பயங்கரவாத அச்சுறுத்தல்: மெத்தனப் போக்கு கூடாது

இராகவன் கருப்பையா- தென் கிழக்காசியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக் கூடும் என அண்மையில் ஜப்பான் விடுத்த எச்சரிக்கையை நாம் சாதாரணமாகக் கருதக்கூடாது.

மலேசியாவில் உள்ள ஏறக்குறைய 31,000 ஜப்பானியர்கள் உள்படத் தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில்  உள்ள தனதுப் பிரஜைகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என ஜப்பானிய அரசாங்கம் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

வழிபாட்டு தளங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் இத்தகையத் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக சில வாரங்களுக்கு முன் அந்நாடு அறிவித்திருந்தது.

அது குறித்து கருத்துரைத்த நமது காவல் துறைத் தலைவர் அக்ரில் சானி நம் நாட்டின் பாதுகாப்பு தகுந்த விழிப்பு நிலையில் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

ஆனால் ஜப்பானிய அரசாங்கத்தின் அறிவிப்பில் எவ்வித ஆதாரமும் இல்லையாதலால் அது குறித்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை எனத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் அசால்ட்டாகக் கூறியது  நமக்குச் சற்று வியப்பாகவே உள்ளது.

பயங்கரவாதம் தொடர்பான  மலேசிய உளவுத்துறையின் ஆற்றல் மீது நமக்கு முழ நம்பிக்கை உள்ள போதிலும் சில சமயங்களில் குறைபாடுகளும் உள்ளதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

 குறிப்பாக கடந்த   ஆண்டில் சபா மாநிலத்தின் லாஹாட் டத்து பகுதியில் சூலு தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் இதனை அம்பலப்படுத்தியதை நாம் இன்னும் மறக்கவில்லை.

சுமார் 5 வாரங்களுக்கு தொடர்ந்த அத்தாக்குதலில் தீவிரவாதிகளில் 68 பேரும் காவல் துறையைச் சேர்ந்த 10 பேரும் கொல்லப்பட்டனர்.

அதன் பிறகு 2016ஆம் ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்த இருவர் தலைநகர் அருகே பூச்சோங்கில் உள்ள ஒரு மதுபான விடுதியில் மேற்கொண்ட வெடி குண்டுத் தாக்குதலையும் நாம் இங்கு நினைவு கூறுவதில் தவறில்லை.

அத்தாக்குதலில் உயிருடற்சேதம் ஏற்படவில்லையென்ற போதிலும் மொத்தம் 8 பேர் காயமடைந்தனர்.

இவ்விரு சம்பவங்களுமே நம் நாட்டின் உளவுத் துறைக்குச் சவால்விட்டதாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் ஜப்பானிய உளவுத் தகவலை நாம் சாதாரணமாகக் கருதி மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.

பயங்கரவாதம் தொடர்பாகப் பிற நாட்டு எச்சரிக்கையை உதாசினப்படுத்தியதால் கடந்த 2019ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஏற்பட்டக் கொடூரமான விளைவை ஒரு படிப்பினையாகக் கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை.

தலைநகர் கொழும்பில் ஈஸ்த்தர் தினத்தன்று காலையில் 3 தேவாலயங்களிலும் 4 உணவகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் மொத்தம் 359 பேர்  பரிதாபமாக உயிர் நீத்ததோடு 500கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அக்கொடிய சம்பவம் நிகழ்வதற்கு 17 நாள்களுக்கு முன்னதாக மட்டுமின்றி சம்பவம் நிகழ சில மணி நேரங்களுக்கு முன்னதாகவும் உள்பட மொத்தம் 3 தடவை அது குறித்து இந்திய உளவுத்துறை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் அதனைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் மெத்தனமாக இருந்துவிட்டது.

இதற்கிடையே அனைத்துலக பயங்கரவாதிகள் தற்காலிகமாகத் தங்குவதற்கு மலேசியா பாதுகாப்பான ஒரு சொர்க பூமியாக உள்ளது என மலேசிய உளவுத்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் நோர்மா இஷாக் ஒரு சில தினங்களுக்கு முன் குறிப்பிட்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நமது குடிநுழைவுத்துறையின் கெடுபிடியற்ற விசாத் தளர்வுகள் இதற்கு ஒரு காரணம் என்றார் அவர்.

ஜப்பானிய அரசாங்கத்தின் எச்சரிக்கையை இதர தென் கிழக்காசிய நாடுகள் உதாசினப்படுத்தினாலும் மலேசியா சற்று கவனமாகவே இருப்பது அவசியமாகும்.

ஏனெனில் கடந்த மாதத் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து ‘அவசரக்குடுக்கை’ போல பாஸ் கட்சி  அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததன் வழி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கவனத்தை மலேசியா ஈர்த்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் தலிபான்களுக்கு எதிரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அதனைச் செய்யாவிட்டாலும் ஆட்சியிலுள்ள பாஸ் கட்சி மேற்கொண்ட இந்நடவடிக்கையினால் எல்லாருக்குமே பாதகம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

பாஸ் கட்சியின் இந்நடவடிக்கை குறித்து அரசாங்கமும் இதுவரையில் கருத்து வெளியிடவில்லை என்பது வியக்கத்தக்க ஒன்றுதான்.

எனவே ‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர், வைத்தூறு போலக் கெடும்’ எனும் குறளுக்கு ஏற்ப நமக்குக் கிடைத்துள்ள பயங்கரவாத எச்சரிக்கையை மெத்தனமாகக் கருதாமல் மிகுந்த ஜாக்கிரதையாக இருப்பதே விவேகமான  செயலாகும்.