இந்தியர்களுக்கான அரசியல் தலைமைத்துவம் – ஓர் அலசல்

இராகவன் கருப்பையா – கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேல் துவண்டுபோய்ச் சுருண்டுகிடக்கும் நம் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு ஒரு தலைவர் வரமாட்டாரா எனும் ஏக்கம் இன்னமும் நமக்கு ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

ஆக்ககரமான ஒரு தலைமைத்துவத்திற்காக ஏங்கித் தவிக்கும் நம் சமுகத்திற்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அது எட்டாக் கனியாக இருக்கும் என்று தெளிவாகத் தெரியாத நிலையில்தான் அன்றாட வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.

தொடக்கத்திலிருந்தே ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் ம.இ.கா.விடம் அதனை எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். எத்தனையோ தடவை அக்கட்சியின் தலைமைத்துவம் மாறியுள்ள போதிலும் நம் சமூகம் காணத் துடிக்கும் அந்தத் தலைவரை கண்ணுக்கு எட்டிய வரையில் இன்னமும் காணவில்லை என்பதுதான் நிதர்சனம்.

கடந்த 1955ஆம் ஆண்டில் தேவாசரிடமிருந்து கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றத் துன் சம்பந்தன் அதற்கான அடித்தளத்தை அமைத்தார். ஆனால் அவருக்குப் பின் வந்த எல்லாத் தலைவர்களுமே ‘என்ன செய்தார்கள்’ என்ற குழப்பத்திலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை.

சம்பந்தன் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் பாட்டாளி மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தினார். தோட்டப் பாட்டாளிகளுக்கு விழிப்புணர்வைத் தந்து பத்துப் பத்தாகச் சேகரித்து அவர்களைத் தோட்ட உடமையாளர்களாக மாற்றிய அவருடைய போராட்டம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று என மூத்த பத்திரிகையாளர் இராஜன் அண்மையில் வருணித்திருந்தார்.

அவருக்கு அடுத்து 1973ஆம் ஆண்டில் கட்சிக்குத் தலைவரான மாணிக்கவாசகத்தின் காலக்கட்டத்தில்தான் தலைநகர் ஜாலான் ரஹ்மாட்டில் அமைந்துள்ள தற்போதைய தலைமையகக் கட்டிடம் உருப்பெற்றது. ஆனால் இன்று வரையில் பாமர மக்கள் அந்த வளாகத்தினுள் தாராளமாகத் துணிச்சலுடன் நுழைந்து உதவிகளைப் பெறமுடிகிறதா என்பது கேள்விக்குறிதான்.

மாணிக்கவாசகத்தின் மறைவைத் தொடர்ந்து 1979ஆம் ஆண்டில் சாமிவேலு ம.இ.கா.வின் தலைவரானார். அந்தக் கட்சியின் வரலாற்றிலேயே மிக அதிக நாள்களுக்கு, அதாவது சுமார் 31 ஆண்டுகளுக்கு அவர் தலைவராக இருந்தார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் கே.பி.ஜே. கூட்டுறவுக் கழகம் மற்றும் மைக்கா ஹோல்டிங்ஸ் போன்ற நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.

மைக்கா ஹோல்டிங்ஸ் இந்தியச் சமுதாயத்தை ஒட்டு மொத்தமாகத் தூக்கி நிறுத்தப் போகிறது, எனவே அந்நிருவனத்தின் முதலீடு செய்யுங்கள் என்ற தீவிரப் பிரச்சாரங்களை நம்பி மிக  அதிகமானோர் தங்களுடைய ஆயுள்காலச் சேமிப்புகளைக் காலி செய்து, நகைகளை அடமானம் வைத்து, ஆயுள் காப்புறுதிகளைச் சரண் செய்து மற்றும் கடன்கள் வாங்கிப் பணத்தைப் போட்டனர்.

ஆனால் கடைசியில் அந்நிறுவனம் அடைந்த கதியும் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கிய அவல நிலையும் நாடறிந்த ஒன்றுதான்.ஏறத்தாழ இதே காலக்கட்டத்தில்தான் எதிர் கட்சியான ஜ.செ.க.வில் அதீதத் திறமையுடைய சில இந்தியத் தலைவர்கள் இருந்தார்கள்.பி.பட்டு, கர்ப்பால் சிங் மற்றும் வி.டேவிட் போன்றோருக்கு ஈடாக இது வரையிலும் கூட யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் அவர்கள் எல்லாருமே அரசாங்க நிர்வாகத்தில் இல்லாததால் சமுதாய மேம்பாட்டுக்குத் தேவையான ஒரு தலைமைத்துவத்தை அவர்களால் வழங்க இயலவில்லை.கடந்த 2010ஆம் ஆண்டில் சாமிவேலு அரசியலில் இருந்து விலகியதைத் தொடர்ந்து அவருடைய முன்னாள் பத்திரிகைச் செயலாளர் பழினிவேலு ம.இ.கா.வின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

ஆரம்பத்தில் பெர்னாமா செய்தி நிறுவனத்தில் ஒரு நிருபராக இருந்த அவர் சாமிவேலுவின் செல்வாக்கில் மிகக் குறுகிய காலத்தில் கட்சியின் தலைவர் பதவியை அடைந்தார்.அரசியல் அனுபவமும் தலைமைத்துவத் தகுதியும் அதிகம் இல்லாத நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே தலைவராக இருந்த அவர் சமுதாய முன்னேற்றத்திற்கு என்னதான் செய்தார் எனும் ஐயப்பாடு இன்னமும் மக்கள் மனங்களில் உள்ளது.

 

அவருக்கு அடுத்தபடியாகக் கட்சிக்குத் தலைமையேற்ற டாக்டர் சுப்ரமணியமும் அதேபோல்தான். மிகக் குறுகிய காலமான 3 ஆண்டுகளுக்கு மட்டுமே தலைவராக இருந்த அவர் சமுதாயத்தைப் பற்றி எந்த அளவுக்குச் சிந்தித்தார் என்று தெரியவில்லை. இப்படி ஒரு தலைவர் இருந்தார் எனும் விசயம் கூட அநேகமாக நிறைய பேருக்கு மறந்து போயிருக்கும்.

இதற்கிடையே கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் ஆட்சியமைத்த போது 60 ஆண்டுகாலத் தலைவிதி மாறப் போகிறது என்று எண்ணிய நம் சமுதாயத்திற்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்படும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக 4 இந்திய அமைச்சர்கள் நியமிக்கப்படப் போது நம் சமூகத்தினர் அடைந்த குதூகலத்திற்கு அளவில்லை. ஆனால் கடைசியில் அதுவும் ஒரு புஸ் வானத்தைப் போல்தான் முடிந்ததை மக்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள்.நம் மீதான அரசாங்கத்தின் பார்வை சன்னம் சன்னமாக மங்கிக் கொண்டுதான் போகிறதே தவிர விடியலுக்கான வெளிச்சத்தைக் கொஞ்சம் கூடக் காணவில்லை.

காலங்காலமாக நம் சமுதாயம் முறையான தலைமைத்துவமே இல்லாத ஒரு கூட்டம் எனும் உண்மையை அரசாங்கமும் நன்கு அறிந்துள்ளது. அதனால்தான் அவர்கள் நம்மை ஏறெடுத்துப் பார்க்க நேரமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, வரவு செலவுத் திட்டத்தில் நமக்கு ஒதுக்கப்பட்ட தொகையே இதற்குச் சான்று.

இந்நிலையில் பினேங் மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அம்மாநிலம் மட்டுமின்றி நாடளாவிய நிலையில் நம் சமுதாயம் எதிர்நோக்கும் இன்னல்களுக்குத் துணிந்து குரல் கொடுத்து வருகிறார்.

இனவாத அரசியலில் சிக்கித் தவித்து நலிந்து கிடக்கும் நமது சமூகத்திற்குத் தலைமையேற்கும் தகுதியும் திறமையும் அவரிடம் உள்ளதைப் போல் தெரிகிறது. அடுத்த போதுத் தேர்தலில் அவர் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடத் தயாராகி வருவதாக யூகங்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு அவர் நாடாளுமன்ற உறுப்பினராகிப் பக்காத்தான் ஆட்சியைக் கைப்பற்றுமேயானால் நம் சமுதாயத்திற்கான அவருடைய தலைமைத்துவம் எப்படி இருக்கும் என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.