நாட்டில் நேர்மையான, திறமையுடைய, ஊழலற்ற நிர்வாகம் தேவை என்பது மனித குலத்தின் எதிர்பார்ப்பாகும். பொதுவாகவே நிர்வாகம் எனும்போது அது அரசின் பல துறைகளைக் குறிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் தற்காப்பு, நாட்டினுள் சட்ட ஒழுங்கு, மக்களிடையே முரண்பாடும், பூசலும் இல்லாத வாழ்வு எனப் பற்பல இலக்குகளை அடையும் நோக்கத்துடன்தான் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பெற்றது.
அரசமைப்புச் சட்டம் பொதுவாக பல துறைகளை உருவாக்கி அந்தந்த துறைகளுக்கான நிர்வாக அதிகாரத்தை நிர்ணயித்து இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட அல்லது இயங்கிக் கொண்டிருந்த துறைகள் செவ்வெனச் செயல்படுவதற்கு ஏதுவாகச் சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திடம் உள்ளது அல்லது அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு நடப்பில் இருந்த சட்டங்களை மறு உறுதி செய்யும் அதிகாரமும் நாடாளுமன்றத்துக்கு உண்டு. இது இயல்பே! உதாரணத்துக்கு, நாட்டின் தண்டனை சட்டம் சுதந்திரம் பெறுவதற்கு முன்னமே அமலில் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு அதன் ஆயுள் நீட்டிக்கப்பட்டது. இதை அரசமைப்புச் சட்டமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதுபோலவே பல சட்டங்கள் சுதந்திரத்துக்கு முன்பிலிருந்தே அமலில் இருக்கின்றன.
தண்டனை சட்டத்தை எடுத்துக்கொள்வோம். பொதுவாகவே அறிவுக்கு எட்டிய எல்லா குற்றங்களுக்கும் தண்டனையை அது நிர்ணயித்தது. ஊழல் நடவடிக்கைகளும் அதில் அடங்கும். ஆனால், வளமிக்க நாட்டில் உழைப்புக்குக் கொடுக்கப்படும் மரியாதையைக் காட்டிலும் உல்லாச வாழ்வுக்குத்தானே கொடுக்கப்படுகிறது. உல்லாச வாழ்வு உழைப்பால் வந்தால், கிடைத்தால் பிரச்சினை இல்லை. மாறாக, விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற வாய்மொழியை மறந்து வாழ முற்பட்டால் உல்லாச வாழ்க்கைக்குத் துணை நிற்பது ஊழலாகும்.
எனவே, ஊழலால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்து அதைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு ஊழல் தடுப்புச் சட்டம் 1961ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. தண்டனை சட்டத்தில் ஊழலுக்கு எதிரான தண்டனை சொல்லப்பட்டபோதிலும் ஊழலைத் தடுக்கும் தன்மையை அது கொண்டிருக்கவில்லை. 1961ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழல் சட்டம் ஊழல் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.
ஊழல் புரிவோரைத் தண்டிக்கும் தண்டனை சட்டம் இருக்கும்போது புது ஊழல் தடுப்புச் சட்டம் தேவையா என்ற கேள்வி எழலாம். நாட்டின் வளமிகுந்த செல்வம் இன்றும் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும்போது, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முற்படும்போது புதுப்புது திட்டங்கள் தயாரிக்கப்படலாம்.
அவற்றைச் செயல்படுத்த நேர்மையானவர்கள் தேவைப்பட்டனர். செல்வம் கண்டுபிடிக்கப்படும்போது மனிதனின் பேராசையும் பெருகும் என்பது அனுபவம் சொல்லும் உண்மை. நல்ல திட்டங்கள் இருந்து என்ன பலன்? அவற்றை அமலாக்கம் செய்யும்போது நேர்மையானவர்கள், நாணயமானவர்கள் தேவை அல்லவா?
அந்த நேர்மையானவர்கள், நாணயமிக்கவர்கள் அறுபதுகளில் இல்லை என்று சொல்ல முடியாதுதான். ஆனால், சுதந்திரத்திற்கு முன்பு பெரிய அளவில் நாட்டில் பொருளாதார மேம்பாடு காணாவிட்டாலும் சிறு ஊழல்கள் இருந்தன. பெரும்பான்மையான ஊழல்கள் சிறு தொகையைக் கொண்டதாக இருந்தன. அவை காவல்துறையின் கவனத்தை ஈர்க்கவில்லை. அதே சமயத்தில், சிறு தவறுகளைச் செய்தவர்கள், சின்ன காரியங்களைச் சாதிக்க நினைத்தவர்கள் கையூட்டு கொடுத்ததைப் பெரிதுபடுத்தாத காலம் அது. பிழைத்துப் போகட்டும் என இருந்துவிட்டார்கள் போலும்.
சிறிய அளவு ஊழலைத் தடுக்க முடியவில்லை என்றபோதிலும் நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்கள், அதோடு வளரும் பொருளாதார செழுமை ஊழலுக்குப் புது அர்த்தம் கண்டது. பொருளாதார முன்னேற்றம் ஊழலுக்கு வித்திடும் என்ற எச்சரிக்கை உணர்வின் பலன்தான் 1961ஆம் சட்டம் என்றால் மிகையாகாது. அந்தச் சட்டம் அமலுக்கு வந்த பின் ஊழல் நடவடிக்கையில் குறைவு காணப்பட்டதா? ஆச்சரியம் என்னவெனில் முன்பெல்லாம் சிறு சிறு ஊழல்கள்தான் காணப்பட்டன. ஆனால், இந்த 1961ஆம் ஆண்டு சட்டம் வந்த பிறகு, ஊழலின் தரம் மாறியது. ஊழல் செயல்கள் பெருகின.
ஊழல் நடவடிக்கைகளால் ஒரு சிலரே பலனடைவார்கள் என்பது திண்ணம். அந்தக் குற்றச்செயலால் மக்கள் பாதிப்படைவார்களே என்பதைக் கிஞ்சித்தும் நினைக்காத, கவலைப்படாத அதிகாரிகள் அவர்களுக்குத் துணையாக நிற்கும் அரசியல்வாதிகள் அல்லது அரசியல்வாதிகளின் கோணல் மாணல் செயல்களுக்குத் துணையாகச் செயல்படுகின்றனர். அரசு நிர்வாகிகள் போன்றோர் யாவரும் சமுதாயத் துரோகிகளே.
1961ஆம் ஆண்டு சட்டம் நவீன கால விஞ்ஞான முன்னேற்றத்தைக் கவனத்தில் கொண்டிராததால் புதுவித ஊழல் செயல்களைக் கட்டுப்படுத்த புது வியூகங்கள் தேவைப்பட்டன. பல திருத்தங்களுடன் 1997ஆம் ஆண்டு புது ஊழல் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இதுவும் போதுமானதாக இருக்கவில்லை. 2009ஆம் ஆண்டு மலேசியா ஊழல் எதிர்ப்பு சட்டம் இயற்றப்பட்டது. இது 1961, 1997ஆம் ஆண்டுகளில் காணப்பெற்ற தடுப்பு முறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது.
குறிப்பாக, ஊழல் தடுப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. நேர்மையுடனும், பொறுப்புடனும் செயல்படும் ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்க சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாகத் திகழ வேண்டும் என்பது அதன் நோக்கங்களில் பிரதானமானதாகும். அரசின் ஊழியர்கள், பொது மக்கள் ஊழலால் விளையும் தீங்குகளை உணர்வதற்கு ஏதுவாகக் கற்பிப்பது அதன் பொறுப்பாகும்.
இன்றைய நாட்டு நடப்பைக் கவனிக்கும்போது அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்கள் யாவும் முறியடிக்கப்பட்டதைத்தான் நாம் பார்க்கிறோம். அதாவது அதிகாரத் துஷ்பிரயோகம் மிகையாகவே காணப்படுகின்றது. இது நாட்டுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும். ஊழல் கூடாது. அது நாட்டை நாசப்படுத்தும் என்ற கல்வியைக் கற்பிப்பது மிகவும் முக்கியமாகும்.
அரசு இந்த விஷயத்தில் எப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டது என்று சிந்தித்துப் பார்த்தால் வெறும் விளம்பரங்களோடு அதன் கடமை தீர்ந்துவிட்டதாகவே அது நினைத்துச் செயல்பட்டது என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது. ஊழல் ஏற்றுக்கொள்ளத்தக்க கலாச்சாரம் அல்ல என்று இளம்வயதிலிருந்தே கற்பிக்க வேண்டிய கல்வியாகும். இந்த உண்மையை உணரும் வரையில் எப்படிப்பட்ட தடுப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவை விழலுக்கு இரைத்த நீராகவே இருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் நம் நாடு பலவிதமான பிரச்சினைகளில் சிக்கி தவிப்பதைக் காணலாம். இன, சமயப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், அனைத்துலக முதலீட்டார்கள் அவர்களின் முதலீட்டை இந்நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்கு மாற்றுவது, கோவிட்-19 பிரச்சினை எனப் பலவகை. இவையாவும் போதாது என்பது போல் அமைந்துள்ளது சமீபத்தில் வெளியான ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை அதிகாரியின் செல்வக் குவிப்பு. அவரிடம் இருக்கும் செல்வம் அவருடைய சட்டப்படியான வருமானத்துக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்படுகிறது. அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமடையும்போது அவருக்கு ஆதரவாகச் சில அரசியல் கட்சிகள் நிற்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் நாட்டின் அரசியல் நிலை, நாட்டைக் கேவலத்திற்லு உட்படுத்தும் ஊழல் நடவடிக்கைகள் அனைத்தையும் ஆழ்ந்து சிந்திக்கும்போது நாட்டுத் தலைவர்களின் நடவடிக்கை, அவர்களின் முடிவுகள் யாவும் இந்த நாட்டின் இறுதி நாசத்துக்குக் காரணங்களாகத் திகழ்வதைக் காணலாம். மலேசியாவை யார் காப்பாற்றுவார்?