நீல பெருங்கடல் வியூகம் – பாகம் 5

முன்னாள் முதன்மர் டத்தோசிறீ நஜிப் இரசாக் அவர்களுக்கு மிகவும் பிடித்த இந்த வியூகத்தைப் பற்றி சில வரிகளில் சொல்வதென்றால்,

  1. உங்களுக்கான புதியத் தளத்தை அல்லது அடையாளத்தை எப்போதும் உருவாக்குங்கள். அதில் புதுமையும் ஈர்ப்புத் தன்மையும் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
  2. உங்களின் பொருளையோ சேவையையோ பயன்படுத்தும் நுகர்வோர் அல்லது வாங்குவோர் ஆகிய இருவருக்கும் சில எதிர்ப்பார்ப்புகள் இருக்கின்றன :                                                      உங்களின் பொருள் / சேவை அவர்களின் வேலையை எளிதாக்க வேண்டும். பயன்படுத்த வசதியாக இருக்க வேண்டும். மதிப்பை மரியாதையைக் கூட்ட வேண்டும். பாதுகாப்பைக் கொடுக்க வேண்டும். அவர்களின் உற்பத்தித் திறனைக் கூட்ட வேண்டும்.

    கட்டுரையாளர்
  3. உங்களின் சேவையை அல்லது பொருளைப் பயன்படுத்தாதவர்கள், வாங்காதவர்கள் போன்றவரைக் குறிவைத்து, அவர்களை உங்கள் பக்கம் ஈர்ப்பதே நீங்கள் புதிய புதுமைமிகுத் தளங்களை அமைப்பதன் நோக்கம். கேட்பதற்கு வணிக உத்தி மாதிரி தோன்றும். வணிக உத்திதான், ஆனால் வாழ்க்கைக்கும் தேவையான உத்தி.
  4. உங்களின் சேவையும் பொருளும் வித்தியாசமான மதிப்பை (value) உங்கள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும். உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தக்கூடாது, மாறாக, இலாபம் கொடுக்க வேண்டும். உங்களோடுப் பணிபுரியும் தொழிலாளர்களின் மனப்போக்கு, ஆற்றல், தேவை இவை எல்லாம் உங்களின் வெற்றிக்குப் பங்காற்றுபவை. எனவே, அவர்களின் செயற்பாடு, புத்தாக்கம், ஒத்துழைப்பு மிக முக்கியம்.

உங்களுடைய வியூகம் நீல பெருங்கடல் வியூகம் என்பதை அறிய எளிய வழிகள்:-

அ. தற்பொழுது நீங்கள் ஈடுபட்டிருக்கும் எல்லா செயல்களையும் பட்டியலிட்டு அவற்றை “தற்சமயத்திற்கான வியூகம்” என்றும், தேவையில்லாத, பயன்குறைந்த, நேரத்தையும் பணத்தையும் அதிகம் விரையம் செய்யும் அல்லது செலவளிக்கும் நடவடிக்கைகளை நீக்கி, “எதிர்கால வியூகம்” என்று புதுப்பட்டியல் இடுங்கள்.

ஆ. கண்டதையும் வாரிப்போட்டுக்கொண்டு செலவை அதிகரிக்காமல், குறிப்பிட்ட சில நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துங்கள். வாடிக்கையாளருக்கு வித்தியாசமான மதிப்பைக் கொடுக்கும் புதுமைகளை உருவாக்கி அதில் கவனம் செலுத்துங்கள்.

இ. உங்களுக்கு என்று சொலவம் அல்லது மயக்குவரியை (tagline) உருவாக்குங்கள். இதுதான் உங்களுக்கான விளம்பரம். வாடிக்கையாளர் மனத்தில் நிலைக்க உதவும்.

எல்லோரும் பறக்கலாம் “everyone can fly” என்று, முன்பு ஏர் ஆசியா அறிமுகப்படுத்திய சொலவத்தில் “சிக்கனக் கட்டணத்தில் வானூர்தியில் பறக்கலாம்” எனும் செய்தி ஒளிந்திருப்பதைப் பாருங்கள்.

தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் ஒவ்வொன்றும் தாங்கள் வழங்கும் புதியவை / புத்தாக்கத்தை அடிப்படையாக வைத்து சொலவங்களை உருவாக்கி அறிமுகம் செய்யலாம். இது மாணவர், பெற்றோர் போன்ற வாடிக்கையாளரைக் கவரும் உத்தி.

எப்படி நீலபெருங்கடல் வியூகத்தை அமைக்கலாம் என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

ஆக்கம் :- முனைவர் இரா. குமரன் வேலு