அரசியல் முதிர்வை இழந்தோம், உணர்வை இழக்கலாமா? – கி.சீலதாஸ்

ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதார் நல்லிணக்கத்துடன் ஒரு கிராமத்தில் வாழ்கின்றனர் என்ற தலைப்புச் செய்தியை வெளியிட்டது. சரவாக்கில் உள்ள டாருள் இஸ்லாம், பிடாயு இஸ்லாமியர்களைக் கொண்ட பிளிம்பிங் கிராமத்தின் சுற்றுப்புறத்தில் கிறிஸ்தவர் சமுகத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது.

இந்தக் கிராமத்தில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் கிறிஸ்துவ உறவினர்களோடு உறுதியான உறவு கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேறுபட்ட சமய பழக்க வழக்கங்களை இரு மதத்தினரும் கொண்டிருப்பதானது அவர்களிடையே நிலவும் உறுதியான நட்புறவு முறைக்கு யாதொரு களங்கமும் நேராத வகையில் வாழ்கின்றனர் என்று அந்தச் செய்தி தெளிவுபடுத்தியது.

அந்தப் பிளிம்பிங் கிராமவாசி ஒருவர் தங்கள் உறவு முறையைப் பற்றிக் கூறும்போது, “நாங்கள் வெவ்வேறு சமயங்களைச் சார்ந்திருந்த போதிலும் எங்களுடைய பிடாயு கலாச்சாரத்தைக் கைவிடாமல் தொடர்ந்து பேணுகிறோம். அதுதான் முக்கியம்”. நோன்புப் பெருநாள், கிறிஸ்மஸ், காவாய் தின பண்டிகை ஆகியவைகளைக் கொண்டாடும்போது சமயப் பாகுபாடின்றி இணைந்து கொண்டாடுவதாக அந்தக் கிராமவாசி கூறினார்.

இந்தச் செய்தி மிகவும் சிறப்பானது. சமய வேறுபாட்டை ஒரு பக்கம் கழற்றி வைத்துவிட்டு அவர்களிடையே பாரம்பரியமாக நிலவும் கலாச்சார பிடிமானம், அதைப் பாதுகாக்கும் ஒத்திசைவுக்கு வழங்கப்படும் மரியாதை, நல்லிணக்கம், பரஸ்பர நம்பிக்கை, மனிதநேய அணுகுமுறை யாவும் அவர்களிடையே ஊறிவிட்ட பாரம்பரிய வழக்கத்தை ஒழுகுவதில்தான் மகிழ்வைக் காண முடியும் என்று உணர்ந்த, உணர்த்தும் ஓர் உயரிய தத்துவத்தைக் காணலாம். அப்படிப்பட்ட வாழ்க்கை முறை, பாரம்பரிய கலாச்சார அணுகுமுறை பண்டைகாலத்திலிருந்து வழங்கிவரும் கலாச்சாரத்தைச் சமய மேடையில் பலி கொடுக்காமல் பேணப்படுவது அறிவு முதிர்வுக்கு, மனிதநேய அணுகுமுறைக்குக் கொடுக்கப்படும் மரியாதையாகும்.

சமயம் ஆன்மா சம்பந்தமான உணர்வுகளை வளர்க்கலாம், பாதுகாக்கலாம். கலாச்சாரம் சமயக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. ஓர் இனத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் சமயத்திற்கு முன்பு, அந்தச் சமுதாயத்தால் வளர்க்கப்பட்ட, பேணிகாக்கப்பட்ட கலாச்சாரம்தான் முதலில் இயங்கியது என்பதைக் காண முடியும். சமயத்தின் வருகை அதற்குப் பின்பட்டது என்பதை உணராததால்தான் மனிதநேய உணர்வுகள் பொலிவிழந்து, மனித உறவுக்குத் தீங்கு விளைவிக்கிறது எனலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட சிறப்புமிகு பிளிம்பிங் கிராம செய்தியை வெளியிட்ட ஆங்கில இதழுக்கு (தி ஸ்டார்) நன்றி கூற வேண்டும். இன்றைய நாட்டு சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமானதாகும். சிறப்பிலும் சிறப்பு என்னவெனில், இந்தப் பரஸ்பர உறவு பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான சரவாக்கில் இன்றளவும் பேணப்படுகிறது என்ற உண்மை தீபகற்ப மலேசியர்களுக்கு ஒரு பாடமாக அமைகின்றது.

சபா மாநிலத்தில் கூட சரவாக்கில் காணப்படும் கலாச்சார நல்லுணர்வு நிலவுவதைக் காணலாம். அதோடு அந்தக் கலாச்சாரத்தைக் கைவிடாமல் தொடர்ந்து பாதுகாத்து, மதிப்பளித்து பேணுவது, சமய வேறுபாடின்றி கொண்டாடுவது மனிதத்தன்மையின் உயரிய தரத்தைக் காட்டுகிறது. இந்தச் செய்தியைப் படித்ததும் பலருக்கு ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருக்கலாம்.

ஏனெனில், கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் தீபகற்ப மலேசியாவில் நிகழ்ந்த சில மாற்றங்கள் சபா, சரவாக்கில் தொடர்ந்து காணப்பெறும் இன, சமய நல்லிணக்கம் தீபகற்ப மலேசியாவில் காண முடியவில்லையே என்ற ஏக்கமாகவும் இருக்கலாம்!

1980-களுக்குப் பின்னர் பிறந்த தீபகற்ப மலேசியர்களுக்குக் கடந்த கால, அதாவது மலாயா கூட்டரசு சுதந்திரம் பெறுவதற்கு முன்னமும், அதற்குப் பிறகும் நிலவிய இன நல்லிணக்கம் படிப்படியாக எண்பதுகளில் மங்கத் தொடங்கி இன்று, இன நல்லிணக்கம் என்பது வெறும் அரசியல் பேச்சாக மட்டும் இருப்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது. இது வேதனையான சம்பவமாகும்.

அதனால், கடந்த காலத்தைச் சற்று கூர்ந்து கவனிப்பதே அறிவுடைய செயலாகும். சிங்கப்பூர், சபா, சரவாக், புருணை ஆகிய பிரதேசங்கள் மலாயா கூட்டரசுடன் இணைய வேண்டுமெனப் பிரிட்டிஷ் அரசு விரும்பியதை நாம் ஏனோ மறந்துவிடுகிறோம். பிரிட்டிஷ் அரசு எந்த நோக்கத்துடன் அப்படிப்பட்ட இணைப்பை விரும்பியது என்பதை ஆராய்ந்துப் பார்க்கும் பொழுது உண்மை புலப்படும்.

இந்தோ-சீனா நாடுகள் அதாவது கம்போடியா, லாவோஸ், வியட்நாம் மற்றும் கொரியா போன்ற நாடுகள் கம்யூனிஸத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்த வட்டாரத்தில் மேலைநாட்டவர்களின் முதலீடு பாதிப்புறும். அதே சமயத்தில், இரண்டாம் உலகப்போரில் படுமோசமான பொருளாதார இழப்பைக் கண்ட பிரிட்டன் இந்த வட்டாரத்தில் தொடர்ந்து தமது இராணுவச் செல்வாக்கைப் பாதுகாக்க போதுமான பொருளாதாரச் செழுமையைக் கொண்டிருக்கவில்லை. ஆகையால், கம்யூனிஸத்தை எதிர்க்கும் மலாயா, குறிப்பாக அன்றைய மலாயா பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அதற்கு ஆதரவாகச் செயல்படும் சிங்கப்பூரின் லீ குவான் யூ போன்றோரின் ஆதரவு பிரிட்டனுக்குத் தேவைப்பட்டது.

கம்யூனிஸத்தை எதிர்க்கும் சக்தி கொண்ட ஓர் அமைப்பு, பிரிட்டிஷார் மற்றும் மேற்கத்திய நாடுகளின் முதலீடு தமது சொந்த பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் அடிப்படை நோக்கங்கள் மலேசியா அமைப்பதற்குக் காரணமாய் இருந்தன. அதே சமயத்தில், சபா, சரவாக் மக்கள் அரசியலில் அனுபவம் இல்லாதவர்கள். அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை. அந்தப் பாதுகாப்பை யார் தருவார்? பிரிட்டனுக்கு அந்த வசதி குறைந்த நிலையில் மலேசிய அமைப்பு ஒன்றே தீர்வு என அது தீர்மானித்தது. அதை ஆதரித்தது. இறுதியில், மலேசியா அமையும் தருவாயில் புருணை நாடு மலேசியாவுடன் இணைவதைத் தவிர்த்தது.

இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில் சபா, சரவாக் மக்கள் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். எனவே, அவர்களைப் பாதுகாக்க வேண்டுமெனப் பிரிட்டன் விரும்பியது. அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையிலான அரசும் ஏற்றுக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். நடந்தது என்ன?

1963 செப்டம்பர் 16ஆம் நாள் மலேசியா அமைந்தது. ஆகஸ்ட் 9, 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் நீக்கப்பட்டது. இவற்றிற்குப் பிறகு நடந்தவை யாவும் நியாயமானவையா? நீதிக்கு உட்பட்டவையா? மனிதநேயத்துக்கு உட்பட்டவையா? 1963ஆம் ஆண்டு சபா, சரவாக் செய்து கொண்ட ஒப்பந்தம் மதிக்கப்பட்டதா என்பன போன்ற கேள்விகள் எழத் தொடங்கின.

இவையாவும் வரலாற்று உண்மைகள். இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மலாயா தீபகற்பத்தில் என்ன நடந்தது? படிப்படியாக இன ஒற்றுமையுணர்வு, சமயப் புரிந்துணர்வு, மனிதநேய பரஸ்பர நம்பிக்கை தேய தொடங்கி; இன, சமய வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இன, சமய புரிந்துணர்வு, நல்லெண்ணம், நட்புறவுக்கு துன் டாக்டர் மகாதீர் முகம்மது பிரதமர் பொறுப்பை ஏற்கும் வரை பயங்கரமான இன, சமய வெறுப்புணர்வு வளர்வது தடுக்கப்பட்டது எனலாம். எல்லா இனங்களும், சமயங்களும் இணைந்துச் செயல்பட்டால் பலன் கிட்டும் என்ற நம்பிக்கை வலுவாக இருந்தது.

இன, சமயப் பிரச்சினை வளர விட்டால் அது நாட்டின் நலனைக் குட்டிச்சுவராக்கிவிடும் என்று நம்பப்பட்டது. அதுவும் சரியான முடிவு என்று சொல்லலாம். மகாதீர் பிரதமர் பொறுப்பை ஏற்றதும் நிலைமை மாறியது. காலங்காலமாக பல இனங்களிடையே, சமயங்களிடையே நிலவிய கொஞ்சநஞ்ச நட்புணர்வின் மகத்துவம் மறைய தொடங்கியது.

இன்று சபா, சரவாக்கில் பெருமையாகப் பேசப்படும் இன, சமய ஒற்றுமை எண்பதுகள் வரை தீபகற்ப மலேசியாவிலும் ஒருவகையில் நிலவியது. எல்லா இனத்தவர்களும் ஒற்றுமையுடன், மகிழ்வுடன் அச்சமின்றி வாழ்ந்தார்கள். அந்தக் கலாச்சாரத்தை இழக்கச் செய்தவர் யார்?

1969ஆம் ஆண்டு மே பதிமூன்றாம் தேதி நிகழ்ந்த கடுமையான இனக்கலவரத்திற்குப் பிறகும் கூட நாம் புரிந்துணர்வு சித்தத்தை இழக்காமல் எல்லா இனத்தவருடனும், சமயத்தினருடனும் பழகினோம். சமயமும், இனமும் கண்ணுக்குப்படவில்லை. பரஸ்பர நம்பிக்கை, ஒற்றுமை மட்டுமே அந்த முந்தின தலைமுறையினை ஆண்டது. அதை நாம் இன்று இழந்து நிற்கிறோம். நம் முந்தின தலைவர்கள், பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் சபா, சரவாக் மக்களை அரசியல் முதிர்ச்சி பெறாதவர்கள் என்றார்கள்.

இன்று சபா, சரவாக் மக்களின் அணுகுமுறையைப் பார்க்கும்போது தீபகற்ப மலேசியர்கள் தங்கள் மூதாதையரின் அரசியல் முதிர்வைக் காற்றில் பறக்கவிட்டு விட்டனர் என்று சொல்லலாம். எனவே, யார் அரசியல் முதிர்வு பெற்றவர்கள் என்று கேட்கத் தோன்றுமே!