இனத்துவேசம் குற்றம், என்ற சட்டம் தேவை! – இராகவன் கருப்பையா

பள்ளிகளில் நமது மாணவர்கள் எதிர்நோக்கும் இனப் பாகுபாடு ஒரு புதிய விசயமில்லை என்பது நம் எல்லாருக்குமே நன்றாகத் தெரிந்த ஒன்றுதான்.

இக்கொடுமையைக் காலங்காலமாக அனுபவித்துவரும் நம் இன மாணவர்களில் பெரும்பாலோர் கண்ணீரை மட்டுமே துணைக்கழைத்து மௌனமாகவே காலத்தைக் கடத்திவருவதும் வெள்ளிடை மலை.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பலதரப்பட்ட காரணங்களினால் பள்ளிக்கெதிராகவோ சக மாணவர்களுக்கு எதிராகவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாமல் பரிதவித்து வருவதும் மறுக்க முடியாத ஒரு உண்மை.

இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ள அரசியல்வாதிகள் பாராமுகத்துடன் ஏனோதானோ என்றிருப்பதால் இது குறித்து வெளிப்படையாக யாருமே பேசுவதில்லை.

ஆனால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் மறைந்து கிடக்கும் பல உண்மைகளை அம்பலமாக்கி நமக்கெல்லாம் மேலும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

நம் இன மாணவர்களில் ஏறத்தாழ 87 விழுக்காட்டினர் நாட்டின் கல்வி முறையில் இனப் பாகுபாட்டிற்கு இலக்காகியுள்ளனர் எனும் திடுக்கிடும் உண்மை ‘ஸ்க்கோலா செமுவா’ எனும் ஒரு இளைஞர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் வழி தெரியவந்துள்ளது.

தங்களுடைய நிறம் இதற்குக் காரணம் என 69 விழுக்காட்டினரும் சமய நம்பிக்கைக் காரணம் என 65  விழுக்காட்டினரும் குறிப்பிட்டுள்ளது அக்காலத்துத் தென் ஆப்பிரிக்காவைத்தான் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

இதற்கெல்லாம் மூலக்காரணம் தங்களுடைய ஆசிரியர்கள்தான் என 74 விழுக்காட்டினர் அம்பலப்படுத்தியுள்ளது நமது நெஞ்சங்களை உண்மையிலேயே கசக்கிப் பிழிவதாக உள்ளது. ‘வேலியே பயிரை மேய்கிறது’ என்றால் யார்தான் இந்த அவலத்தைப் பொருத்து கொள்ள முடியும்?

ஏதாவது ஒரு வகையில் இந்தச் சீர்கேட்டுக்குத் தீர்வு கிடைக்காதா என மேலிடத்தில் புகார் அளித்த போதிலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. எல்லாமே ‘செவிடன் காதில் ஊதிய சங்குதான்’ என 92 விழுக்காட்டினர் தங்களுடைய ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார்கள்.

ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் இப்பிரச்சினை அரசாங்கத்திற்குத் தெரியாமல் இல்லை. சன்னம் சன்னமாக நிலைமை இந்த அளவுக்கு மோசமானதே பல அரசியல்வாதிகளின் சுயநலப் போக்குதான் என்பதும் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

இன, மதப் பேதங்களுக்குத் தொடர்ந்தார்போல் உரமூட்டி அதன் நச்சுத்தன்மையைப் பூதாகரமாக்கியதே சில அரசியல் கட்சிகளும் குறிப்பிட்ட  பல அரசியல்வாதிகளும்தான்.

இனத்துவேசக் கருத்துகளை வெளியிட்டுத் தேவையான அரசியல் ஆதரவை அரவணைத்துக் கொண்டு தங்களுடைய வயிற்றைக் கழுவும் அரசியல்வாதிகள் நம் நாட்டில் நிறையவே உள்ளனர்.

இப்போதும் கூட இந்த ஆய்வின் முடிவுகள் தொடர்பாக ஏறக்குறைய எல்லா அரசியல்வாதிகளும் கண்டும் காணாததைப் போல்தான் உள்ளனர். இதில் நம் இன அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல. குரல் கொடுக்கக் கடப்பாடு கொண்டுள்ள இவர்களும் இவ்விவகாரத்தில் மௌனம் சாதிப்பதுதான் நமக்கு வியப்பாக உள்ளது.

இனதுவேசம் ஒரு குற்றம் என்ற வகையில் ஒரு சட்டம் வேண்டும். இல்லையேல் இது ஒரு சமூக புற்று நோயாக உருவாகி சமூக பண்பு நலன்களை அழித்துவிடும்.

இந்நிலையில் நாட்டில் நிலவும் பல விசயங்கள் தொட்டுத் துணிச்சலாகக் கருத்துரைக்கும் தேசியத் தேசபக்தி சங்கம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று.

நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் பள்ளிகளில் இப்படிப்பட்ட இனப்பாகுபாடு இருக்கவே கூடாது என அச்சங்கத்தின் தலைவர் முஹமட் அர்ஷாட் ராஜி அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிகளில் மட்டுமின்றி அரசாங்க இலாகாக்களிலும் இதர பல நிலைகளிலும் இருந்துவரும் இப்பிரச்சினையை இனிமேலும் மூடி மறைக்கலாகாது என்றார் அவர்.

கடந்த 60ஆம் ஆண்டுகளிலும் 70களின் முற்பகுதியிலும் பல்லின ஊழியர்களைக் கொண்டு அரசாங்கம் வெற்றிகரமாகப் பீடு நடைபோட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

இனங்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்துச் சுலோகங்களைக் கொண்டும் வாயளவிலும்  பேசிவிட்டு வெறுமனே இருப்பதில் அர்த்தமில்லை. இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என அர்ஷாட் கேட்டுக் கொண்டார்.

நமது இனத்தைப் பிரதிநிதிக்கும் சக்திவாய்ந்த அமைப்புகளும் அரசு சாரா இயக்கங்களும் தற்போதைய சூழலை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு தேசியத் தேசபக்தி சங்கத்தைப் போல அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும்.

இல்லையேல் நம் பிள்ளைகளின் எதிர்காலம் இந்நாட்டில் மேலும் சூனியமாவதைத் தடுக்க இயலாது.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இனம் சார்பான விசயங்களில்  நம் இன அரசியல்வாதிகள் தலையிடக் கூடிய வாய்ப்புக் குறைவுதான். எனவே இவ்வேளையில் அவர்களை நம்பிப் பயனில்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.