சூதாட்டம் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும். சூதாடுவது ஆபாத்தானது; ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சூதாட்டத்தில் நாட்டுத் தலைவன் பங்குபெற்றால் நாடு அழியும் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது மகாபாரதம். பாண்டவர்களின் செல்வத்தை, புகழைக் கண்டு பொறாமை கொண்ட துரியோதனன், இயற்கையாகவே குருடனான தன் தந்தை திருதராஷ்டிரன் துணையோடு பாண்டவ யுதிஷ்டிரனைச் சூதாடச் செய்து அவனுடைய எல்லா செல்வங்களையும், இறுதியில் நாட்டையே பறித்துவிடுகிறான். இந்தக் கோணல் புத்தி எப்படிப்பட்ட கேடுகளை விளைவித்தது என்பதை மகாபாரதம் விளக்குகிறது. நாடு மட்டுமா அழிந்தது? ஒரு வம்சமே அழிந்ததைக் காண்கிறோம். திருக்குறளில் சூதாட்டத்தைப் பற்றி விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம். (காண்க: 94ஆம் அதிகாரம்)
ஊழல்தன்மை வேறுவிதமானது. சூதாடுகிறவன் தன் சொந்த நலனை, இலாபத்தை விரும்புகிறான். பேராசையோடு நெருங்குவான். அவன் சொந்த பணத்தை, பொருளை விற்று சூதாடுவான். எல்லாவற்றையும் இழந்துவிட்ட பிறகு தகாத முறையில் பணம் திரட்ட முற்படுவான். இதனால், பல சமுதாயக் கேடுகள் ஏற்படுவதும் உண்டு. இதை சமுதாயப் பிரச்சினை என்று சொல்வார்கள்.
ஊழல் புரிபவன் சொந்த பணத்தை மூலதனமாகக் கொண்டு இலாபத்தைக் காண மாட்டான். மாறாக, தமது பதவி, அதிகாரம், செல்வாக்கு போன்றவற்றைப் பயன்படுத்தி தவறான, இழிவான முறையில்; சட்டத்துக்குப் புறம்பான வகையில் பொருள் திரட்ட முற்படுகிறான். ஊழல்வாதி ஒருவனின் நன்மைக்காக, அவனின் குடும்பத்துக்காக சமுதாயத்தையே விற்று விடுபவன். ஊழல்வாதிக்குப் பாதுகாப்பு வழங்காத சட்டம், சூதாட்டக்காரனுக்கு அவனின் விருப்பத்தையும் நிறைவேற்றிக் கொள்ள அனுமதிக்கிறது விநோதமல்லவா? ஆனால், அதுதான் உண்மை. சூதாட்டம் பண்டை காலத்திலிருந்து தொடர்ந்து வரும் கலாச்சாரம். ஊழல் முன்பு இருந்தபோதிலும், இன்று காணப்படும் அளவுக்கு இருக்கவில்லை.
சூதாடுபவன் பகிரங்கமாகச் சூதாடுகிறான். சட்டம் அவனுக்கு அந்த உரிமையைத் தருகிறது. ஊழல்வாதிக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால், அரசியலில் ஊழல் பெருகிவிட்டால் அரசியல்வாதிளே ஊழலுக்கு மகத்துவம் தந்து ஆடம்பரமாக வாழ்கிறார்கள், போற்றுகிறார்கள் என்றால் இந்த அநியாயத்தை என்னவென்பது?
சூதாட்டம் ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது. எல்லா சமயங்களும் சூதாட்டத்தை எதிர்க்கின்றன. ஆனால், சில சமுதாயங்கள் சூதாட்டத்தைப் பொழுதுபோக்கு கலாச்சாரமாகக் கருதுவதையும் மறக்கலாகாது. அவர்கள் பிறருக்குத் தீங்கு நேராத வகையில் சூதாடினால் தப்பு இல்லை என்று பல நாடுகள் ஏற்றுக்கொண்டுவிட்டதைக் காணலாம்.
இந்த வட்டாரத்தை எடுத்துக்கொண்டால் சீனச் சமுதாயம் சூதாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லா இனத்தவர்களும், சமயத்தவர்களும் சூதாட்டத்தில் ஏதோ ஒரு வகையில் மகிழ்வடைகிறார்கள். நம்பி ஏமாறுவதில் ஒரு மகிழ்ச்சி என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு காலத்தில் சிங்கப்பூரில் சீனச் சமுதாயத்தினரின் சூதாட்டமானது குடும்பங்களில் பல கொடுமைகள் தலைதூக்க காரணமாக இருந்தது. சூதாடுபவர்களின் பலவீனத்தைக் கண்ட சூதாட்ட குழுமத்து உரிமையாளர்கள் பற்பல வியூகங்களை அறிமுகப்படுத்தி கோடி கணக்கில் சம்பாதித்தனர். இந்தச் சட்டத்துக்குப் புறம்பான சூதாட்டத்தைத் தடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இதைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் அரசுக்குப் பண விரயம். காவல் துறையில் சிறப்புப் பிரிவு போன்றவை அமைக்கப்பட்டபோதிலும் கள்ளச் சூதாட்டத்தைத் தடுக்கவோ, நிறுத்தவோ முடியவில்லை. இவையன்றி, கள்ளச் சூதாட்டத்து முதலாளிகள் நாடு கடத்தப்பட்டபோதிலும் சட்டத்துக்குப் புறம்பான சூதாட்ட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஏறத்தாழ ஐம்பதுகளின் இறுதியில் சிங்கப்பூர் அரசின் அணுகுமுறையில் மாற்றம் காணப்பட்டது. சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது, அதைச் சட்டப்பூர்வமாகச் செயல்பட அனுமதித்தால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். கள்ள சூதாட்டக் கட்டுப்பாடு சட்ட அமலாக்க தொடர்பான செலவும் குறையும் என்பதை உணர்ந்து செயல்பட தொடங்கியது. இதனால், சிங்கப்பூரில் மட்டுமல்ல மலேசியாவிலும் (அப்பொழுது மலாயா) ஆரம்பத்தில் மூன்று (மூன்று நம்பர்) சூதாட்டம் அனுமதிக்கப்பட்டது. குதிரை பந்தயம் முதல் மூன்று பரிசுகளின் இறுதி மூன்று எண்களைக் கொண்ட சூதாட்டம் இது. அது நல்ல வெற்றியைக் கண்டது.
காலப்போக்கில் சிங்கப்பூரில் நான்கு எண் (நான்கு நம்பர்) பந்தயம் அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கிலிருந்த கள்ள நான்கு எண் பந்தயத்தைக் கட்டுப்படுத்தி, முழுமையாக ஒழிக்கும் நோக்கத்துடன் சூதாட்ட பந்தயம் சட்டத்துக்கு உட்படுத்தப்பட்டது. மலேசியாவில் இது அறிமுகப்படுத்தபடவில்லை. ஆனால், கள்ளத்தனமாக இந்தப் பந்தயம் புகழடையத் தொடங்கியது. சிங்கப்பூர் நான்கு எண் பந்தயத்தை அறிமுகப்படுத்திய சில ஆண்டுகளிலேயே மலேசியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அறுபதுகளின் இறுதியில் டோட்டோ பந்தயம் அறிமுகப்படுத்தப்பட்டபோது சிறு நகரங்களில், தெருவோரங்களில் சிறு சாவடிகள் அமைத்து பந்தயச் சீட்டுகள் விற்கப்பட்டன.
மூன்று எண், நான்கு எண், டோட்டோ மட்டும்தான் மலேசியாவின் சூதாட்ட மனநிறைவைத் தந்தனவா? இல்லவே இல்லை! இவை வருவதற்கு முன்னர், ஐம்பதுகளில் மலாயா சீனர் சங்கம் (இப்பொழுது மலேசிய சீனர் சங்கம்) தமது அரசியலை வளப்படுத்தும் நோக்கோடு குலுக்குச்சீட்டு சூதாட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதைப் பின்பற்றியது அம்னோ! இவை இரண்டையும் பின்தள்ளியது அரசால் நடத்தப்பெற்ற சமூக நலனபிவிருத்தி குலுக்குச்சீட்டு.
இந்தச் சூதாட்டங்களுக்கு அரசு அங்கீகாரம் தந்தது ஒரு பக்கம், இன்று பற்பல நவீன பந்தய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதனால் வரும் வருமானத்தை அறப்பணிகளுக்கும், விளையாட்டு மேம்பாட்டிற்கும் செலவிடப்படுகின்றது. இந்த வருமானத்தை பாவநிதி என்றும் வர்ணிக்கப்படுகிறது.
மலேசியர்கள் பலவிதமான சூதாட்டங்களில் சட்டப்பூர்வமாகக் கலந்து கொள்வது இயல்பாகிவிட்டது எனலாம். கள்ளத்தனமாகச் சூதாட்டத்தை ஒரு தொழிலாக நடத்துபவர்கள் புது வியூகங்களை அறிமுகப்படுத்தி சூதாட்டக்காரர்களைக் கவருகிறார்கள். அவர்கள் வழங்கும் பரிசுத் தொகை பத்து விழுக்காடு கூடுதலாகவே இருக்கிறது. அவர்கள் பகிரங்கமாகவே செயல்படுகிறார்கள். கணினி வழியாகப் புது முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இவர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினர் இறங்கியபோதிலும் அது வெற்றி கண்டதா என்று சொல்ல முடியவில்லை. ஆனால், கள்ளச் சூதாட்டத்தை நடத்துபவர்கள் சட்டப்படி இயங்குபவர்களுக்கு ஈடாக இருப்பதும் அதிசயமே. இதுவும் அரசுக்குப் பல கோடி இழப்பை ஏற்படுத்துகிறது.
இதே காலகட்டத்தில் ஊழலைத் தடுக்கும் சட்டங்களும் திருத்தப்பட்டு புதுவித ஊழல் முறைகளைக் கண்டறியும் முறையும் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஊழலைச் சுத்தமாகவே ஒழிக்க முடியவில்லை, ஏனெனில், உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோர் ஊழலில் மிதக்கிறார்கள். ஊழல் வாழ்வில் மெய் மறந்து மகிழ்கிறார்கள். அந்த ஊழல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தவறிய அதிகாரத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், அவர்களின் ஊழலுக்கு எதிர்ப்பான நடவடிக்கைகள் மெச்சத்தக்கதாக இல்லையே!
சட்டப்படி இயங்கும் சூதாட்ட மையங்களை மூடச் சொல்லும் அரசியல் மேதாவிகள் இதனால் விளையும் குற்றவியலை நினைத்துப் பார்க்க மறுப்பது விசித்திரமாக இருக்கிறது. இப்பொழுது சட்டத்துக்கு உட்பட்டு நடத்தப்படும் பந்தய மையங்கள் மூடப்பட்டால் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுபவர்களின் கை ஓங்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். இதைத்தான் அரசு விரும்புகிறதா?
ஆடம்பர வாழ்க்கைக்குப் பொருள், செல்வம் தேவை; அந்தத் தேவை குறையும்போது, கிடைக்காத போது ஊழலின் தரம் பலம் பெறும். அவ்வாறு பலம் பெறும்போது நாடு சீரழிவுக்குத் தயாராகிவிடும். ரோம் சாம்ராஜ்யம் கவிழ்வதற்குக் காரணமே அளவற்ற ஆடம்பரமும், அதை ஆதரித்த ஊழலுமே ஆகும். இதை நாட்டை ஆளும் தலைவர்கள் மறக்கக்கூடாது. சூதாட்டத்தைவிட ஊழலே படுமோசமானது. அதை ஒழித்தால் பலன் கிட்டும். சட்டப்பூர்வமான சூதாட்டத்தைத் தடுத்தால் கள்ளத்தனமாக அதை நடத்துவோரின் வருமானம் கூடும். இதுவும் ஊழலுக்குத் துணையாகிவிடும்.