தடுப்புக்காவல், அடக்குமுறைக்கு மத்தியில் தொடரும்  தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்

கம்போடியாவின் மிகப்பெரிய ஆடம்பர ஹோட்டல் மற்றும் சூதாட்ட விடுதியான நாகாவேர்ல்டின் தொழிலாளர்கள், கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக அதிகாரிகளால் ஒடுக்கப்பட்டனர்.

டிசம்பர் 2021-ல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியதிலிருந்து, 30 நாகாவேர்ல்ட் தொழிற்சங்க உறுப்பினர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு நாகாவேர்ல்ட் நிர்வாகம் செவிசாய்க்க மறுப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏப்ரல் 2021-ல், பணிநீக்கம் செய்யப்பட்ட 365 தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தக் கோரி, டிசம்பர் 18-ம் தேதி 1,300-க்கும் மேற்பட்ட நாகாவேர்ல்ட் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோவிட்-19 தொற்று காரணமாக நிறுவனத்தின் வணிகம் குறைந்துவிட்டது என்ற அடிப்படையில், அந்த நேரத்தில் மொத்தம் 1,329 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்ட சில தொழிலாளர்கள் ஹோட்டல் நிர்வாகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பணிநீக்க இழப்பீட்டுக்கான விதிமுறைகள் மற்றும் கொடுப்பனவுகளை நிராகரித்தனர். வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது அவர்கள் மீது சுமத்தப்பட்ட ஊதியக் குறைப்புகளை இரத்து செய்ய வேண்டும் என்றும், அங்குள்ள கிட்டத்தட்ட 2,000 தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியத்தைக் கொடுக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களில் நாகாவேர்ல்ட் கெமர் தொழிலாளர் உரிமைகள் ஆதரவு சங்கத்தின் (எல்.ஆர்.எஸ்.யு.) தலைவரான சிம் சித்தார் பணியிடத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதியாகவும் உள்ளார். வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்றும், வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு உத்தரவிட்டும் வேலைநிறுத்தத்தின் முதல் நாளில், ப்னோம் பென் நகராண்மை நீதிமன்றத்தில் எல்.ஆர்.எஸ்.யு. உத்தரவைப் பெற்றது.

நீதிமன்ற உத்தரவின்படி, நாகாவேர்ல்ட் நிறுவனம் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைக் கடுமையான முறைகேடு என்று குற்றம் சாட்டி அவர்களைப் பணிநீக்கம் செய்யலாம். கூடுதலாக, புனோம் பென் உள்ளூராட்சி மன்றமும் எல்.ஆர்.எஸ்.யு. தொழிற்சங்கங்களுக்கு ஒரு கடிதத்தை வழங்கியது. அதில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான சட்டத்தை மீறியது என்ற அடிப்படையில் வேலைநிறுத்தத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியது. அப்போதிருந்து, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அதிகாரிகளிடமிருந்து பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

வேலைநிறுத்தம் தொடங்கியதில் இருந்து, அதிகாரிகள் மூன்று முறை தொழிற்சங்கத் தலைவர்களையும் உறுப்பினர்களையும் கைது செய்துள்ளனர். 31 டிசம்பர் 2021 அன்று, வேலைநிறுத்த நடவடிக்கைக்கு நெருக்கமான பார்வையாளர்களாக இருந்த 9 தொழிற்சங்க உறுப்பினர்களும் ஒரு துக்-துக் ஓட்டுநரும் (மோட்டார் ரிக்‌ஷா) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இனி வேலைநிறுத்தங்களில் பங்கேற்க மாட்டோம் என்று உறுதியளிக்கும் கடிதத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்திட செய்து, 3 தொழிற்சங்க உறுப்பினர்களையும் துக்-துக் ஓட்டுநரையும் ஜனவரி 3, 2022 அன்று விடுவித்தனர்.

தொழிலாளர் ஆர்வலர்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதிலிருந்தும் பங்கேற்பதிலிருந்தும் தடுப்பதற்கும் அவர்களின் வாயை அடைப்பதற்கும் கம்போடிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் பொதுவான தந்திரம் இது. போலீஸ் காவலில் இருந்த மற்ற ஆறு தொழிற்சங்க உறுப்பினர்களும் விசாரணை நீதிபதி அவர்கள் மீது “தேசத்துரோக” குற்றம் சாட்டி, வேலைநிறுத்தம் “சமூகப் பாதுகாப்பு” மற்றும் “பொது ஒழுங்கை” அச்சுறுத்தியுள்ளது என்று கூறியதைத் தொடர்ந்து சிறைக்கு மாற்றப்பட்டனர். மேலும். அதே நாளில், ஒரு கர்ப்பிணித் தொழிலாளி உட்பட மேலும் 17 தொழிற்சங்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். உறுதிமொழி கடிதத்தில் கையொப்பமிட்டு ஒரு நாள் கழித்துதான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, ஜனவரி 4, 2022 அன்று, எல்.ஆர்.எஸ்.யு. தொழிற்சங்கத் தலைவரான சிம் சிதர் (Chhim Sithar), வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் மறியல் இடத்திற்கு அருகே காரில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே, சிவில் உடையில் இருந்த காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில், எல்.ஆர்.எஸ்.யு. உறுப்பினர் சோக் நரித் மற்றும் கடந்த ஆண்டு பொது மக்கள் பணிநீக்கத்தின் போது வேலையை இழந்த முன்னாள் நாகாவேர்ல்ட் ஊழியர் சோக் கோங்கியாவும் கைது செய்யப்பட்டனர். ஜனவரி 5, 2022 அன்று சோக் கொங்கியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் சிம் சிதார் மற்றும் சோக் நரித் இன்னும் புனோம் பென் போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை நீதிபதி அவர்கள் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 நாகாவேர்ல்ட் யூனியன் உறுப்பினர்கள்

இன்னும் காவலில் உள்ள 8 தொழிற்சங்க உறுப்பினர்கள் :- சிம் சிதார், சிம் சோகோர்ன், க்ளீயாங் சோபென், சன் ஸ்ரேபிச், ஹை சோபீப், ரை சோவண்டி, டச் செரிமியாஸ் மற்றும் சோக் நரித். (சோக் நாரித் தவிர, கைது செய்யப்பட்ட அனைவரும் பெண்கள்.)

இந்தத் தொழிற்சங்க உறுப்பினர்களைக் கைது செய்து காவலில் வைத்திருப்பது தொழிலாளர்களின் கருத்துச் சுதந்திரம், சங்கச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகியவற்றுக்கான மனித உரிமைகளை மீறுவதாகும். கம்போடிய அரசாங்கம், கம்போடிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.) உடன்படிக்கைகள் C087 மற்றும் C098 ஆகியவற்றின் படி, சங்கச் சுதந்திரம், கூட்டு பேச்சு வார்த்தை மற்றும் சங்கம் அமைப்பதற்கான உரிமை உள்ளிட்ட தொழிலாளர்களின் மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதில் பங்கு வகிக்க வேண்டும். தொழிலாளர் சிக்கல்கள் தொழிலாளர்களின் உரிமைகளை மதிக்கும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும், தொழிலாளர்களை ஒடுக்குவதன் வழியல்ல.

நாகாகார்ப் லிமிடெட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் நாகாவேர்ல்ட், கேமன் தீவுகளில் பதிவு செய்யப்பட்டது, அதுமட்டுமின்றி ஹாங்காங் பங்குச் சந்தையில் (HKSE) பட்டியலிடப்பட்டுள்ளது. “டான் ஸ்ரீ” பட்டம் கொண்ட மலேசிய முதலாளியான சென் லிப் கியோங் அந்நிறுவனத்தின் தோற்றுநர் ஆவார்.

இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், நாகாவேர்ல்ட் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்), தொழிலாளர்களை ஒடுக்குவதை நிறுத்துமாறும் மலேசியாவுக்குச் சொந்தமான அந்நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது.

பேச்சு சுதந்திரமும் வேலை பாதுகாப்பும் 1948 மனித உரிமைகள் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் இந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மலேசியாவுக்குச் சொந்தமான நிறுவனமான நாகா வேர்ல்ட் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தை விட வணிகத்தின் பக்கம் சாய்ந்துள்ள கம்போடிய அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவதாகப் பிஎஸ்எம் தொழிலாளர் பிரிவின் உறுப்பினரான பிலிப் வோங் கூறினார்.

வேலைநிறுத்தத்தின் மூல காரணத்தைத் – வருமானம் இழப்பு – தீர்க்கும் அதே வேளையில், நாகாவேர்ல்ட் தொழிலாளர்களுக்கு எதிரான கைதுகளையும் மிரட்டல்களையும் நிறுத்துமாறும் பிஎஸ்எம் கம்போடிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் வோங் சொன்னார்.