அரசாங்கப் பணம் விரயம்: சப்ரியும் சளைத்தவரல்ல!

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் ஊழல்வாதிகள்தான் மக்கள் பணத்தைச் சூறையாடுகிறார்கள் என்றால் அரசாங்கம் கண்மூடித்தனமாகச் செய்யும் பல செலவுகளும் கூடப் பொது மக்களின் விரக்தியைச் சம்பாதிக்கிறது.

மேம்பாடு கண்டுள்ள பல நாடுகளோடு ஒப்பிடுகையில் மலேசியாவின் போக்கு முற்றிலும் வியக்கத்தக்க ஒன்றாகவே உள்ளது. குறிப்பாகக் கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் மக்களின் வரிப்பணத்தைச் செலவு செய்யும் விவகாரங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றன. ஒரு டாலராக இருந்தாலும் அதனைச் செலவு செய்வதற்கான அவசியத்தைத் தீர ஆராய்வது அவர்களுடைய வழக்கம்.

ஆனால் நம் நாட்டில் ஆண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டத்திற்குக் கிடைக்கும் அங்கீகாரத்தைப் பெரும்பாலான அரசாங்க இலாகாக்கள் தான்தோன்றித்தனமாகச் செலவு செய்வதற்கான அனுமதியாகக் கருதுகின்றன.

பொது மக்களின் வசதிக்காகத்தான் செய்யப்படுகிறது என்ற போர்வையில் ஆடம்பரமாகச் செய்யப்படும் இத்தகைய செலவுகள் உண்மையில் அரசியல்வாதிகள் தங்களுடைய நிலைகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பதற்கும்தான் என்ற உண்மையை மக்கள் அறியாமல் இல்லை.

புத்ரா ஜெயாவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ பெர்டானாவை பழுதுபார்த்து மேம்படுத்துவதற்கு 38.5 மில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்படுவதாகக் கடந்த வாரம் வெளியான தகவல் பொது மக்களின் சினத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

தனது ஆட்சியின் போது இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு வேலைகள் தொடங்கியதாக முன்னாள் பிரதமர் மஹியாடின் குறிப்பிட்டார்.

ஆனால் தான் பிரதமராக இருந்த காலத்தில் ஒரு நாள் கூட அங்குத் தங்கியதில்லை என்று அவர் கூறியதுதான் ஆச்சரியமாக உள்ளது. அப்படியென்றால் ஏன் இவ்வளவு பெரிய செலவில் மேம்பாட்டு வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் குழம்புவதிலும் நியாயம் உள்ளதுதான்.

அங்கிருந்த தளவாடப் பொருள்கள் முன்னாள் பிரதமர் நஜிபுக்குச் சொந்தமானவை என்றும் அவை அனைத்தையும் அவர் எடுத்துச் சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. அப்படியென்றால் அங்கு ஏற்கெனவே இருந்து பொருள்கள் எங்கே என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

வெளிநாட்டு தலைவர்களை உபசரிப்பதற்கு மாளிகை போன்ற அந்த வீடு பயன்படுத்தப்படுவதால் அதன் தோற்றமும் பொலிவும் சிறப்பாக இருப்பது அவசியம் என இவர்கள் நியாயம் கற்பிக்கிறார்கள். இந்தக் கடுமையான நோய்த்தொற்றின் காலக்கட்டத்தில் எந்தத் தலைவர் இங்கு வருகை மேற்கொண்டார் என்று தெரியவில்லை.

அப்படியே இருந்தாலும் இலட்சக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவுக்குக் கூடத் திண்டாடும் இந்தச் சமயத்தில் ஸ்ரீ பெர்டானாவை மேம்படுத்துவதற்கு 38.5 மில்லியன் ரிங்கிட்டைச் செலவு செய்வதில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளது என்பதுதான் மக்களின் கேள்வி.

இந்நிலையில் இரு அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களின் அலுவலகங்களை மேம்படுத்துவதற்கு ஒரு மில்லியனுக்கும் மேல் செலவு செய்யப்படுகிறது எனும் மற்றொரு தகவல் பொது மக்களுக்கு மேலும் சினமூட்டியுள்ளது.

இத்தகைய வீண் செலவுகளைத் தற்போதைய பிரதமர் இஸ்மாய்ல் சப்ரியும் ஆமோதிப்பதாகவே தெரிகிறது. தங்களுடைய வரிப்பணம் அனாவசியமாக விரயம் செய்யப்டுவதை பொது மக்கள் விரும்பவில்லை என்று தெரிந்திருந்தும் சப்ரி அதனைப் பொருள்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக மொத்தம் 69 அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களைக் கொண்டு உலகின் மிகப்பெரிய அமைச்சரவைகளில் ஒன்றை மஹியாடின் அமைத்திருந்தார். அதற்கென மாதந்தோறும் மில்லியன் கணக்கில் செலவிடப்பட்டது.

அந்தத் தவற்றைச் சப்ரி செய்யமாட்டார் என்று எதிர்பார்த்த மக்களுக்குப் பெருத்த ஏமாற்றம்தான் மிஞ்சியது. மஹியாடினிக்கு சவால் விடுவதைப் போல அதே அளவிலான அமைச்சரவையை அமைத்தது மட்டுமின்றித் தேவையில்லாத புதிய நியமனங்களையும் அவர் செய்ததுதான் மக்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

ஆஃப்கானிஸ்தான் விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகராக அனைத்துலக இஸ்லாமிய அமைப்பின் மனித உரிமை ஆணையர் அஹமட் அஸாம் நியமனம் செய்யப்படுவதாகக் கடந்த வாரம் அறிவிக்கப்படது.

முன்னதாக மஹியாடின் செய்ததைப் போலவே அமைச்சர் அந்தஸ்து கொண்ட 3 பேரைச் சிறப்புத் தூதர்களாகச் சப்ரியும் நியமித்தார்.

கிழக்காசியாவுக்கான சிறப்புத் தூதராக ரிச்சட் ரியோட்டையும் மத்தியக் கிழக்கிற்கான சிறப்புத் தூதராகப் பாஸ் கட்சித் தலைவர் ஹாடியையும் சீனாவுக்கான சிறப்புத் தூதராகத் தியோங் கிங் சிங்கையும் அவர் செய்த நியமனங்கள் பொது மக்களின் கடுமையான கண்டனங்களுக்கு ஆளானது.

இந்த நியமனங்களுக்கு ஆண்டு தோறும் மில்லியன் கணக்கில் செலவாகும் என்ற போதிலும், சப்ரி தனது அரசியல் பலத்தைத் தற்காத்துக் கொள்வதற்கு இது அவசியமாகிறது. இந்த உண்மை எல்லாருக்குமே அப்பட்டமாகத் தெரிந்த ஒன்றுதான் என்ற போதிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாட்டின் அரசியல் நிலவரம் இப்படித்தான் உள்ளது.

அந்தந்த இடங்களில் தூதர்களும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளில் ஆற்றல்மிக்க அதிகாரிகளும் ஏற்கெனவே பணியில் உள்ளதால் இந்த நியமனங்கள் எல்லாமே மக்களின் வரிப்பணத்திற்குக் கேடுதான் என்பதில் ஐயமில்லை.

நம் நாட்டில் அரசியல்வாதிகளைப் பராமரிப்பதற்குக் கோடிக் கணக்கான ரிங்கிட் அனாவசியமாகச் செலவிடப்படுவதாகவும் அவை குறைக்கப்பட வேண்டும் என்றும் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக்கைப் போன்ற முற்போக்கு சிந்தனையுடைய இளம் தலைவர்கள் அதிக அளவில் எழுச்சிக்கண்டால்தான் இது போன்ற அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.