வல்லரசுகளிடையே போட்டி! மலேசியாவின் நிலை என்ன? – கி.சீலதாஸ்

வல்லரசுகளிடையே போட்டி! மலேசியாவின் நிலை என்ன? – கி.சீலதாஸ்

ஒரு வல்லரசு நாடு எப்படிப்பட்ட தரங்களைக் கொண்டிருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடியாது. அது பரம இரகசியம். வல்லரசு நாடுகளிடையே பலத்த போட்டா போட்டி காணப்படுவது வழக்கமான அரசியலாகும். அவை நட்புடன் பழகினாலும் சூழ்ச்சிக்குக் குறைவிருக்காது. நட்பு நாடுகளின் பலவீனங்களை அல்லது பலத்தைப் புரிந்திருப்பதில் கவனம் மிகுந்து காணப்படும். எனவே, தூதரங்களில் ஒற்றர்கள் சாதாரண ஊழியர்கள் போல் காணப்படுவார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளப்படாத பழக்கமாக இருந்தாலும் சகித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஆனால், ஊழியர்கள் உருவில் இருக்கும் ஒற்றர்கள் மீது மிகுந்த கண்காணிப்பு இருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளிநாட்டுத் தூதரங்கள் மீதும், தூதரக அதிகாரிகள் மீதும் அவர்களை வரவேற்கும் நாடுகளின் கவனமும், எச்சரிக்கையும் மிகுந்து காணப்பெறுவது இயல்புதான். இந்த ஒற்றர்களை வைத்திருப்பது ஒன்றும் புது நாகரிகமல்ல. பண்டை காலந்தொட்டு நடைமுறையில் வழங்கிவரும் பழக்கமாகும். எனவே, இவர்களைப் பற்றி பண்டைய இந்திய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பதைக் காணலாம்.

இந்த அரச மரபை ஒட்டியே திருவள்ளுவர் “ஒற்றாடல்” என்ற அதிகாரத்தில் ஒற்றர்களைப் பற்றிக் கூறுகிறார். இவற்றை எல்லாம் எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால் பெரும்பான்மையான வல்லரசுகள் பிற நாடுகளில் நிகழும் செயல்களை அறிந்து வைத்திருப்பதில் கவனமும், அக்கறையும் கொண்டிருப்பர் என்பதனை நினைவுப்படுத்துவதோடு வல்லரசுகளின் போக்கு எப்பொழுதுமே அவர்களின் நலனைக் குறிவைப்பதே அன்றி பொதுவான உலக நலம், உலக மக்களின் நலன் என்பதானது வெறும் புரட்டே.

சுமார் ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளின் கவனம் ஆசியா நாடுகள் மீது பாய்ந்தது. ஐரோப்பியர்கள் தங்களின் பொருட்களை விற்பதற்குச் சந்தையைத் தேடினார்கள். அதற்கு ஆசிய நாடுகள்தான் பலியாயின. வரலாற்று சான்றின்படி இங்கிலாந்து இந்தியாவைத் தம் வசப்படுத்திக் கொண்ட பின் இந்தியர்களின் பொருளாதார வாழ்க்கை பாழடைந்த நிலையை அடைந்தது என்றும், இங்கிலாந்து வளமான நாடாயிற்றாம்.

இந்தியத் துணைக்கண்டத்தில் சுரண்டல் பணியைத் தொடங்குவதற்கு முன் அங்குள்ள நாடுகள் தனித்தனி நாடுகளாக இருந்தாலும் அங்கு வாழ்ந்த மக்கள் வெளிநாடுகளுக்குப் போய் பிழைப்பைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை. ஆனால், என்றைக்கு ஐரோப்பியர்கள் குறிப்பாக, ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கால் பதித்தனரோ அப்பொழுதே அந்நாட்டு மக்களின் அவலநிலை ஆரம்பித்தது. ஆங்கிலேயர்களின் பேச்சை நம்பியதால் இந்தியத் துணைக்கண்டத்து மக்கள் பல்வேறு நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் தங்களின் பாரம்பரியத்தை இழந்தார்கள். மொழியை இழந்தார்கள். தங்களையே இழந்தார்கள். புது வாழ்வு என்ற பெயரில் எவனோ ஒருவனைத் தலையில் தூக்கிவைத்து மதிக்கும்படியான கலாச்சாரத்துக்கு வித்திட்டது. இதுதான் கடந்த ஐந்து, ஆறு நூற்றாண்டுகளாக நடந்த உலக அரசியல் நாகரிகம்.

இந்த வெள்ளைக்கார ஆதிக்கத்தை ஒடுக்கும் பொருட்டு எழுந்த பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு சுதந்திர இயக்கங்களுக்குப் பிரெஞ்சு, அமெரிக்கா போன்ற நாடுகள் முன்மாதிரியாக அமைந்தன எனலாம். பிரெஞ்சு முடியாட்சியைத் தூக்கி எறிந்தது. அமெரிக்காவில் இங்கிலாந்துடனான உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்து சுதந்திரம் கண்டது. இதைத் தொடர்ந்து, பிரிட்டன் தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை. திருடியவன் திருட்டுப் பொருளை எளிதில் விட்டுக்கொடுப்பானா? மாட்டான். அவனிடம் வெறித்தனம் இருக்கும். திருடியதைப் பாதுகாத்துக் கொள்ள துணிந்துவிடுவான். பிரிட்டனின் இந்த நிலை நீடிக்கவில்லை.

கடந்த சில நூற்றாண்டுகளாகத் தனது பலத்தில் மட்டும் நம்பியிருந்த ஐரோப்பிய நாடுகள் அப்படிப்பட்ட கொள்கை பொலிவு இழந்துவிட்டதை உணர்ந்தன. கடந்த நூற்றாண்டின் நிகழ்ந்த இரண்டு உலகப் போர்கள் இதற்குக் காரணம். முதலில் ஐரோப்பிய நாடான ரஷ்யாவைத் தோற்கடித்தது ஆசிய நாடான ஜப்பான். அடுத்து, இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனைத் தோற்கடித்து பல நாடுகளைக் கைப்பற்றிய ஜப்பான் ஒரு பெரிய வல்லரசாக வருவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியது. சீனாவையே ஆக்கிரமித்து தனது வலிமையை வெளிப்படுத்தியது. அது அமெரிக்காவுடன் மோதி பகைமையை ஏற்படுத்தி தன் அழிவைத் தேடி கொண்டது. ஹிரோஷிமா, நகாசாக்கியில் அணுகுண்டுகள் பொழிந்து கடும் நாசத்தை ஏற்படுத்தியது அமெரிக்கா. எப்படியாவது வல்லரசாக வரவேண்டும் என்ற ஜப்பானின் கனவு சிதறியது. சீனாவும் வல்லரசாக வர முயன்றது.

சமீபகாலமாக ஜப்பான் ஆசியாவில் தலைமை ஏற்க வேண்டும் என்கின்ற கருத்தை அது தட்டிக்கழித்து வருவது கண்கூடு. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் சீனா தனது வலிமையை, பிற நாடுகள் மீதான செல்வாக்கைப் பலப்படுத்தும் வகையில் புது வியூகத்துடன் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சீனாவின் அரசியல் தத்துவம் பொதுவுடைமை. அதன் இராணுவம் மக்கள் விடுதலை இராணுவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இராணுவப் படையின் நோக்கம் எங்கெல்லாம் பொதுவுடைமை தத்துவத்தைப் பரப்ப முடியுமோ அதைப் பரப்பி, உலக நாடுகள் பொதுவுடைமை தத்துவத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்வதாகும்.

மலேசியா பொதுவுடைமை தத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத நாடுகளில் ஒன்று என்பதைவிட அதை எதிர்க்கும் நாடுகளில் ஒன்றாகும். மலேசியத் தலைவர்கள் ஒரு பொழுதும் பொதுவுடைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு இந்த நாட்டில் எதிர்காலமே கிடையாது என்ற நிலை பலமடைந்துவிட்டது. அரசியல் காரணத்துக்காக அதை வைத்து எதிர்தரப்பினரை மிரட்டுவது சர்வசாதாரணம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தென்சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகள் கவலைக்கு இடமளிப்பதாகப் பல நாடுகள் கருதுகின்றன. அப்படிப்பட்ட சீன நடவடிக்கைகள் ஆசிய-பெசிஃபிக் வட்டாரத்தின் அமைதியைப் பாதிக்கும் என்ற கருத்து பலமடைந்து வருவதோடு அங்கு அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் சீனாவின் நடவடிக்கையைக் கண்காணிப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் ஆஸ்திரேலியா, ஐக்கிய முடியாட்சி (இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேய்ல்ஸ், வடக்கு இயர்லாந்து உள்ளிட்ட அமைப்பு), அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றுகூடி இந்தச் செப்டம்பர் மாதத்தில் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கையைக் கண்டுள்ளன. இதை ”அவுக்கஸ்” என்றழைக்கப்படுகிறது. இந்த உடன்படிக்கையின்படி அமெரிக்காவும், ஐக்கிய முடியாட்சியும் அணுசக்தியால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க ஆஸ்திரேலியாவுக்கு உதவும்.

இவை மேற்கத்திய இராணுவம் பசிஃபிக் வட்டாரத்தில் இருப்பதை உணர்த்துவதோடு, உறுதிப்படுத்தும். இது சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு அமைப்பு என்று வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அந்த நாட்டின் இந்தோ-பசிஃபிக் வட்டாரத்தில் பெருகிவரும் சீன இராணுவ ஆதிக்கத்தைக் குறிவைக்கிறது என்று பரவலாகக் கூறப்படுகிறது. ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது என்று சொல்லுகிறார்கள்.

இந்த ஏற்பாடு பிரெஞ்சு நாட்டை வெகுவாகப் பாதித்துள்ளது. ஏனெனில், ஆஸ்திரேலியா பன்னிரண்டு பிரெஞ்சின் நீர்முழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மதிப்பு ஆஸ்திரேலியா டாலர் தொண்ணூராயிரக் கோடியாகும் (90 பில்லியன்). இந்தப் புது அவுக்கஸ் ஒப்பந்தத்தின் விளைவு பிரெஞ்சுடனான ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா இரத்து செய்துவிட்டது. சீனா இந்த உடன்படிக்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில் வட்டார அமைதியைப் பாதிக்கும் எனவும் இது ஆஸ்திரேலியாவின் சீனா மீதான தகாத நடவடிக்கை என்று மட்டும் சொல்வதோடு நின்றுவிடவில்லை. இப்படிப்பட்ட நடவடிக்கை அமெரிக்காவின் உதவியுடன் தொடருமாயின் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அவுக்கஸ் உடன்படிக்கையை ஏற்கவில்லை. ஐரோப்பிய கூட்டமைப்பு பிரெஞ்சு நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைச் சுட்டிக்காட்டுகிறது. எல்லா ஆசிய நாடுகளின் கருத்தும் வெளிவரவில்லை. ஆனால், ஆசியான் உறுப்பு நாடுகளான இந்தோனேஷியா இந்த அவுக்கஸ் உடன்படிக்கை ஆயுதப் போட்டியைத் துரிதப்படுத்தும் என்றும், பிலிப்பீன்ஸ் இந்த வட்டார அமைதிக்கு அது தேவை என்றும் கூறுகிறது. சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கூட இந்த மூன்று நாடுகள் கண்ட உடன்படிக்கையை எதிர்க்கவில்லை.

மலேசியாவின் நிலைபாடு என்ன? இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் உசேன் கூடிய விரைவில் தாம் சீன தலைநகர் பெய்ஜிங் சென்று சீனத் தலைவர்களின் கருத்தை அறியப்போவதாகத் தெரிவித்துள்ளார். அவர்களின் கருத்து உலகமே அறிந்துவிட்டது. புதிதாக என்ன கருத்து இருக்கும்?

ஆசியான் நாடுகள் கூடிப் பேசி ஒரு நல்ல முடிவைக் காண்பதுதான் விவேகம். அதைவிடுத்து, அவுக்கஸ் உடன்படிக்கையைக் குறித்து சீனாவின் நிலைபாடு என்ன என்பதை அறிய முற்படுவது அது அனைத்துலக ரீதியில் தவறான சமிக்ஞையைத் தரக் கூடும். தென்சீனக் கடலில் சீனாவின் நிலைபாடு தென்கிழக்காசியாவின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி நியாயமானதே. அதே சமயத்தில், சீனாவின் போக்கு அமைதிக்கு வழிகோலுமா என்ற கருத்தைப் பொருட்படுத்தாது செயல்படுவது விவேகமான போக்கு அல்ல. சீனாவுடன் நட்பு தேவைதான். ஆனால், அது சரிசமமான தரத்தைக் கொண்டிருக்க வேண்டுமே அல்லாது அதைப் பெரிய அண்ணன் தரத்தில் நிறுத்திப் பார்ப்பது ஆபத்தாகும்.

ஆயுதம் போட்டி வேண்டாம். வட்டார அமைதி முக்கியம்தான். ஆனால், அதைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் யார் என்பதை நாம் அறிந்திருப்பது, தெளிவுடன் இருப்பதும் முக்கியம். ஆசியான் அமைப்பின் ஒட்டுமொத்த முடிவே பொருத்தமானது. அதே சமயத்தில், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய முடியாட்சியுடன் கொண்டிருக்கும் தற்காப்பு ஒப்பந்தத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. எதிர்காலத்தில் சீனாவின் இலக்கு எதுவாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாதுதான்; ஆனால், அது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்ற வல்லரசுகளின் போக்கைப் போன்றிருக்கிறது என்ற எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொண்டிராமல் செயல்படுவது ஆபத்தாகும்!