இராகவன் கருப்பையா – இவ்வாரத்தில் நாட்டைச் சூழ்ந்த பெரும் வெள்ளத்தினால் பொது மக்கள் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இந்தத் துயரைக் கூடச் சில அரசியல்வாதிகள் தங்களுடைய விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அரசாங்க இலாக்காக்களின் உதவிகள் காலத் தாமதமாக வந்ததனால் மிகவும் சினமடைந்துள்ள பாதிக்கப்பட்டவர்கள், அரசியல்வாதிகளின் இத்தகைய போக்கை எந்த மனநிலையில் பார்ப்பார்கள்.
அரசாங்க உதவிகள் சரியான நேரத்தில் வந்து சேராத பட்சத்தில் பல பேர் கூரைகள் மீது ஏறி உணவுக்கும் உயிருக்கும் போராடிக் கொண்டிருந்தனர். ஒருசில தன்னார்வலர்களின் படகுகள் கவிழ்ந்து சிலர் மூழ்கிக் கொண்டிருந்தனர்.
ஆனால் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளோ கூட்டம் சேர்த்து மேடைப் போட்டு விருந்தோம்பலோடு தன்னார்வலர்களுக்கான அறிமுக விழாவை நடத்திக் கொண்டிருந்தது ஒரு சந்தர்ப்பவாத அரசியல் செயலாகும்.
‘ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்த கதை’யாகத்தான் உள்ளது என்றும் கருதலாம். விளையாட்டுத்துறை அமைச்சர் அஸுமு ஒரு பக்கம் இப்படியும் மற்றொரு இடத்தில் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரீனா ஹருன் இதே போன்ற ஒரு விழாவை நடத்திக் கொண்டிருந்தார்.
அந்தப் பதாகையோடு அவர்கள் ‘போஸ்’ கொடுக்கும் படங்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு, வெள்ளத்தில் அவதிப்படும் மக்களுக்கு அவை எரிச்சலூட்டியதா அல்லது அவர்களதுபால் நம்பிக்கையை வளர்த்ததா?
இதையெல்லாம் பார்க்கும் போது, இவ்வாண்டு மத்தியில் கோறனி நச்சலினால் பீடிக்கப்பட்டுக் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து கொண்டிருந்த வேளையில் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற அரசியல்வாதிகள் அரங்கேற்றிய நாடகங்கள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
நடமாட்டக் கட்டுப்பாட்டின் போது பசியால் வாடிய மக்கள் வெள்ளை கொடியேற்றி உணவுக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த வேளையில் உணவுப் பொட்டலங்களில் அரசியல்வாதிகள் தங்களுடைய பெயர்களையும் கட்சியின் சின்னங்களையும் அச்சடித்துக் கொண்டிருந்த சம்பவங்களையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை.
இது போன்ற காரியங்களை எல்லாம் தெளிவான சிந்தனையோடுதான் இவர்கள் செய்கிறார்களா அல்லது கட்சி அரசியல் விளம்பரத்திற்காகவா என்ற வினாவும் எழுகிறது.
ஒரு மனித நேயச் செயல் இயற்கை பேரிடர் போது தன்னிச்சையாக விளம்பரமின்றித் தியாக நோக்குடன் வெளிப்படும், வெளிப்படவேண்டும். அதுதான் மனிதகுலம் வெளிப்படுத்தும் தர்மம்.இதைவிடுத்து, ஒரு இக்கட்டான பேரிடரில், கட்சி அரசியல் விளம்பரத்தை முன்னிலைப்படுத்தும் போக்கு, அவர்களின் தூய சிந்தனையை மழுங்கச்செய்யும் என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.
விளம்பரம் கொண்ட கட்சி அரசியல் உதவி ஒரு சுயநலத்தின் பிரதிபலிப்பு, அது உதவி பெறுபவர் நன்றிக்கடன் பட வேண்டும் என்பதை வலியுறுத்து அவரது சுயமதிப்பைச் சூறையாடுகிறது. ஆனால், விளம்பரமற்ற உதவி, மனித நேயத்தின் உணர்வுக்கு வித்திட்டு, மனிதத்தன்மையை மேம்படுத்துகிறது.