எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு 4 நாடாளுமன்றத் தொகுதிகளும் 7 சட்டமன்றத் தொகுதிளும் ஒதுக்கப்பட வேண்டும் என மக்கள் சக்தி கட்சியின் தலைவர் தனேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட அக்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என கடந்த வாரம் நடைபெற்ற அதன் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் கோடிக் காட்டினார்.
‘வழங்கப்படக்கூடும்’ என்றுதான் அவர் குறிப்பிட்டாரேத் தவிர நிச்சயம் வாய்ப்புண்டு என்று அவர் கூறவில்லை.
இந்நிலையில் ‘எருமை வாங்குவதற்கு முன் நெய் விலை கூறுவதை’ப் போல்தான் உள்ளது தனேந்திரனின் போக்கு.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை வைத்துப் பார்த்தால் மக்கள் சக்தி போன்ற ஒரு குட்டிக் கட்சிக்கு வாய்ப்புக் கிடைப்பது அவ்வளவு சுலபமான விசயமில்லை.
அஹ்மட் ஸாஹிட் முதல் கொண்டு ஆடுத்தப் போதுத் தேர்தலில் போட்டியிடுவாரா என்றுக்கூட தெரியாத நிலையில் பட்டும் படாமலும் அவர் செய்த அறிவிப்பை பிடிமானமாக வைத்துக் கொண்டு மக்கள் சக்தி கட்சி பகல் கனவு காணக்கூடாது.
கொல்லைப்புறமாக வந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ள போதிலும் இன்று வரையில் பிரதமர் பதவியில் அமர இயலாமல் தவிக்கும் அஹ்மட் ஸாஹிட் எண்ணிலடங்கா ஊழல் வழக்குகளில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருப்பது நாம் அனைவருமே அறிந்த ஒன்றுதான்.
அம்னோ ஆட்சியில் உள்ள போதிலும் அதன் தலைவர் பிரதமராக முடியாமல் இருப்பது நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை.
வலுவிழந்துக் கிடக்கும் அக்கட்சியின் நிலைப்பாடு அடுத்தப் பொதுத் தேர்தல் வாக்கில் எப்படியிருக்கும் என்று அறுதியிட்டுக் கூற இயலாது.
பெர்சத்து மட்டுமின்றி பெஜுவாங் மற்றும் மூடா போன்றப் புதியக் கட்சிகளின் பிரவேசத்தினால் 15ஆவது பொதுத் தேர்தல் அம்னோவுக்கு மிகவும் சவால் மிக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்நிலையில் இந்தியர்களின் ஆதரவை முற்றாக இழந்துவிட்ட ம.இ.கா.வுக்கும் புரிந்துணர்வின் அடிப்படையில் அவர்கள் தொகுதிப் பங்கீடு செய்ய வேண்டியுள்ளது.
கிட்டதட்ட கடந்த ஒரு ஆண்டு காலமாக பெரிக்காத்தானா பாரிசானா என்று மக்களே குழம்பும் அளவுக்கு ‘ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலு’மாக தனது நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் ம.இ.கா.வை அம்னோ எப்படி எடைபோடுகிறது என்று தெளிவாகத் தெரியவில்லை.
ம.இ.கா.வுடனான அம்னோவின் உறவு கடந்த காலங்களில் போல் இல்லாமல் தற்போது சற்று கசந்துள்ளதைப் போல் தெரிகிறது. கடந்த பொதுத் தேர்தலில் படு தோல்வியடைந்து ஒரு தொகுதியை மட்டுமே அக்கட்சி தற்காத்துக் கொண்டதும் அதற்கொரு காரணமாக இருக்கலாம்.
இந்நிலையில்தான் மக்கள் சக்தியை அரவணைப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை அஹ்மட் ஸாஹிட் ஏற்படுத்தியுள்ளார்.
இருந்த போதிலும் ம.இ.கா.வுடன் ஒப்பிடும் போது மக்கள் சக்தி கட்சி ‘நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்தக் காளானை’ப் போன்றதுதான்.
கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி அரசாங்கத்திற்கு எதிராக தலைநகரில் நடைபெற்ற ‘ஹிண்ட்ராஃப்’ பேரணிதான் இக்கட்சி உதயமாவதற்கான அடித்தளமாக அமைந்தது.
‘மக்கள் சக்தி’ எனும் ஒரு சுலோகத்தைக் கொண்டு கணபதி ராவ், உதயக் குமார், வேதமூர்த்தி, மணோகரன் மற்றும் வசந்த குமார் ஆகிய ஐவரின் தலைமையில் அந்தப் பேரணி வெற்றிகரமாக நடந்தேறியது. அது ஒரு அரசியல் போராட்டமல்ல. மாறாக இந்தியர்களின் உரிமைக்காகப் போராடிய அரசு சாரா இயக்கங்களின் திடீர் கூட்டணி.
ஆனால் தனேந்திரன் எனும் ஒரு முன்னாள் ஆசிரியர் அப்பேரணியின் வெற்றியையும் புகழையும் மிகவும் லாவகமாக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ‘மக்கள் சக்தி’ எனும் அரசியல் கட்சியோன்றை பதிவு செய்தார். அதோடு நின்றுவிடாமல் முன்னாள் பிரதமர் நஜிபுடன் அனுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தன்னை அடுத்த நிலைக்கு அவர் உயர்த்திக் கொண்டார்.
‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தானே’ எனும் நிலைப்பாட்டில் அம்னோவும் அவரை அதிகாரப்பூர்வமற்ற வகையில் அரவணைத்துக் கொண்டது.
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் நாடு முழுவதிலும் அம்னோவுக்கு எதிரான அதிர்வலைகள் ஓங்கி நின்ற சமயத்தில் அக்கட்சிக்கு ஆதரவாக வெளிப்படையாகவே செயல்பட்ட மக்கள் சக்தி உறுப்பினர்கள் பெரும்பாலான இந்தியர்களின் சினத்திற்குள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமை இவ்வாறு இருக்க மறைந்த முன்னாள் ம.இ.கா. உதவித் தலைவர் பண்டிதன் தோற்றுவித்த ஐ.பி.எஃப். கட்சி, ‘கிம்மா’ எனப்படும் மலேசிய இந்திய-முஸ்லிம் காங்கிரஸ், மற்றொரு முன்னாள் ம.இ.கா. பிரமுகரான நல்லாவின் மலேசிய இந்திய ஐக்கியக் கட்சி, ஆகியவை அம்னோவிடம் கையேந்தி அதன் தயவுக்காகக் காலங்காலமாகக் காத்துக் கிடக்கின்றன.
இந்நாட்டின் மக்கள் தொகையில் 7 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள நாம் எந்தத் தொகுதியிலும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு உண்மை.
அது ஒருபுறமிருக்க ம.இ.கா. உள்பட எல்லா உறுப்புக்கட்சிகளும் இணக்கம் தெரிவித்தால்தான் இதரக் கட்சிகள் பாரிசானில் இணைய முடியும் எனும் விதிமுறைகள் அக்கூட்டணியில் உள்ளன. இனிமேலாவது அது நடக்குமா என்று யாருக்கும் தெரியாது.
கூட்டணிக்குள் அக்கட்சிகளை சேர்த்துக் கொள்ளாமல் வெறுமனே தொகுதிகளை அம்னோ வழங்குமா என்பதும் சந்தேகம்தான்.
ஆக, பாரிசானில் அம்னோதான் ‘மூத்த அண்ணன்’ என்ற போதிலும் அக்கட்சியின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ள நிலையில் சமுதாயத்தை தூக்கி நிறுத்தப் போவதாக வீர வசனம் பேசும் சக்தியில்லாத நம் இனக் கட்சிகளின் வெற்று வாக்குறுதிகளை நம்பி மக்கள் மோசம் போகாமல் இருப்பது அவசியமாகும்.