இராகவன் கருப்பையா- எப்படிப்பட்ட குற்றமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட குற்றவாளி தண்டிக்கப்படவில்லை என்றால் குற்றச் செயல்களுக்கு முடிவே இருக்காது.
இழைக்கப்படும் குற்றத்திற்கு ஏற்ப அந்தக் குற்றவாளி ஏதாவது ஒரு வகையில் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் அத்தகைய குற்றங்கள் தொடர்வதற்கு அது உந்துதலாகத்தான் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
நம் நாட்டைப் பொறுத்த வரையில் ஒரு சில இஸ்லாமிய மதப் போதகர்களுக்கு இந்து மதத்தை இழிவுபடுத்துவதென்றால் வாயில் சர்க்கரை பொங்கள் போட்ட மாதிரிதான்.
இவர்களில் நிறைய பேர் தண்டிக்கப்படுவதில்லை என்பதே நமக்கு வேதனையளிக்கும் விசயமாக உள்ளது.
ஆகக் கடைசியாக ஷாக்கிர் நசோஹா எனும் ஒரு இஸ்லாமிய மதப் போதகர் பிற மதத்தை இழிவுபடுத்திப் பேசிய ஒரூ காணொலி இம்மாதத் தொடக்கத்தில் சமூக வலைதளங்களில் மிக அதிகமாகப் பகிரப்பட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவருக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் எண்ணிலடங்காத் தனிப்பட்டவர்களும் அரசு சாரா இயக்கங்களும் காவல் துறையில் புகார் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து தாங்கள் விசாரணையைத் தொடக்கியுள்ளதாகக் காவல் துறையினர் அறிவித்துள்ள போதிலும் இவ்வளவு பேர் புகாரளிக்கும் வரையில் ஏன் அவர்கள் காத்திருக்க வேண்டும் எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.
தற்போது ஏறக்குறைய 2 வாரங்களைக் கடந்துள்ள நிலையில் அவ்விசாரணை தொடர்பான எவ்விதத் தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையே கெடாவில் ஒரு பள்ளிவாசலின் வளாகத்திற்குள் தான் நிகழ்த்திய அந்த உரையை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்றும் அதன் உள்ளடக்கம் இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் என்றும் அவர் கூறிய விளக்கம் ஏற்புடையதாக இல்லை. சட்டத்திற்கு விரோதமான கருத்துகளை எந்த இடத்தில் யார் முன்னிலையில் வெளியிட்டாலும் குற்றம் குற்றம்தானே!
இந்து மதத்திற்குத் தொடர்ந்து சவாலாக இருந்து வரும் மற்றொரு நபர் ஸம்ரி வினோத். இந்து மதத்தையும் இந்துக் கடவுள்களையும் சிறுமைப்படுத்திப் பேசியதாக அவருக்கெதிராக நூற்றுக்கணக்கான புகார்கள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன. இருந்த போதிலும் இதுநாள் வரையில் அவர் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அரசாங்கத்தில் யாருக்கு இவர் செல்லப் பிள்ளையாக இருக்கிறார், ஏன் இவர் தண்டிக்கப்படுவதில்லை, இவருடைய இந்தத் துணிச்சலுக்கு யார் பின்னணி போன்ற குழப்பங்கள் மக்களிடையே நீண்ட நாள்களாக இருந்து வருகிறது.
ஒரு அனைத்துலகப் பயங்கரவாதி என உலகின் பல நாடுகள் முத்திரை குத்தியுள்ள ஸாக்கிர் நாய்க்கும் அப்படிதான். அவரைக் கைது செய்யவிருந்த இந்தியச் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவி ஓடிவந்து இங்கு ஒளிந்துகொண்டிருக்கும் அவருக்கு மலேசிய அரசாங்கம் நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கியுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நல்லெண்ணத்தை ஒரு அங்கீகாரமாக எடுத்துக் கொண்ட அவர் இதர மதங்களைப் பற்றிப் பல இடங்களில் மானாவாரியாகப் பேசிப் பல்வேறு தரப்பினரின் சினத்திற்குள்ளானது நாம் அறிந்த ஒன்றே.
ஆயிரக்கணக்கான பொது மக்கள் மட்டுமின்றி நம் இனம் சார்புடைய பிரதான அரசியல் தலைவர்களும் கூட அவருக்கு எதிராகப் பல்வேறு புகார்கள் செய்தார்கள். இருந்த போதிலும் அவர் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டாரே தவிர நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை.
ஆனால் பக்காத்தான் ஆட்சியின் போது அரசாங்கம் அவருக்கு வாய்ப் பூட்டுப் போட்டது. எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தக்கூடாது என அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
அந்தத் தடையுத்தரவு அப்போதைய அரசாங்கத்தின் ஆணையே தவிர அது ஒரு சட்ட ரீதியான தண்டனை கிடையாது. எனவே நடப்பு அரசாங்கம் அதனை மாற்றியமைக்க வெகு நேரம் பிடிக்காது. அப்படி அது வாபஸ் பெறப்பட்டால் ஸாக்கிர் நாய்க்கைப் பொறுத்த வரையில் ‘பழைய குருடி கதவைத் திறடி’தான்.
இவர்கள் அனைவருமே பிற மதத்தைச் சீண்டாமல், சிறுமைப்படுத்தாமல் தங்களுடைய மதத்தைப் பற்றி மட்டுமே பேசுவதை அரசாங்கம் உறுதி செய்தல் அவசியம். அப்படி ஒரு நிலையை நீதிமன்றத்தால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.
பெரும்பாலான சமயங்களில் விசாரணைகளின் முடிவில் ‘மேல் நடவடிக்கை இல்லை’ எனக் காவல் துறையினர் அறிவிக்கின்றனர். சில வேளைகளில் சட்டத்துறை அலுவலகம் கூட அதே போன்ற முடிவைச் செய்கின்றது.
அப்படியென்றால் பிற மதத்தைச் சிறுமைப்படுத்திப் பேசுவது தவறு இல்லையா என்ற கேள்வி மக்கள் மனதை வருடவே செய்கிறது.அது மட்டுமின்றித் தவறு செய்பவர்கள் அப்படியொரு நிலைப்பாட்டைத் தங்களுடைய அடாவடிச் செயல்களுக்கு அங்கீகாரமாகவோ உந்துதலாகவோ எடுத்துக் கொள்வதாகத் தெரிகிறது. அதுதான் தற்போது நம் நாட்டில் நிலவி வரும் சூழல் என்பதை யாராலும் மறுக்க இயலாது.
ஆக இத்தகைய குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் காவல் நிலையத்தோடு அல்லது சட்டத்துறை அலுவலகத்தோடு நின்றுவிடாமல் நீதிமன்றம் வரையில் சென்றாலே ஒழிய இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை நம்மால் காண இயலாது.