மதவாதப் பாஸ் கட்சியின் சுயரூபம்!

இராகவன் கருப்பையா – கடந்த ஆண்டின் முற்பகுதியில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகிப்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பை லாவகமாகக் கவ்விக் கொண்ட பாஸ் கட்சி, மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராகச் சன்னம் சன்மாக தற்போது புரியும் சகாசங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது.

கடந்த 1974ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பாரிசானில் அங்கம் வகித்து அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த அக்கட்சி சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் சுமார் 43 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாகவே இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த சமயத் தீவிரவாதப் போக்குடைய அந்தக் கட்சி அண்மைய ஆண்டுகளாக மலாய்க்காரர் அல்லாதாருக்கென ஒரு பிரிவை அமைத்து இந்திய, சீன உறுப்பினர்களையும் அரவணைத்து ஒரு சிறிய நம்பிக்கையைத் துளிர்விடச் செய்தது.

ஆனால் அவ்வளவும் வெறும் மாயைதான் எனும் உண்மையைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதன் இணை உறுப்பினர்கள் உணர்ந்தார்களா என்று தெரியாது.

‘பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறாது’ எனும் சொற்றொடருக்கு ஏற்பப் பாஸ் கட்சி அதன் சுய ரூபத்தைப் பல வகையிலும் தற்போது வெளிக்காட்டத் தொடங்கிவிட்டது.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஆணவத்தில் தான்தோன்றித்தனமாக அக்கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கண்டிக்கத் துப்பு இல்லாத இதர அரசியல்வாதிகளின் போக்கையும் மக்கள் கவனிக்காமல் இல்லை.

அந்தக் கட்சி வெறும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள போதிலும் ஆட்சி அமைக்கும கூட்டணிக்கு அதன் ஆதரவு தேவைப்படுவதால் அவர்களைப் பகைத்துத்துக் கொள்ள எந்தத் தரப்பும் தயாராய் இல்லை.

அவர்களுடைய பேச்சும் நடவடிக்கைகளும் பல வேளைகளில் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ள போதிலும் அவர்களைக் கண்டிக்கவோ தண்டிக்கவோ துணிச்சல் இல்லாத இதர அரசியல் கட்சிகளின் சுயநலப் போக்கு உண்மையிலேயே வேதனைக்குரியது.

ஷரியா எனும்  இஸ்லாமியச் சட்டங்களை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டங்களில் ஒரு பகுதியாக இஸ்லாம் அல்லாத சமயங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றின் வளர்ச்சியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது குறித்துப் பரிந்துரைக்கப்படும் எனச் சமய விவகாரங்களுக்கான துணையமைச்சர் அஹ்மாட் மர்ஸுக் அண்மையில் அறிவித்தார்.

இந்நாட்டில் எல்லாச் சமயங்களுக்கும் சம உரிமை உண்டு என அரசியலமைப்புச் சட்டத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது இவருக்குத் தெரியாதா அல்லது பிற சமயத்தை வேண்டுமென்றே சீண்டிப் பார்க்கிறாரா எனும் ஐயப்பாடு நமக்கு எழத்தான் செய்கிறது.

பாஸ் கட்சியைச் சேர்ந்த மர்ஸுக்கின் அறிக்கை நாடு தழுவிய நிலையில் அதிர்வலைகளை ஏற்படுத்திப் பிற சமயத்தவரின் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளானதை தொடர்ந்து அக்கட்சியினர் சற்றுப் பின்வாங்கியதைப் போலத் தெரிகிறது.

அதனைத் தற்காத்துப் பேசிய பாஸ் கட்சியின் உதவித் தலைவரும் சமய விவகாரங்களுக்கான மத்திய அமைச்சருமான இட்ரிஸ், அந்த அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று சமாளித்தார். முதலில் அறிக்கை வெளியிட்டுப் பிறகு நிலைமைக்கு ஏற்றவாறு மற்றவர் மீது பலி போட்டு இப்படி மழுப்புவது நம் நாட்டு அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலையாயிற்றே!

இதே போலப் பாஸ் கட்சி ஆட்சி புரியும் கெடா மாநிலத்தின் மந்திரி பெசார் சனுசி அவ்வப்போது அதிரடியாகச் செய்யும் முரட்டுத்தனமான முடிவுகளும் மலாய்க்காரர் அல்லாதாரை வெகுவாகப் பாதித்துள்ளது.

அம்மாநில மக்கள் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து அனுபவித்து வந்த தைப்பூசத் தின விடுமுறையை இவ்வாண்டு ரத்து செய்த அவர் நகராண்மைக் கழக அதிகாரிகள் பல இந்துக் கோயில்களை இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்கிய நடவடிக்கைகளைத் தற்காத்துப் பேசியதையும் நாம் இன்னும் மறக்கவில்லை.

இந்நிலையில் கெடாவில் உள்ள மெக்னம், டா மா சாய் மற்றும் டோட்டோ போன்ற 4 இலக்க எண்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் வர்த்தக உரிமங்களைப் புதுப்பிக்கப் போவதில்லை என அவர் செய்த திடீர் அறிவிப்பு கெடா மக்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டு மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மலேசிய வரலாற்றில் இம்மாதிரியான தீவிரப் போக்குடைய ஒரு சம்பவம் நிகழ்ந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூதாட்ட நடவடிக்கைகள் இஸ்லாம் மதத்திற்கு எதிரான ஒன்று என்ற போதிலும் சனூசியின் இறுமாப்பான அம்முடிவு பிற சமயத்தவரின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது என்ற அடிப்படையில் அவருக்கு எதிராகச் சில தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இதற்கிடையே நடந்து முடிந்த மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி அடைந்த படுதோல்விக்குச் சனுசியின் திமிர்தனமும் ஒரு காரணமாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

முன்னாள் பிரதமர் மஹியாடினுடன் கூட்டுச் சேர்ந்து 8 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி ஒரு வெற்றியைக் கூடப் பதிவு செய்யவில்லை.யாராக இருந்தாலும் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்று சூளுரைத்த சனுசியின் அகம்பாவம் மலாக்காவில் பிரதிபலித்துள்ளது என்றே தெரிகிறது.

அம்னோவிலும் கூட இதுபோன்ற தீவிரச் சமயவாதப் பேர்வழிகள் அவ்வப்போது முளைத்து மறைகிற போதிலும் பாஸ் கட்சியினரைப் போல அவ்வளவு அபத்தானவர்களாக அவர்கள் இருந்ததில்லை. இக்கட்சியினரை எப்பொழுதுமே சற்றுத் தொலைவில் வைத்திருப்பதே பல்லின மலேசியத் தன்மைக்குப் பாதுகாப்பாகும்.