பக்காத்தானுடன் உறவு: சப்ரியின் சாமர்த்தியம்! – இராகவன் கருப்பையா

எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானுடன் கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளதன் வழி தனது அரசியல் சாணக்கியத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் இஸ்மாய்ல் சப்ரி.

‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விடச் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்’ எனும் கூற்றுக்கு ஏற்பப் பக்காத்தானை அரவணைத்துத் தனது நிலையை அவர் நன்றாகவே வலுப்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

மிகவும் சாதுர்யமாக அவர் மேற்கொண்ட இந்நடவடிக்கையினால் அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக ஆளும் கூட்டணிக்குள் எழுந்துள்ள அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை என்றே தெரிகிறது.

முன்னாள் பிரதமர் மஹியாடினின் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் சப்ரியின் அமைச்சரவையிலும் இருப்பதால் நாட்டின் மேம்பாட்டில் பெரிதாக எதனையும் நாம் எதிர்பார்த்துவிட முடியாது. ஏனெனில் அவர்களுடைய செயல்திறன் என்னவென்று நாம் எல்லாருமே அறிந்த ஒன்றுதான்.

ஆனால் கிட்டத்தட்ட அடுத்த பொதுத் தேர்தல் வரையில் தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து வராத வகையில் சப்ரி மேற்கொண்ட நகர்வானது ஒட்டுமொத்த அமைச்சர்களுக்கும் சேர்த்து ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மஹியாடினின் அரசியல் அனுபவத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் சப்ரி ஒரு கத்து குட்டிதான். ஏனென்றால் மஹியாடின் அரசியலுக்கு வந்து ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சப்ரியின் பிரவேசம் தொடங்கியது.

இருந்த போதிலும் பதவியைத் தற்காத்துக் கொள்ளும் விசயத்தில் சப்ரியிடம் உள்ள சாணக்கியம் மஹியாடினிடம் இல்லாமல் போய்விட்டதுதான் வெளிச்சம்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அல்லும் பகலும் ஊண் உறக்கமின்றித் தனது பதவியைத் தற்காத்துக் கொள்வதிலேயே அவர் முழுக் கவனத்தையும் செலுத்தியதால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்ததையும் நோய்த்தொற்று வரம்பு மீறிப் போனதையும் அவரால் கவனிக்க இயலவில்லை.

பிரதமர் பதவியில் அமர்ந்துவிட்ட இறுமாப்பில் அறிஞர்களின் ஆலோசனைகளுக்குச் செவிசாய்க்காமல் அவசரகாலச் சட்டத்தைக் கொண்டுவந்தது மற்றும் நாடாளுமன்றத்தை இழுத்து மூடியது போன்ற பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் சினத்திற்குள்ளானார்.

ஆக இத்தகைய முரட்டுத்தனமான முடிவுகளுக்கெல்லாம் அவசியமில்லாத, சப்ரியின் லாவகமாகச் சிந்தனை மலேசிய அரசியல் வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத ஒன்று.

நாடாளுமன்றத்தில் அவருக்கு எம்மாதிரியான சோதனை வந்தாலும் பக்காத்தானின் 90 உறுப்பினர்கள் அவருக்கு  அரணாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. சவால்களை முறியடிப்பதற்கு அவருக்குத் தேவைப்படுவது மேலும் 22 உறுப்பினர்களின் ஆதரவுதான்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி சீர்திருத்தங்களை அமல்படுத்துவதே தங்களுடைய பிரதான நோக்கம் எனப் பக்காத்தான் தரப்பு வாதிடுகிற போதிலும் சப்ரிக்குதான் அது மகத்தான வெற்றி என்று தாராளமாகக் கூறலாம்.

அம்னோவில் குறிப்பிட்ட ஒரு தரப்பினரின் சிதறாத ஆதரவு அவருக்கு எப்போதுமே உள்ளது. இந்நிலையில் நீதிமன்றத் திரள் எனப்படும் நஜிப் மற்றும் அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் தரப்பினருக்குச் சப்ரியின் இந்நடவடிக்கை ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

ஏனெனில் ஆதரவை மீட்டுக் கொள்வது தொடர்பாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மஹியாடினை மிரட்டி வந்து அதனை நடத்தியும் காட்டிய அத்தரப்பினரின் ஜம்பம் சப்ரியிடம் பலிக்காது எனக் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அதே போல 8 உறுப்பினர்களைக் கொண்டு பிரதமர் பதவி மீது குறி வைத்திருந்த வாரிசான் கட்சித் தலைவர் ஷாஃபியின் கனவும் கலைந்தது என்றே சொல்ல வேண்டும்.

முன்னாள் பிரதமர் மகாதீரின் நிலை அதைவிடப் பரிதாபம் போல் தெரிகிறது. வெறும் 4 உறுப்பினர்களை மட்டுமே தன் வசம் வைத்துக் கொண்டு பெரும் ஜாம்பவானைப் போல ஆணவத்தின் உச்சியில் ஆட்டம் காட்டிய அவருடைய கொட்டம் இதோடு அடங்க வாய்ப்பிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அடுத்த ஆண்டுக்கான வரவு தெலவுத் திட்டமும் கூட எவ்விதத் தடங்களுமின்றி அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏறத்தாழ இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அமலில் இருக்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது. எனவே எந்தத் தரப்பினரும் எந்நேரத்திலும் அதனை முறித்துக் கொள்ளலாம்.

பக்காத்தானின் அடுத்தகட்ட நகர்வுக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு அடித்தளமாக அமையும் என்பதால் எக்காரணத்தைக் கொண்டும் அது முறிந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்வதில் அக்கூட்டணி கவனமாக இருக்கும்.

அதே வேளை நாட்டின் மேம்பாட்டிலோ சீர்திருத்தங்களை அமலாக்கம் செய்வதிலோ குளறுபடிகள் ஏற்பட்டால் தாங்களும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் பக்காத்தான் நன்றாகவே உணர்ந்துள்ளது.

எது எப்படியாயினும் நீண்ட நாள்களாகச் சொல்லொண்ணாத் துயரில் சிக்கித் தவிக்கும் வெகுசன மக்களுக்குக் குறைந்த பட்சம் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழியாவது வசந்தம் மலரவேண்டும்.