இந்தியர்களுக்கு அரசாங்கம் ஒதுக்கும் நிதி நல்ல பலனை அளிக்க வேண்டுமானால், அதன் பயன்பாட்டு வழிமுறைகள் முழுமையாக மாற்றப்பட் வேண்டும். அரசாங்கத்தின் கடமையாக இருக்கும் கல்வி, திறன் பயிற்சி, இளைஞர் பயிற்சி போன்றவை அவை சார்ந்த அமைச்சுகளின் வழி மேற்கொள்ளப்படவேண்டும். மித்ரா நிதியின் நோக்கம், வறுமையில் சிக்கியுள்ள இந்திய குடும்பங்களின் மீட்புக்கு தகுந்த நீண்டகால முதலீட்டு திட்டங்களிக்கு அளிக்கப்பட் வேண்டும் என்கிறார் குணராஜ்.
தேசியக் கூட்டணி ஆட்சியிலும் தற்பொழுது பெயர் குறிப்பிடப்படாத அம்னோ தலைமையிலான ஆட்சியிலும் ஒற்றுமைத் துறை அமைச்சராக இருக்கும் ஹலிமாவின் பொறுப்பில் உள்ள மித்ராவின் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அண்மைக்காலமாக ஊடகங்களில் தொடர்ந்து செய்தி பரவிவருவது மலேசிய இந்தியச் சமுதாயத்தின்பால் அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர்களிடையே மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளதாகச் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார்.
தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் செடிக் என்னும் பெயருடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மலேசிய இந்தியர்களுக்கான சமூக-பொருளாதார-கல்வி-ஆன்மிக மேம்பாட்டை இலக்காகக் கொண்டது.
தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் பிரதமர் துறையின் கண்காணிப்பிலும் ம.இ.கா. அமைச்சராக இருந்த டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் ஒருங்கிணைப்பிலும் செயல்பட்ட செடிக், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்த நேரத்தில் ஒற்றுமைத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த வேதமுர்த்தியின் முழுக் கட்டுப்பாட்டில் செயல்படத் தொடங்கியது.
செடிக் நிருவாகக் கட்டமைப்பிலும் செயல்பாட்டிலும் முழு மாற்றம் ஏற்பட்டு, அதன் பெயரும் மித்ரா என்று மாற்றப்பட்டது.
நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி ஏறக்குறைய இரு வருடங்களில் கவிழ்ந்த நிலையில், வாக்களித்த மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டு அணிமாறிவர்களும் 14-ஆவது பொதுத் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களும் கூட்டு சேர்ந்து கொல்லைப்புற ஆட்சியை அமைத்தனர். அப்பொழுதும் மித்ரா நிருவாகம், ஒற்றுமைத் துறையின்கீழ்ச் செயல்படும் முறை தொடர்ந்தது. ஆனால், இந்திய அமைச்சர்களின் கண்காணிப்பில் இருந்த நிலைமாறி, அம்னோவைச் சேர்ந்த ஹலிமாவின் பொறுப்பின்கீழ் வந்தது.
தேசியக் கூட்டணி என்னும் பெயரில் நாட்டை ஆண்ட கொல்லைப்புறக் கூட்டணி ஆட்சியும் குறுகிய காலத்தில் கலைந்து கவிழ்ந்து போனதால், மக்களுக்கும் கட்சிக்கும் துரோகம் இழைத்தவர்களும் பொதுத் தேர்தலில் வீழ்த்தப்பட்டவர்களும் கலைந்து மீண்டும் ஒன்றுகூடி அதே கொல்லைப்புற ஆட்சியை மீண்டும் தொடர்கின்ற இன்றைய நிலையில், மித்ராவிற்கு ஹலிமாவே மீண்டும் பொறுப்பு வகிக்கிறார்.
மித்ராவிற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 100 மில்லியன் வெள்ளியை ஒதுக்கிய விதத்தில்தான் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டு, அதுகுறித்த செய்திகள் இப்போது ஊடகங்களை ஆக்கிரமித்து வருகின்றன. இந்தியச் சமுதாயத் தலைவர்களைக் கடந்து மற்ற இனத் தலைவர்கள் தலையிடும் அளவிற்கு மித்ரா சச்சரவு முற்றி வருகிறது. தவிர, தமிழ் ஊடகங்களில் மட்டும் இடம்பெற்று வந்த மித்ரா தொடர்பான தகவல், இப்பொழுது மற்ற மொழி ஊடகங்களிலும் இடம்பெற்று வருவது மிகுந்த வேதனையை ஏற்படுத்து-வதாக மக்கள் நீதிக் கட்சியின் கோத்தா ராஜா தொகுதி பொறுப்பாளருமான குணராஜ் குறிப்பிடுகிறார்.
அரசியல் விழிப்புணர்வும் கூட்டு மனப்பான்மையும்
உண்மையில், மத்தியக் கூட்டரசாங்கம் நல்ல நோக்கத்தில் இந்தியச் சமுதாயத்திற்காக வழங்கும் நிதி இது; இதைப்போலச் சீனர்களுக்கும் இன்னும் அதிக அளவில் நிதி வழங்கப்படுகிறது. ஆனால், அந்தச் சமுதாயத்தில் இப்படி யெல்லாம் சண்டையும் சச்சரவும் நிகழ்வதில்லை. காரணம், ‘டொங் ஸோங்’ அமைப்புகளின் மூலமாக அத்தகைய மானிய நிதி பராமரிக்கப்படுகிறது. இதற்கு மாறாக, சிறுபான்மை சமுதாயமான இந்தியர்கள் சிறிய தொகைக்காகப் பெரிய அளவில் சண்டை இட்டுக்கொள்வது நம்மிடையே அரசியல் விழிப்புணர்வும் கூட்டு மனப்பான்மையும் இன்னமும் ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.
பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டிய அரசு சாரா அமைப்புகளுக்கு நிதி பங்கிடும் போக்கை முதலில் கைவிட வேண்டும். காரணம், இதனால் மக்களுக்குப் பெரிய அளவில் நன்மை விளையவில்லை என்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.
தையல் கடை நடத்துகிறவர்கள் தையல் பயிற்சி என்ற பெயரிலும் அதைப்போல அணிச்சல் செய்வதற்கும், சமையல் பயிற்சிக்கும், முக ஒப்பனை பயிற்சிக்கும் என்ற பெயரில் எல்லாம் நிதியைப் பெறும் ஒருசில தரப்பினர்தான் தனிப்பட்ட பயன் அடைகிறார்களே தவிர, தேசிய அளவிலோ அல்லது மாநில அளவிலோ தமிழர்கள் பரந்த அளவில் பயன்பெறுவதில்லை; இதற்கிடையில், டியூஷன் வகுப்பு நடத்துகிறவர்களும் ஆலயத் தரப்பினரும் தங்கள் பங்கிற்கு நிதியைப் பெற்றுச் செல்வதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
தனி அறவாரியம்
இதை யெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால், மித்ரா நிருவாகத்திற்கென ஒரு தனி அறவாரியம் ஏற்படுத்தப்பட்டு அதன்கீழ் மித்ரா செயல்பட வேண்டும். ஆளுந்தரப்பு-எதிர்த்தரப்பு என்ற பேதமின்றி, அனைத்துக் கட்சிகளின் சார்பில் இந்திய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இந்தியச் சமுதாயத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும் வர்த்தக-பொருளாதார வல்லுநர்களும் இந்தக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
ஆண்டுதோறும் கிடைக்கும் 100 மில்லியன் வெள்ளியை ஆளாளுக்குப் பங்குபோடுவதைத் தவிர்த்துவிட்டு, இந்தியச் சமுதாயத்தின் எதிர்கால நன்மையைக் கருதி இந்த நிதியை ஒன்றுக்கு இரண்டாகப் பெருக்கும் விதத்தில் வர்த்தக நோக்கத்துடன் இந்த நிதியைப் பயன்படுத்துவது குறித்து இந்தியச் சமூகம் சிந்திக்க வேண்டும்.
வணிக முதலீட்டுடன் கட்டடங்களை வாங்குவது குறித்தும் பரிசீலனை செய்யலாம். இந்த நிலை நீடித்தால், பத்து ஆண்டுகளில் ஆயிரம் மில்லியன் வெள்ளியைக் கொண்டு ஒரு நல்ல பொருளாதாரக் கட்டமைப்பை நாம் உருவாக்க முடியும். இதற்காக, தரமான நிருவாகத்தையும் சிறந்த அலுவலகத்தையும் ஏற்படுத்துவதுதான் முதல்கட்ட வெற்றியாக அமையும்.
இது குறித்து நல்லவர்களும் பல்துறைசார் வல்லுநர்களும் ஒன்றுபட்டுச் சிந்தித்தால், மித்ரா என்பது மலேசியவாழ் இந்தியச் சமுதாயத்திற்கான ஒரு வலுவான தூணாக உருவாகும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்று சிலாங்கூர் மந்திரி பெசாரின் இந்தியச் சமுதாயத்திற்கான சிறப்பு ஆலோசகருமான டாக்டர் குணராஜ் மித்ரா குறித்துத் தன் விசாலமான பார்வையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வறுமை குடும்பங்கள்
அடிப்படையில், மலேசிய இந்தியச் சமுதாயத்தில் நலிந்த நிலையில் இருக்கும் பி-40 பிரிவு குடும்பங்களின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கட்டமைப்பு. இதைக் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமே அல்லாமல் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கெல்லாம் அரசு சாரா அமைப்பு தேவையில்லை. அது கல்வி அமைச்சின் கடப்பாடு ஆகும்.
அரசு சாரா இயக்கங்கள் என்றால் ரோட்டரி கிளாப், லயன்ஸ் கிளாப் போன்ற அமைப்புகளைப் போலத் தாமாக இயங்க வேண்டும். மாறாக, சமூக மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியைப் பங்கிட்டுக் கொள்ள இத்தகைய அமைப்புகள் தேவைதானா என்று நம்மை நாமே பரிசீலனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது.
சமுதாயத்தின்பால் அக்கறையும் நாட்டமும் கொண்டவர்கள் கலந்து ஆலோசித்து ஒரு தீர்க்கமான முடிவை எட்டுவோம்; வாருங்கள் அனைவரும் இணைந்து நல்ல முடிவைக் காண்போம் என்கிறார் குணராஜ்.