நஜிப்பிற்கான தீர்ப்பும் – நீதிபதிகளின் பொறுப்பும்! – கி.சீலதாஸ்

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது சுமத்தப்பெற்ற குற்றங்கள் யாவும் மெய்ப்பிக்கப்பட்டதால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தார் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான். அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் நஜீப். இருதரப்பினரின் வாதுரையைச் செவிமடுத்த மூவரைக் கொண்ட மேல்முறையீடு நீதிமன்றம் கடந்த   டிசம்பர் 8, 2021இல் தனது தீர்ப்பை வழங்கியது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி சரியான முடிவுக்கு வந்தார் என்பதை ஒப்புக்கொண்ட மேல்முறையீடு நீதிமன்றம் வழங்கப்பெற்ற தண்டனைகளில் தவறுமில்லை, குறையுமில்லை என்றது. எனவே, வழங்கப்பெற்ற சிறைத்தண்டனையையும், அபராதத்தையும் உறுதி செய்யப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்படும் என்று நஜீப்பின் வழக்குரைஞர் குறிப்பிட்டிருப்பது நஜீப்புக்கு இருக்கும் உரிமை. இதில் எந்த முரண்பாடும் கிடையாது. ஆனால், தீர்ப்பில் குறை காண்பது அல்லது தீர்ப்பில் கூறப்பட்ட காரணங்கள், முடிவுகள் ஏற்கத்தகாதவை என்று விமர்சனம் செய்வது, பத்திரிக்கைகளில் செய்தியாக்குவது நவீன கால பழக்கமாகிவிட்டது.

நீதிபதி அல்லது நீதிபதிகளின் தீர்ப்பால் பாதிப்புற்றவர்கள் யாராயினும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. சில வழக்குகளில் மேல்முறையீடு செய்வதிலும் கட்டுப்பாடும், இயலாமையும் இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் ஆரம்பித்த வழக்கு கூட்டரசு நீதிமன்றம் வரை போகலாம். சார்பு நீதிமன்றங்களில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை கொண்டு செல்லலாம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பில் சொல்லப்பட்ட காரணங்களில், விளக்கங்களில், சாட்சியங்களின் பகுப்பாய்வில் குறை இருக்கிறது என்று நினைத்தால் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இருக்கும்போது தங்களின் குறைகளை, நீதிபதிகள் சொன்ன காரணங்களைப் பத்திரிக்கை வழியாக ஆய்வது ஏற்றுக்கொள்ள முடியாத முறையாகும். ஏனெனில், தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளின் தீர்ப்பைப் பற்றி பத்திரிக்கை அல்லது ஊடகங்களின் வழியாகப் பகுப்பாய்வு நடத்தப்பட்டால் அவர்கள் பதில் சொல்ல இயலாது.

இதற்குக் காரணம் என்னவெனில், ஒரு வழக்கில் முடிவான தீர்ப்பு வழங்கப்பட்டதும் விசாரணை நடத்திய நீதிபதி அல்லது மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் அந்த வழக்கைப் பொருத்தவரையில் நீதி அதிகாரத்தை இழந்துவிடுகிறார்கள். இதன் அடிப்படையில் வழக்கில் தோல்வியுற்ற வழக்குரைஞர் வழக்கைப் பற்றியோ, வழக்கில் நீதிபதியின் அல்லது நீதிபதிகளின் அணுகுமுறையைப் பத்திரிக்கைகளில் விமர்சிப்பது பொருத்தமற்ற செயலாகும்.

அதிகாரம் தீமைகளை விளைவிக்க உதவும்

நஜீப் குற்றவாளி என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து, வழங்கப்பெற்ற தண்டனைகளில் தலையிட மறுத்தது மேல்முறையீட்டு நீதிமன்றம். இந்த வழக்கில் சொல்லப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட காரணங்கள் எக்காலத்துக்கும் ஏற்றவை, பின்பற்றக்கூடியவை, நினைவில் கொண்டிருக்க வேண்டியவையாகும்.

பிரதமராக இருந்த காலகட்டத்தில் நஜீப் அதிகாரத் துஷ்பிரயோகம், ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய குற்றங்களைப் புரிந்தார் என்பது நிரூபனமாயிற்று என்றார் வழக்கை விசாரித்த உயர்மன்ற நீதிபதி.

பொதுவாகவே அதிகாரம் தீமைகளை விளைவிக்க உதவும். வரம்பற்ற அதிகாரம் வரம்பில்லா தீமைகளை விளைவிக்கும். இதைத்தான் அக்டன் பிரபு 5.4.1887இல் தலைமைக்குரு மண்டெல் கிரேகயனுக்குத் தாம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அக்டன் பிரபு குறிப்பிட்டது இன்று சட்ட முதுமொழியாகத் திகழ்கிறது என்பதோடு நிகழும் அரசியல் நடவடிக்கைகளைக் கண்ணுறும்போது ஏறத்தாழ 134 ஆண்டுகளுக்கு முன்பு அக்டன் பிரபு சொன்னது இன்றும் எச்சரிக்கையாக முழங்குகிறது. அவர் விடுத்த எச்சரிக்கையை அதிகாரத்தில் இருப்பவர்களும், அதிகாரத்தைப் பெற விரும்பும் அரசியல் தலைவர்களும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

நீதிபதி அஸ்லான் ஷா – அதிகாரத்தில் வரம்பு தேவை

இந்த நாட்டில் முதன் முதலாக புகழ்மிக்க அரசியல்வாதி ஒருவர் ஊழல் புரிந்தார் எனக் குற்றம் சாட்டப்பெற்று தண்டிக்கப்பட்டவர்தான் காலஞ்சென்ற  ஹரூன் இட்ரீஸ். இவர் அம்னோவைச் சேர்ந்தவர். சிலாங்கூர் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்திருந்த காலத்தில் இரண்டரை லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக 1976ஆம் ஆண்டில் தண்டிக்கப்பட்டார். அந்த வழக்கை விசாரித்தவர் நீதிபதி அஸ்லான் ஷா. இவர் மலாயாவின் தலைமை நீதிபதி. சில காலம் மலேசியாவின் தலைமை நீதிபதியாகவும், பின்னர் பேராக் மாநில சுல்தானாகவும், இறுதியாக மலேசியப் பேரரசர் ஆகிய உயர் பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரூன் இட்ரீஸ் வழக்கில் தீர்ப்பு வழங்கும்போது அக்டன் பிரபு சொன்ன அதிகாரத்தைப் பற்றிய கருத்தைக் குறிப்பிட்டு அரசியல் அதிகாரத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்க வரம்பு இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தினார். சட்டத்துக்குப் புறம்பான செயலுக்கு நாக்கு இல்லை. ஆனால், அது சில வேளைகளில் பேசும் என்றும் குறிப்பிட்டார்.

நஜீப்பைத் தண்டிக்கும்போது சுல்தான் அஸ்லான் ஷா 1976ஆம் ஆண்டு சொன்ன கருத்துக்களை விசாரணை நீதிபதி முழுமையாக ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல மேல்முறையீட்டு நீதிமன்றமும் அதை மறு அங்கீகாரம் செய்தது. அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கும்போது தவறான, சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்த தயங்கமாட்டார்கள் என்பதைச் சுல்தான் அஸ்லான் ஷா சுட்டிக் காட்டியதைக் கருத்தில் கொண்டதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

எனவே, அதிகாரத்தில் வரம்பு தேவை என்பது இன்றைய காலகட்டத்தில் அது தவிர்க்க முடியாத அரசியல் நாகரிகம் என்றார். நாட்டின் வளம் எப்படி எல்லாம் சுரண்டப்படுகிறது என்பதைக் கவனிக்கும்போது அதிகார வரம்பின் அவசியத்தை இனியும் தட்டிக்கழிக்கக்கூடாது. அத்தகைய நடவடிக்கைகள் பல விபரீதங்களுக்குக் காரணமாகிவிடும்; நாடு சீரழிந்துவிடும்.

நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத்துக்கு விசுவாசமாக இயங்க வேண்டும் என்பது அவர்கள் எடுத்த பதவி உறுதிமொழி விளக்குகிறது. அரசமைப்புச் சட்டம் நாட்டு நலனில் கரிசனம் கொண்டு மக்கள் சமாதானத்துடனும், நல்லிணக்கத்துடனும் வாழும் பொருட்டு பல நிர்வாகத் துறைகளை உருவாக்கியுள்ளது.

நீதித்துறையின் பொறுப்பு என்ன?

இந்தத் துறைகளில் நீதித்துறை மிகவும் முக்கியமானது. நீதித்துறையின் பொறுப்பு என்ன? அரசின் எல்லா நிர்வாக துறைகளும் செவ்வெனச் செயல்படுவதோடு எக்காரணத்தைக் கொண்டும் அவை பொறுப்பற்ற முறையில் செயல்படுவதைத் தடுப்பதாகும். அரசு அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டு, கண்டிக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்கு உண்டு. அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பேன் என்ற உறுதிமொழியானது அச்சுறுத்தும் தீங்குகளைத் தடுப்பது, கண்டிப்பது, தண்டிப்பது என உள்ளடக்கியதாகும்.

ஒருவரின் செயல் குற்றமென ஒரு நீதிபதிக்குப் படலாம், சாட்சியத்தையும் ஆவணத்தையும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம் அல்லது அவரின் மனசாட்சிக்குக் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு அளிக்கலாம் அல்லது குற்றவாளி எனத் தண்டிக்கலாம். மேல்முறையீட்டு நீதிமன்றங்களும் ஒருவேளை ஏகமனதாக விசாரணை நீதிபதியின் தீர்ப்பை ஏற்கலாம் அல்லது ஏற்காமல் வேறுவிதமான முடிவுக்கு வரலாம்.

சில சமயங்களில், விசாரணை நீதிபதியின் தீர்ப்பு சரியானதாக இருந்தாலும் அவரின் அனுமானம் தவறு என்று கூட சொல்லலாம். எனவே, குற்றம் புரிந்தார் என்று குற்றம் சாட்டப்படுபவர் விடுதலையாவதும் அல்லது தண்டிக்கப்படுவதும் நீதிபதிகளின் கையில் இருக்கிறது என்பதே உண்மை. அவர்கள் மனசாட்சிக்குப்பட்ட தங்களின் அரசமைப்புச் சட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும்.

குற்றம் புரிந்ததாகச் சொல்லப்படுபவர் குற்றம் புரிந்தாரா, இல்லையா என்பதைச் சொல்லும் அதிகாரத்தைச் சட்ட அனுபவம் கொண்ட நீதிபதிகளுக்கு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதனை நீதி வலியுறுத்துகிறது. அதனால்தான் குற்றம் சாட்டப்பட்டவர் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

அதே சமயத்தில், குற்றம் செய்தவர் அதிர்ஷ்டவசமாக நீதிதேவதையின் தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டால் என்ன செய்வது? குற்றம் செய்த சாதாரண மனிதனை மக்கள் ஒதுக்கிவிடுவார்கள், அரசியல்வாதிகள் சாதாரணமானவர்களைப் போல் நடந்துகொள்ளமாட்டார்கள், புறக்கணிப்பார்கள். அதிகாரப் போதையில் மிதப்பவர்கள் அதிகாரம் பறிக்கப்பட்டதும் பல வியூகங்களை வகுத்து அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்ற முற்படுவது ஒன்றும் ஆச்சரியமானது அல்ல.

பலவிதமான அநாகரிக, துரோகச் செயல்களில் இறங்குவார்கள் என்பதும் மக்கள் அறியாதது அல்ல. நீதிதேவதையிடமிருந்து தப்பித்தாலும் மக்கள் நீதிமன்றம் இருப்பதை எவரும் மறுக்கக்கூடாது. சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயலுவோர், நீதிபரிபாலனத்தை அவமதிப்பவர்கள், அலட்சியப்படுத்துபவர்கள் யாவரும் பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டது என்று நினைப்பது போல் நடந்துகொள்ளக்கூடாது. சட்ட மீறல், நீதிக்கு இழைக்கப்படும் தீமையை மக்கள் கூர்மையாகக் கவனிக்கின்றனர் என்பதை உணர்ந்து செயல்படுவது காலத்துக்கேற்ற நல்ல அணுகுமுறை என்று துணிவாகச் சொல்லலாம்.