இராகவன் கருப்பையா – வெள்ளப் பேரிடரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சீன-தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பு நமக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
நாட்டிலுள்ள 527 தமிழ்ப் பள்ளிகளும், 1,298 சீனப்பள்ளிகளும் மட்டுமின்றி தமிழ் மொழிக்கும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் இது சற்று நிம்மதியைக் கொடுக்கிறது.
தமிழ், சீனப் பள்ளிகள் இந்நாட்டின் அரசமைப்பு சட்டங்களுக்கு முரண்பாடாக இயங்குகின்றன என்று மலேசிய மலாய் மாணவர்கள் சங்கங்களின் சம்மேளனம், இஸ்லாமியக் கல்வி மேம்பாட்டு மன்றம் மற்றும் மலேசிய எழுத்தாளர்கள் சங்கங்களின் சம்மேளனம், ஆகிய 3 மலாய் இயக்கங்களும் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தன.
இந்த 3 இயக்கங்களுக்கு பின்னால் வலதுசாரி இனவாத அரசியல்வாதிகள் செயல்பட்டார்கள் எனச் சந்தேகிப்பதிலும் நியாயம் உள்ளது. ஏனெனில் இவர்களுடைய இனத்துவேச நடவடிக்கைகளை எந்த அரசியல்கட்சியும் கண்டித்ததாகத் தெரியவில்லை.
தமிழ், சீனப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இன அடிப்படையில் தனிமையில் பயில்வதால், அது தேசிய அளவில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை உணர்வை வளர்ப்பதில்லை என்பது இவர்களின் வாதம்.
அதாவது இனங்கள் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாழ ஆரம்பக் கல்வி முதல் கொண்டு அனைவரும் ஒன்றாக கல்வி பயில்வதுதான் சிறந்தது என்பது இவர்களின் வாதம்.
ஆனால், ஆரம்ப சமயக் கல்விக்கூடங்களும், முழுமையாக மலாய்காரர்களுக்காக நடத்தப்படும் பள்ளிகளும், மாரா போன்ற கல்விக்கூடங்களும், 95% அதிகமாக உள்ள அரசாங்க வேலைகளும் படு மோசமாக இனவாதத்தை வளர்க்கின்றன, எனவே இவற்றை அகற்ற வேண்டும் என்ற வாதம் மட்டும் எழுவதில்லை.
கண் முன்னே உள்ள யானையை விட்டுவிட்டு கட்டெறும்பு மட்டும் கண்ணுக்குத் தெரிந்த கதையாக உள்ளது இவர்களின் வாதம். அதோடு மலாய் மொழியில் சிறந்து விளங்குவதில்லை என்றும் அதனால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்றும் வாதிடப்பட்டது சற்று வேடிக்கையான ஒன்றுதான்.ஏனெனில் பல்கலைக்கழகம் செல்லும் இந்திய மாணவர்களில் பெரும்பாலோர் தமிழ்ப் பள்ளிகளில் பயில்பவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்புத் தேர்ச்சி பெறாமல் எப்படி அவர்கள் பல்கலைக் கழகம் செல்ல முடியும்?
நம் இனத்தை சேர்ந்த, தமிழ்ப் பள்ளிகளில் பயின்ற நிறைய ஆசிரியர்கள் ஆரம்பப் பள்ளிகள் மட்டுமின்றி இடைநிலைப் பள்ளிகளிலும் கூட தற்போது மலாய் மொழியைப் போதிக்கின்றனர் என்பது மற்றொரு விசேசம்.
கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற வழக்கின் வாதத் தொகுப்பின் போது, தலைசிறந்த வழக்கறிஞரும் முன்னாள் நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம் களமிறங்கியதைத் தொடர்ந்து மிக அதிகமானோரின் கவனம் இவ்வழக்கின் பக்கம் திரும்பியது.
தற்காப்பு தரப்போடு இணைந்த மலேசியத் தமிழர் இயக்கம், பேராக் மாநில தமிழர் திருநாள் இயக்கம், ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களின் நலனபிவிருத்தி சங்கம், மலேசியத் தமிழ்நெறிக் கழகம், மலேசிய முன்னாள் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் சங்கம், ம.சீ.ச., கெராக்கான், ம.இ.கா., மலேசிய பூமிபுத்ராக் கட்சி மற்றும் 3 சீன கல்வி இயக்கங்களை ஸ்ரீராம் பிரதிநிதித்தார்.
இந்நாட்டில் இனவெறிப்பிடித்த சில அரசியல்வாதிகள் மட்டுமின்றி சில மலாய்க்கார அரசு சாரா இயக்கங்களுக்கும் ஆண்டாண்டு காலமாகத் தமிழ், சீனப் பள்ளிகள் ஒரு கிள்ளுக்கீரையாகவே இருந்து வந்துள்ளன. தங்களுடைய நிலையை வெறுமனே செயற்கையாக உயர்த்திக் காட்டிக் கொள்வதற்குத் தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும் எனச் சீண்டிக் கொண்டிருப்பது இதுநாள் வரையில் அவர்களுக்கு வழக்கமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.
ஏனெனில் நமது அரசியல்வாதிகளில் நிறையப் பேர் தங்களுடையப் பிள்ளைகளை அமெரிக்கா, இங்கிலாந்து, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பி கல்வி பயிலச் செய்துள்ளனர். அவர்களுக்கே முதற்கொண்டு தேசியப் பள்ளிகள் மீது நம்பிக்கை இல்லாததையே இது புலப்படுத்துகிறது.
தாய் மொழிப் பள்ளிகள் இந்நாட்டில் அரசியலமைப்புக்கு உட்பட்டுத்தான் செயல்படுகின்றன என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்யுமாறு கோரி மேல் முறையீடு செய்யப்போவதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த வழக்கை முன்னெடுத்தவர்கள் வலதுசாரி மலாய்மொழி இயக்கங்கள் ஆகும். இந்த வழக்கைத் தற்காத்து வாதிட்டவர்கள் அரசாங்கம் ஆகும்.
இருப்பினும், நாடு தழுவிய நிலையில் ஆங்காங்கே இயங்கும் தமிழ் சார்ந்த அத்தனை இயக்கங்களும் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை உடனே முடுக்கிவிட வேண்டும்.
அதே சமயம் எதிர்காலத் தமிழ் கல்விமான்களையும் தமிழ் இலக்கியவாதிகளையும் தமிழ் காவலர்களையும் உருவாக்கும் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்களும் தலைமையாசிரியர்களும், இந்த வெற்றியைத் தமிழ்ப் பள்ளிகளின் மறுபிறவியாகக் கருதி கல்வித் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான அனைத்தையும் செய்வது அவசியமாகும்.