்பாடு பல மடங்கு உயர்வடைந்த நிலையில், இனவாத அடிப்படையில் கட்சி அரசியல் வழி சலுகைகள் பெற்று சாமானிய இந்தியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இயலாது. அது ஒரு வகை அடிமைத்தன கட்சி அரசியலுக்கு வித்திடும்.
இந்தியர்கள் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படும் போது, அதன் வழி பயனடைபவர்கள் பணமும் பலமும் உள்ளவர்கள்தான் என்பதையும் உணர வேண்டும். இனவாத அரசியலில் நாம் இலவு காத்த கிளிகளாகதான் இன்னமும் இருக்கிறோம்.