மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – கி.சீலதாஸ்

மரண தண்டனை முழுமையாக அகற்றுவதா வேண்டாமா என்பதே இன்றைய நாகரிக உலகின் வருத்தும் கேள்வியாக உள்ளது. அக்டோபர் பத்தாம் தேதியை உலக மரண தண்டனை எதிர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் 192 உறுப்பு நாடுகளில் 140 நாடுகள் மரண தண்டனையைத் தடைசெய்துவிட்டன.

மூன்று முறை, ஐக்கிய நாடுகளின் பொது அவை பெரும்பான்மை வாக்குகளின் ஆதரவோடு மரண தண்டனையை நிறுத்தி வைக்கும்படி தீர்மானங்களை நிறைவேற்றியது. இதன்வழி மரண தண்டனையை முழுமையாகவே நிறுத்திவிட வழிகோலும் என்ற நம்பிக்கையும் வலுவடைந்தது.

ஆயினும், பல நாடுகள் குறிப்பாக, சீனா, இந்தியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உட்பட மரண தண்டனையைத் தடைசெய்ய முன்வரவில்லை. இதற்கான காரணத்தை ஆய்ந்துப் பார்த்தால் கடும் தண்டனை மூலம் குற்றச்செயல்களுக்கு நிரந்தர தீர்வுகாண முடியும் என்ற போலி நம்பிக்கையே.

மலேசியாவைப் பொருத்தவரையில் ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மரண தண்டனையை அகற்றும் கருத்தரங்கு ஒன்று முன்னாள் அமைச்சர் குலசேகரன் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. உலகின் பல நாடுகளிலிருந்து பேராளர்கள் வந்து கலந்து கொண்டார்கள். நானும் கலந்துகொண்டேன். அப்பொழுது முன்னாள் அமைச்சர் ஒருவர் மரண தண்டனையைத் தடைசெய்யும் சட்டத்தை முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் அப்துல் ரசாக் ஆதரித்ததாகவும் அதை நிறைவேற்றுவதற்குள் அவர் பதவி இழந்ததாகக் கூறினார்.

அப்படியானால், மரண தண்டனையை அகற்றும் நோக்கம் அரசிடம் இருந்தது என்று தெரிகிறது. அதே சமயத்தில், மற்றுமொரு அரசியல் பிரபலத்துடன் பேசி கொண்டிருந்தபோது ஊடகங்கள் மரண தண்டனை நீக்கத்தை ஆதரிக்கவில்லை, மாறாக அதை எதிர்ப்பதில்தான் ஆர்வமெல்லாம் என்றார்.

அரசியல் நாகரிகம் பண்படாத காலத்திலிருந்தே கடுமையான தண்டனைகள் மூலம் குற்றச்செயல்களைத் தடுத்துவிட முடியும் அல்லது குற்றச்செயல்களில் கணிசமான குறைவைக் காண முடியும் என்ற நம்பிக்கை வெறும் அகங்காரத்தின் சின்னமாகத் திகழ்ந்ததே அன்றி குற்றச்செயல்களைக் குறைக்கும் தரத்தை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை என்பது கண்கூடு.

சமயங்கள் கூட காலங்காலமாக குற்றச்செயல்கள் நரகத்துக்கு வழிகாட்டுமேயன்றி சொர்க்கத்துக்குக் கடப்பிதழாகத் திகழாது என்பதை அன்றாடம் வலியுறுத்திய போதிலும் குற்றச்செயல்கள் அல்லது சமய மரபுப்படி பாவச் செயல்களின் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை.

இப்போது விஞ்ஞானத்தின் முன்னேற்றமானது குற்றச்செயல்கள் நவீன அணுகுமுறைகளுக்கான பட்டறையாகத் திகழ்கின்றது. விஞ்ஞானம் செழிப்பான நிலமாக, அதில் புதுப்புது குற்றச்செயல்கள் முளைத்து, வளர்ந்து ஆபத்தான குற்றவியல் கலாச்சாரம் வளர்வதைக் காண்கிறோம்.

சமய வேறுபாடு சமயங்களிடையே பொறுமையற்ற தரம். தம் சமயமே சிறந்தது, பிற சமயங்களை இழித்தும், பழித்தும் வசைபாடுவதும், ஒரு சமயத்தைச் சார்ந்தவர் மட்டும்தான் சொர்க்கத்திற்குப் போவதற்கான தகுதியைக் கொண்டிருப்பது போலவும் மற்ற சமயத்தினருக்கு நரகம்தான் இறுதி குடியிருப்பு என்று ஏளனமாகப் பேசுவது, வர்ணிப்பது வாழையடி வாழையாக வளர்ந்துவிட்ட மனித சுபாவமாகும். இன்றைய விஞ்ஞான உலகில் இந்தப் பழக்கம் துரிதமாகப் பரவுவதைக் காண்கிறோம்.

சமயம் மனிதனின் தவறான எண்ணங்களை, நடவடிக்கைகளைத் திருத்தும் பொருட்டு உருவெடுத்திருக்கலாம். ஆனால், நடப்பது என்ன? சமயம் மனிதனை ஒரு வட்டத்துக்குள் வைத்து அவனின் அறிவு வளர்ச்சியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மையைத்தான் கொண்டிருக்கிறது. என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது; நிற்க, ஒரு கோட்பாட்டை அல்லது வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் காண விழைந்த ஞானிகளும், தீர்க்கத்தரிசிகளும் உண்மையை விளக்கினார்களேயன்றி தங்களின் விளக்கம் ஒரு கோட்பாடாக வளர்ந்து மனிதனை மயக்க நிலைக்குக் கொண்டு செல்லும் தன்மையைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

நடப்பது என்ன? உண்மையை உரைத்தவர்களின் பெயரைப் பயன்படுத்தி ஒரு சமய அல்லது அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி அவர்கள் கண்ட இயக்கத்தின் வலிமையைக் கொண்டு ஒரு சாரார், அவர்கள் சிறுபான்மையினர் என்றபோதிலும், பெரும்பான்மையினரைக் கட்டுப்படுத்தினர்.

இதுவே வரலாறு செப்பும் உண்மை. சாக்ரடீஸ் உண்மையைத் தேடச் சொன்னார். அவர் மாணவன் பிளேட்டோ, சாக்ரடீஸின் புகழைப் பரப்பியபோதிலும் அது ஒரு சமய இயக்கமாகவோ, அரசியல் இயக்கமாகவோ வடிவம் பெறாமல் அறிவு வளர்ச்சியை வலிமைப்படுத்தும் தத்துவமாகத் திகழ்கிறது. பிளேட்டோவின் மாணவன் அரிஸ்டோட்டல் வெளியிட்ட பல கருத்துக்களைச் சில சமயங்கள் போற்றி ஏற்றுக்கொண்டு அவற்றின் சமயத் தத்துவத்தில் இணைத்துக் கொண்டன.

எனவே, சமயம் மனிதனின் தடுமாறும் மனதைக் கட்டுப்படுத்த செயல்படத் தொடங்கி இறுதியில் அவனைக் கற்பனை உலகை நம்பி வாழும் மிருகமாக மாற்றிவிட்டதே அன்றி சிந்திக்கும் ஆற்றலுடைய, மனிதநேயமுடைய மனிதனாக மாற உதவவில்லை. இதையே அரிஸ்டோட்டல் “மனிதன் பூரணமாக்கப்பட்டால் அவன் மிருகங்களிலேயே சிறப்பானவன். ஆனால், அவன் சட்டத்திலிருந்தும் நீதியிலிருந்தும் அகற்றப்பட்டால் அவன் எல்லாவற்றையும்விட மோசமானவன். அவனிடம் அறம் இல்லையெனில், அவன் தீங்கானவனாகவும் காட்டுமிராண்டியாகவும் திகழ்வான்” என அழகாகச் சொல்கிறார்.

அரிஸ்டோட்டல் மனிதனைக் குமுகாய மிருகம் (social animal) என்றார். காலம் மாறிவிட்டது. மனிதனைச் சமயங்கள் மாற்றிவிட்டன, சமய மிருகமாக மாற்றிவிட்டன. உடலில் துரிதமாக நஞ்சு பரவுவதுபோல் சமயமும், அரசியலும் கலந்து நஞ்சுபோல் பரவி சமுதாய ஒற்றுமையைக் கொன்றுவிடுகிறது. பிறகு சமயம், அரசியல், வாழ்வுமுறை மாறிவிட்டது. மாறிக்கொண்டே வந்தது. இன்றும் மாறிக்கொண்டே இருக்கிறது.

குமுகாய மிருகம் சமய மிருகமாக மாறியது. பதினேழு, பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் அரசியல் மிருகமாக மாறினான். ஆனால், அவன் மனிதநேயத்தை மதிக்கும் மனிதனாக ஒருபோதும் திகழாதது மனிதகுலத்தின் சாபக்கேடே.

மன்னராட்சி வையகமெங்கும் பரவியிருந்தபோது அரசியல் இயக்கங்கள் தலைதூக்க முடியாத நிலை பரவலாக இருந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. மன்னர்களின் ஆட்சி ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காதவையாம். மன்னர்களின் விருப்பப்படியே நடக்க வேண்டும். மன்னர்களையோ அல்லது அவர்கள் ஆட்சி வழிமுறைகளை எதிர்த்தால் கொடுமையான விளைவுகளை அனுபவிக்க நேரிட்டது. மரண தண்டனை அவர்களின் படுபயங்கரமான ஆயுதமாக இருந்தது.

1917இல் இரஷியாவில் அரசியல் மாற்றம் காணப்பட்டது. கம்யூனிஸ ஆட்சி அங்கு ஏற்பட்டது. இது காலனித்துவ நாடுகளுக்கும், மன்னராட்சி நாடுகளுக்கும் கடும் எச்சரிக்கையாக அமைந்தது. கம்யூனிஸத்தை எதிர்ப்பதில் அமெரிக்காவும், பிரிட்டனும் முழுமூச்சாக இறங்கின. ஜனநாயகத்துக்கும்,

கம்யூனிஸத்துக்கும் ஏற்பட்ட அரசியல் மோதல் உலகில் அரசியல் வன்முறைக்கு வித்திட்டதை நிராகரிக்க முடியுமா என்ன? அரசியலின் பெயரில் கொலைகள் செய்யப்பட்டன. அப்படிப்பட்ட காரியங்களில் இறங்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அவர்களின் கொலை நடவடிக்கைகளால் பாதிப்புற்றவர்களின் அவலத்தை எவரும் சிந்தித்ததில்லை, தீர்க்கவும் இல்லை!

எனவே, ஒரு சாராரின் கொள்கைகளை ஏற்காதவர்களுக்கு மரணத்தை விளைவிப்பது பண்டை காலத்திலிருந்து வரும் கொடுமையான கலாச்சாரமாகும். அந்தக் கலாச்சாரத்தைக் கைவிட விரும்பாத சமுதாயத்தைத்தான் நாம் கண்டு கொண்டிருக்கிறோம். எனவே, மரண தண்டனை வேண்டாம் எனக் கோருபவர்கள் உலகத்துக்கு மரணத்தைப் போராட்ட ஆயுதமாகப் பயன்படுத்துவோரைத் திருத்த முயற்சிக்காதது ஏன் என்று வினவத் தோன்றுமல்லவா?

குற்றவியல் சட்டம் அல்லது வேறு பல குற்ற நடவடிக்கைகளைச் செய்தவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்கிறார்கள். இந்த இயக்கத்தை முன்நின்று நடத்துபவர்கள் மரண தண்டனைக்கு உட்பட்டவர்களின் குடும்பத்தாரின் கடும் வேதனைகளைக் குறிப்பிடுகிறார்கள்.

அவர்கள் மீது பரிதாப அலை மோதச்செய்வது இயல்பாகிவிட்டது. அதே சமயத்தில், நிரபராதியான ஒருவரைக் கொல்லப்பட்டவரின் குடும்பம் படும் அவலத்தை யாராவது பேசுகிறார்களா? கிடையாது! பெருமளவில் போதைப்பொருள் கொள்முதல் செய்வோரின் செயல் சமுதாயத்தையே பாதிக்கிறதே, சமுதாயமே அவதிப்படுகிறதே. அதைக் கவனிப்பவர்கள் யார்? இந்த இரண்டு வித்தியாசமான கருத்துக்கள் இருப்பதையும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

எனவே, மரண தண்டனை வேண்டாம் என்பவர்கள் அந்தக் கொலையில் பலியானவர்களைப் பற்றி, அவர்களின் குடும்பத்தைப் பற்றி கரிசனம் காட்டாதது ஏற்புடையதா? அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் அவதி பெரிதா என்ற விவாதம் எப்பொழுதும் இருக்கும். பொதுவாக, மரண தண்டனையை அகற்றிவிட வேண்டுமென்று வலியுறுத்திய ஒரு அரசியல் தலைவர் அடுத்து நிகழ்ந்த ஒரு பயங்கர கொலையை அறிந்ததும் இதுபோன்ற கொடூர கொலைகளுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்றார். அப்படியானால் கொல்லப்படும் முறையைப் பொருத்து மரண தண்டனை விதிப்பதா என்று கேட்கத் தோன்றும் அல்லவா?

மரண தண்டனை என்றால் உயிர் பறிப்பு என்று பொருள்படும். உலக நாடுகள், அரசியல் கோட்பாடுகளை வலியுறுத்துபவர்கள், சமயத்தைப் போற்றுபவர்கள் அனைவரும் வன்முறையை, மரணத்தை விளைவிக்கும் எல்லா நடவடிக்கைகளையும் புறக்கணிக்க வேண்டும், துறக்க வேண்டும், தடைசெய்ய வேண்டும். அப்படியானால் அரசியல், சமயக் கோட்பாட்டின் பெயரில் மரணம் விளைவிப்பதை ஐநா தடைசெய்ய வேண்டும்.

விஞ்ஞானம் அஞ்ஞான இருளை நீக்கும்போது மனிதன் சமமானவன். அவனுக்கு மனிதநேயத்தின் மீது நம்பிக்கையும், மதிப்பும் மேலிட்டு அவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கினான். இப்படிப்பட்ட முன்னேற்ற பாதையில் நகரும்போது  பழைய அடக்குமுறை சட்டங்களும், வழிமுறைகளும், மரபுகளும் மனிதநேயத்துக்குக் கட்டுப்பட வேண்டுமென்ற கருத்து மேவி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

அந்த மனிதநேய அணுகுமுறையில் ஒன்றுதான் மரண தண்டனையைத் துறக்க வேண்டும் என்கின்ற இயக்கம். இந்த அணுகுமுறை சமயவாதிகளாலும் அரசியல்வாதிகளாலும் எப்படி காணப்படுகிறது? அதுதான் முக்கியம்!

கொலை செய்யப்பட்டவர், அவரின் குடும்பம் படும் அவதி ஒருபுறம்; கொலை செய்தார் என்ற குற்றத்தில் தண்டிக்கப்பட்டவரின் குடும்பத்தின் அவலம் ஒருபுறம். இரண்டுமே வேதனையைத் தருகிறது. ஆனால், அதில் எவரின் அவலத்தின் கொடுமை மிகுந்திருக்கும் என்ற ஆய்வு நியாயமானதாகத் தெரியவில்லை. மரண தண்டனை வேண்டாம் என்பது ஒரு அரசியல் கோரிக்கையாக மாறிவிட்டது. மனிதநேயத்துடன் பார்க்கும்போது இயற்கை மரணம் ஒன்றைத் தவிர எல்லாவிதமான உயிரைப் பறிக்கும் குணத்தை தடைசெய்வது நியாயமே!