இளைஞர்கள் அரசியலில் ஈடுபட முன்வரவேண்டும் – கி.சீலதாஸ்

“சிறு பிள்ளை செய்த வேளாண்மை வீடு வந்து சேராது” என்பது பழமொழி. இதன் பொருள், இளைஞர்களிடம் அனுபவம் குறைந்து காணப்படும். எனவே, அவர்களின் முயற்சி பலன்தராமல் போகலாம் என்பதாகும். விஞ்ஞான வசதிகள் இல்லாத காலத்தில் இந்த விவசாயத்தை ஒட்டிய பழமொழியில் பிழை காண்பது முறையல்லதான்; ஆனால், இப்பொழுது விஞ்ஞானத்தின் முன்னேற்றம் பல புதினங்களை நமக்குத் தந்திருக்கிறது, தருகிறது, தொடர்ந்து தரும் என்பதானது உற்சாகமளிக்கிறது.

விஞ்ஞானத்தின் துணையால் அறிவு வளர்ச்சி மிகுந்து காணப்படுகிறது. இதன் விளைவு, முன்பு இருந்த பிழைகளில் திருத்தம் காண்பது, புது முறைகளைப் பேணி அவற்றைத் தவிர்ப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. இன்று உலகெங்கும் இளைஞர்கள் பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதது அல்ல. வயதில் முதிர்ந்தவர்கள் அறிவு வளர்ச்சி கொண்டிருப்பார்கள்; அவர்களின் அனுபவமும், அறிவும் அவர்களுக்குத் துணையாக நிற்கிறது என்பது நியாயமான கருத்தாக இருந்தபோதிலும் முதியவர்களின் தவறுகள், அவர்களின் பிடிவாத குணம் நன்மை பயக்கவில்லை என்று இளைஞர் சமுதாயம் கவலைப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

பழைய வழிமுறைகளில் ஊறிப் போனவர்களுக்கு மாற்றம் என்பது எட்டிக்காயாகத் தோன்றினாலும் இளம் சமுதாயத்தினர்க்குப் புது முறை, புது அணுகுமுறை யாவும் சவாலாக மட்டுமல்ல சமுதாயத்திற்குத் தேவையான மாற்றங்களைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பழுத்த பழம் தானாகவே கீழே விழுந்து சிதறிவிடும். அவற்றைப் பழுத்திராத கனிகளோடு ஒப்பிடுவது பொருத்தமல்ல என்பார்கள்.

அதுபோலவே, வயதானவர்கள் பழுத்த பழத்திற்குச் சமம். வயது காரணமாகத் தானாகவே ஓய்வு பெறுவதுதான் முறை, இளம் வயதினரோடு போட்டிப் போட முடியாது. படைவீரர்கள் இளைஞர்கள், படைத்தளபதிகள் வயதிலும், அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள் என்பதைச் சரித்திரம் உரக்கக் கூவுவதும்; வயதானவர் வீட்டில் இல்லையென்றால் ஒருவரைப் பணம் கொடுத்தாவது வாங்க வேண்டுமென அரபு பழமொழியை நினைவுப்படுத்துவோரும் இருக்கிறார்கள். அதே சமயத்தில், விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தைப் பார்க்கும்போது அதைச் செயல்படுத்தும் உறுதி இளைஞர்களிடம் மிகவாகவே காணப்பெறுவதைப் புறக்கணிக்க முடியுமா என்ன?

இளைஞர்களைப் போல் முதியவர்கள் குறிப்பாக எழுபது வயதை அடைந்தவர்கள் அல்லது அதைக் கடந்தவர்களால் செயல்பட முடியாது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. முதியவர்கள் இளைஞர்களுக்குச் சமமாகப் புதுப்புது சவால்களைச் சமாளிக்க முடியுமா என்றால் அது சிரமம். முதியவர்கள் பழையதை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுவார்கள், இளையச் சமுதாயம் உலக விஞ்ஞான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு செயலாற்ற துணியும்.

இந்த வேறுபட்ட அணுகுமுறை மிகவும் முக்கியமாகும். அறிவுக்கும், அனுபவத்துக்கும் தேசிய எல்லை கட்டுப்பாடு கிடையாது. எனவே, விஞ்ஞான காலத்தில் அவை விரைவாகப் பல எல்லைகளைக் கடக்க முடிகிறது. இளைஞர்களின் இந்தச் சவால் மிகுந்த, துணிவான முயற்சிக்குக் காரணமாக இருப்பது வரலாறும், இதுகாறும் பழுத்த முதியோர்களால் மேற்கொள்ளப்பட்ட செயல்களாகும். முக்கியமாக, விஞ்ஞானத்தின் மகிமை பெருகிவிட்டது மட்டுமல்ல அனுபவத் தகவல்கள் துரிதமாக வளர்வதற்கு உதவுகின்றன.

உலக மக்கள் தொகையைக் கவனிப்போம். உலக வங்கியின் கணக்கெடுப்புபடி உலக மக்கள் தொகை 2021இல் 7.9 பில்லியன், அதாவது 7.9 நூறாயிரக் கோடியாகும். இதில் ஏறத்தாழ 97.03 விழுக்காடு இருபது முதல் எழுபத்தொன்பது வயதுக்கு உட்பட்டவர்கள். எஞ்சிய இரண்டு விழுக்காடு 80 முதல் 100 வயதுக்கு உட்பட்டவர்கள். சுமார் 63.1 விழுக்காட்டினர் இருபதுக்கும் முப்பதொன்பது வயதுக்கும் உட்பட்டவர்கள். இந்த உத்தேச கணக்குப்படி பார்த்தால் உலக மக்கள் தொகையில் பதினெட்டு வயதினரைச் சேர்க்காமல் கவனிக்கும்போது இளையச் சமுதாயத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பது வயது முதிர்ந்தவர்களே. இது எப்படி நடக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். பல நாடுகளில் இருபத்தோரு வயது எய்தினால் மட்டும்தான் வாக்குரிமை வழங்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தைத் தற்காத்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட சூழ்ச்சி இது எனக் கூறப்படுவது உண்டு.

விஞ்ஞான உலகின் அனுபவ கதவுகளைத் திறந்து நமக்குப் பல வழிகளைக் காட்டும்போது, அதில் பாதிப்புடையவர்கள் அல்லது நன்மைகளைப் பெறத்தக்கவர்கள் இளைஞர்களே. அவர்கள் எதையும் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காணுகிறோம். உலகின் அனைத்துலக நிறுவனங்களின் நிர்வாக தலைமைத்துவம் இளைய சமுதாயத்திடம் மாறிப்போவதைக் காண்கிறோம்.

அதே வேளையில் நிர்வாக கலாச்சாரத்திலும் ஒரே இனம்தான் உயர்வான தகுதியைப் பெற்றிருக்கிறது என்ற பழைய தேசிய உணர்வை ஒதுக்கும் மனப்பக்குவத்தையும் மேலை நாடுகளில் காண்கிறோம். இப்படிப்பட்ட முன்னேற்ற காலத்தின்போது இளைஞர்கள் தங்களை ஆளுபவர்கள் யார்? தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? என்பதை அறிந்துகொள்வது மட்டுமல்ல அப்படிப்பட்ட தெரிவுகளில் அவர்களுக்கு உரிமை இருக்கிறது எனக் கோருவதில் நியாயம் இருக்கிறது. சிந்திக்க வேண்டும் அல்லவா?

ஒரு காலத்தில் வாக்குரிமை பெற வேண்டுமானால் பற்பல நிபந்தனைகள் இருந்தன. அடிமைகளை உரிமையாகக் கொண்டவர்கள், நிலக்கிழார்கள் போன்றவர்கள்தான் வாக்குரிமை பெற்றிருந்தனர். பெண்கள் கூட வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. இவற்றில் இருந்து விடுபட்ட சமுதாயங்களைத்தான் பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகள் கண்டன. ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு. ஆனால், சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற லீ குவான் யூ விசித்திரமான ஒரு கருத்தை முன்வைத்தார். முப்பத்தைந்து முதல் அறுபது வயதுக்கு உட்பட்ட தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றிருந்தால் தலா இரு வாக்குரிமை வழங்கலாம் என்றார். அது ஈடேறவில்லை. உலக நாடுகள் பல பதினெட்டு வயது எய்தியவர்களுக்கு வாக்குரிமை வழங்கிவிட்டன.

பிரேசில் நாட்டில் பதினாறு வயது எய்தியவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். நம் நாட்டில் 2018ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது வாக்காளர்களின் வயதைப் பதினெட்டாகக் குறைக்கப்படும் என்ற வாக்குறுதி உலகப் பாங்கை அனுசரிப்பதாக இருந்தது. ஆனால், கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி தர மாட்டார் என்பது உண்மையாயிற்று. ஏனெனில், பதினெட்டு வயது சட்டம் இயற்றப்பட்ட போதிலும் அதன் அமலாக்கத்தை ஒத்திப்போடுவதில்தான் தேர்தல் ஆணையத்தின் கவனமெல்லாம் என்ற குற்றச்சாட்டும் சூடு பிடித்தது. இந்தப் போக்கு அரசு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பதினெட்டாகக் குறைக்கும் சட்டத்தை இயற்றியபோதிலும் அதனை அமல்படுத்துவதை அடுத்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு ஒத்திவைப்பதாகத் தீர்மானித்ததைக் கூச்சிங் உயர் நீதிமன்றம் இரத்து செய்து, பதினெட்டு வயதை எய்திய மலேசிய இளைஞர்கள் வாக்களிக்கும் உரிமையை இந்த ஆண்டு டிசம்பர் முப்பத்தொன்றாம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டுமெனவும் உத்திரவு பிறப்பித்துள்ளது.

இதே போன்ற வழக்கு வேறொரு உயர் நீதிமன்றப் பிரிவில் நிலுவையில் இருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து நடுவண் அரசு மேல்முறையீடு செய்யாது என்று நம்பப்படுகிறது. இது நல்லதொரு அணுகுமுறை எனலாம். ஜனநாயகத்திற்கும் இளஞ் சமுதாயத்தின் எதிர்பார்ப்பை மதிப்பதாக ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரத்தில் இருப்பவர்களின் வயது கடந்துவிட்டாலும் அதிகார மோகம் கடந்து போவது அரிது. ஒருமுறை அதிகாரப் பீடத்தில் அமர்ந்துவிட்டால் அதை விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இருக்காது என்பார்கள். ஒரு காலத்தில் மேலைநாடுகள், அமெரிக்கா போன்ற நாடுகளில் காலகட்டுப்பாடின்றி அதிகாரத்தில் அமர்ந்து இருந்தார்கள். இதில் பரம்பரை மன்னர்களைச் சேர்க்க வேண்டாம். ஜனநாயகத்தைத் துணைக்கு அழைத்து தங்களின் அதிகார வெறியைப் பலப்படுத்திக் கொண்டார்கள்.

இப்பொழுது அந்த முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது காலவரையறை இருக்கிறது. ஆனால், பல ஆசிய நாட்டுத் தலைவர்கள் இந்தக் காலவரையறையை ஏற்றுக்கொள்வதில்லை. மக்கள் விரும்புவதால் பதவியில் நீடிப்பதாகச் சாக்குப்போக்கைக் கட்டவிழ்த்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்களை நினைக்கும்போது எமதர்மர் துணுக்கு நினைவுக்கு வந்தது.

ஒருநாள் பிரபல ஆசிய நாட்டுத் தலைவர் ஒருவர் நீண்ட கால ஆட்சிக்குப் பிறகு அவரை எமதர்மர் அழைத்துச் சென்றார். சிவலோக வாயலை அடைந்ததும் தலைவரை அங்கேயே நிற்கும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்று தமது அதிபதியான சிவபெருமானிடம் தாம் கொண்டு வந்திருக்கும் தலைவரைப் பற்றிச் சொல்லி, அவர் சிவலோக நுழைவாயில் காத்திருப்பதாகச் சொன்னார். சிவபெருமான் எமதர்மரைப் பார்த்து, “அழைத்து வாரும் எமதர்மரே!” என்றார். எமதர்மருக்கு ஆச்சரியமாக இருந்தது. “இதென்ன புது பழக்கம் பிரபு! இதுவரை பல நாட்டுத் தலைவர்கள் வந்தபோது தாங்களே நுழைவாயிலுக்குச் சென்று அழைத்து வந்தீர்கள். இந்தத் தலைவருக்கு மட்டும் ஏன் இந்த வேறுபாடு?”

அதற்குச் சிவபெருமான், “நல்ல கதையைக் கெடுத்தீர். நான் இந்த ஆசனத்தில் இருந்து எழுந்தால் நீர் அழைத்து வந்திருப்பவர் என் ஆசனத்தில் வந்து அமர்ந்துவிடுவார். அதற்குப் பிறகு, தாம்தான் சிவலோகத்தை ஆளும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாக அறிவிப்பார். அவரை அகற்றுவது எளிதல்ல. இந்த விஷப் பரீட்சை வேண்டாம், நீர் போய் அழைத்துவாரும்!” என்றார்.

இப்படிப்பட்ட சூழ்நிலைதான் பல ஆசிய, ஆப்பரிக்கா நாடுகளில் பரவுகின்றன. அதிகார மோகத்துக்கு வயது ஏது? காலம் ஏது? மக்கள்தான் ஏமாந்து நிற்கின்றனர்.