பூச்சோங், காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் உருமாற்றும் தலைமைத்துவம்

பள்ளியின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் உருமாற்றி, ஒவ்வொருவரின் பொறுப்பையும் கடப்பாட்டையும் உணர வைத்து, செயல்படும் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்துக் கற்றல் மேலாண்மையை மேம்படுத்துகின்ற தலைமைத்துவம் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளிக்கு வாய்த்திருக்கிறது.

இந்தப் பொன்னான தலைமைக்குச் சவால்கள் இல்லாமல் இல்லை. இறையருள் இவருக்குத் துணைநிற்கிறது. பொதுநலன் எண்ணம் கொண்டோர்க்கு, இந்தப் பூவுலகின் ஐம்பூதங்களும் அண்டவெளியும் அருவாய் இருந்து, அருளினைச் செய்யும் என்கின்றார் ஆன்மீகத் தேடல் உள்ள இப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.

அவர்தான் திருமதி கி. கற்பகம். கல்வியமைச்சின் தலைமை ஆசிரியருக்கான கல்விக்கழகத்தில் பயிற்சியைப் பெற்றவர் (NPQEL). பல ஆண்டுகள் துணைத்தலைமை ஆசிரியராக இருந்த பட்டறிவும் அவருக்கு உண்டு. அவர் தழுவியுள்ள உருமாற்றத் தலைமைத்துவமும் (Transformational leadership) பொறுப்பினைப் பகிர்ந்து வழங்கும் பகிர்ந்தளிப்புத் தலைமைத்துவமும் (Distributive Leadership) கற்றல் கற்பித்தலுக்கு முதன்மை வழங்கி, ஆசிரியருக்கு அதிகாரமும் அங்கீகாரமும் வழங்கும் கற்பித்தல் தலைமையும் (Instructional leadership) இவரிடம் நிரம்பிக் கிடப்பதைக் காணலாம்.

பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி கி. கற்பகம்

மாவட்ட நில அலுவலகத்திற்கும் மாவட்டக் கல்வி அலுவகத்திற்கும் அடிக்கடிச் சென்று, புதியப் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு 6 ஏக்கர் நிலமும் அதற்கான ஒப்புதல் மடலையும் பெற்றுத் தந்திருக்கின்றது இந்தப் பள்ளியின் தலைமைத்துவம். இன்னும் ஈராண்டுகளில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்ப்பள்ளியை உருவாக்கும் நோக்கத்தோடு வெற்றிநடை போடுகின்றது தலைமைத்துவம்.

தலைமையாசிரியர் தரும் விளக்கத்தை ஏற்று வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளும் ஆற்றலும் வலிமையும் மிகுந்த பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இவருக்குக் கூடுதல் வலிமை.

ஏழைக் குழந்தைகளையும் பெற்றோரையும் தத்தெடுக்கும் சமய இயக்கங்கள். அவர்களுக்குத் தொடர்ந்து உதவி, உருமாற்றும் நோக்கங்கள். வெறும் அரிசியும் பருப்பும் வழங்குவதோடு நின்றுவிடாமல் அந்தக் குடும்பங்களை முழுவதுமாக தத்தெடுத்து அவர்கள் கரைசேரும் வரை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பொறுப்புணர்வு.

பள்ளியின் மேம்பாட்டுக்கு உதவும் பல ஆளுமைகளைக் கொண்ட குழுவும் அங்கு இயங்குகிறது (School Improvement Team). இந்தக் குழுவில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணினி வல்லுனர்கள், பொறிஞர்கள், சமூகப் பற்றாளர்கள் எனப் பன்முகத் தன்மைமிக்க ஆளுமைகள் பயனான மதியுரை வழங்கி வருகின்றனர்.

ரோட்டரி சங்கம், லயன்சு சங்கம், சூச்சி இயக்கம் எனப் பல இயக்கங்கள் பள்ளிக்குப் பங்களிப்பு செய்கின்றன.

மாணவர்களின் உள்ளாற்றல் திறனை உயர்த்தும் அடுக்கடுக்கான திட்டங்கள். பல்வேறு வழிகளில் பன்னாட்டு அங்கீகாரம் பெறுகின்ற செயல் திட்டங்கள். மாணவர்களின் பன்மொழியாற்றல் உயர்கிறது. ஆசிரியர்கள் தாங்களாக முன்வந்து செயற்படுத்தும் பல்வேறு திட்டங்கள்.

மாணவர்கள் எண்ணிக்கைத் தொடர்ந்து இப்பள்ளியில் அதிகரித்து வருகிறது. புதிய மாணவர்களைச் சேர்ப்பதற்கு இடமில்லை. இப்பள்ளியை மாவட்டக் கல்வித்துறை மாணவர் நுழைவு விடயத்தில் கட்டுப்படுத்தட்டப் பள்ளியாக அறிவித்து விட்டது.

எனவே, 30 மாணவர்கள் இடம் கிடைக்காமல் வேறு பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலைமை. தேசியப் பள்ளியில் இருந்து மாறி தமிழ்ப்பள்ளிக்கு tukar aliran எனும் கொள்கையின் அடிப்படையில் காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளிக்கு வரத் தயாராகும் மாணவர்கள்.

பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள். மாணவரின் ஆளுமையை அதிகரிக்க வைக்கும் கற்றல் மேம்பாடும் புறப்பாட நடவடிக்கைகளும் பெற்றோரை ஈர்க்கின்றன. ஆசிய அளவில் பன்னாட்டு அளவில் அங்கீகாரங்கள் கிடைக்கின்றன.

மாணவர் எண்ணிக்கை 2018-இல் 480, 2019-இல் 530, 2021-இல் 580 என உயர்ந்து வருகிறது.

வெகு விரைவில் உலகத் தரத்தை எட்டிவிடும் இந்தக் காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளி. நம் பள்ளிகள் தலைநிமிர்ந்து நடைபோட நமக்கு பல்வேறு தரப்பினரின் உதவிகள் தேவை. அதைப் பெற்றுத்தரும் அரிய செயலைச் செய்வதுதான் தலைமைத்துவம்.

நாமும் காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் தலைமை திருமதி கற்பகத்தையும் அவருக்குத் தோள்கொடுத்து உதவிவரும் அனைத்து தரப்பினரையும் குறிப்பாக, அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தையும் அதன் தலைவர் திரு. இராஜ்குமார் குப்புசாமி அவர்களையும் பாராட்டுவோம் வாழ்த்துவோம்.

மலேசிய மண்ணில் அமரர் சா. ஆ. அன்பானந்தன் அவர்கள் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவர். அவரின் சொலவம் “நாம் பொய், நம் சேவையே மெய்”. அதை அப்படியே பின்பற்றும் நல்நெஞ்சர் திரு. இராஜ்குமார் அவர்கள்.

தலைமையாசிரியருடன், ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து கூட்டாகச் செயலாற்றும் இந்தப் பாங்கு ஒரு வெற்றி கூட்டணிக்கு உரியதாகும்.

எழுத்து :- முனைவர் இரா. குமரன் வேலு