தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 3

கி.சீலதாஸ் – இந்த உண்மைகளை மறந்து செயல்படுவோரைத்தான் நாம் காண்கிறோம். ஆட்சியில் இருப்பவர்கள் உண்மையை மறைப்பதில் காட்டும் உற்சாகம் கல்வி தரத்தில் முன்னேற்றம் காண முற்படாதது வரலாற்றுக்கும், ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கும் மரியாதை செலுத்த மறுக்கும் குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையைத்தான் இலக்கியவாதி சினுவா அச்சிபே நினைவுகூர்ந்தார்.

இன்று மட்டுமல்ல எழுபதுகளில் தாய்மொழிப்பள்ளிக்கூடங்ளின் மீதான எதிர்ப்பு ஒரு சிலரிடமிருந்து எழ ஆரம்பித்தது. ஆட்சியில் இருந்தவர்கள் வரலாற்று உண்மையைச் சுட்டிக்காட்டி மென்மேலும் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம்.

அப்படிப்பட்ட நல்ல முயற்சி எடுக்காததும் ஒரு குறையே! தாய்மொழிப்பள்ளிகளுக்கு எதிர்ப்பு பல கோணங்களில் இருந்து எழுப்பப்பட்டன. முக்கியமாக, அந்தப் பள்ளிகள் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உதவவில்லை என்ற போலி காரணமும் அடங்கும்.

தாய்மொழி எதிர்ப்பு அல்லது வெறுப்பு கலாச்சாரத்துக்கு ஆளும் கட்சித் தலைவர்கள் சிலர் பகிரங்க ஆதரவு தந்ததானது உண்மை வரலாற்றைப் புறக்கணிக்கும் தரத்தைக் கொண்டிருந்தபோதிலும் அதிகாரம் அவர்கள் கையில் இருந்ததால் ஆக்ககரமான சட்ட நடவடிக்கை எடுக்காதது, தாய்மொழிப்பள்ளிகளுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தடுக்காதது யாவும் தவறான அணுகுமுறையாகும்.

தாய்மொழிப்பள்ளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு கண்டுகொள்ளாதது ஒரு அரசியல் லாபத்தைக் குறியாகக் கொண்டது என்றும் சொல்லப்பட்டது. அதில் உண்மை இருப்பதையும் மறுக்க முடியாதே! பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமானால் பகிரங்கமாகவே பிரச்சினை எழாதவாறு செயல்பட வேண்டும்.

இந்தத் தாய்மொழி எதிர்ப்பு விவகாரத்தில் அரசு தெளிவான நடவடிக்கையை அதாவது தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாதது மொழிப் பிரச்சினையில் அது நேர்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்ற சந்தேகத்துக்கு இடம் உண்டு. இதைத் தவிர்க்கலாமே.

இதுகாறும் தாய்மொழிப் பள்ளிகளால் தேச ஒற்றுமையை வளர்க்க முடியவில்லை. அவை தடையாக இருக்கின்றன என்ற எதிர்ப்பு கருத்து, பிரச்சாரம் போன்ற எதிர்மறை நடவடிக்கைகளை, கொள்கைகளை, அரசியல் நிலைப்பாட்டைக் கைவிட்டு அந்தப் பள்ளிகளால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மக்களிடம் பரப்பலாமே.

தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி

சீனமும், தமிழும் செம்மொழிகள். அவை இந்நாட்டு கல்விக் கொள்கையின் அகற்ற முடியாத அங்கமாகும். அவற்றை எதிர்ப்பது, தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் மூடப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை பல காலமாக நிலவி வருகிறது.

கல்விக் கொள்கையைப் புறக்கணிப்பது முறையல்ல. அதுமட்டுமல்ல, காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கை, அதை அரசு அமல்படுத்தி வருவதானது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்காறு என்று கூட சொல்லலாம். நம் நாட்டு கல்விக் கொள்கையை எடுத்துக்கொண்டால் தாய்மொழிப் பள்ளிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட, இன்றியமையாத கல்வி பகுதியாகும்.

அவற்றால் கேடு விளைகிறது என்ற ஆதாரமற்ற கருத்துக்களைப் பரப்புவதில் காட்டும் ஆர்வத்தை, உற்சாகத்தைக் கைவிட்டு தாய்மொழிக்கல்வியால் ஏற்படும் நன்மைகளை விளக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. பல மொழிகளுக்கு ஆதரவு தருவதால், அவற்றைக் கற்பிப்பதால், மதிப்பதால் உலக அறிவுடையோர் மத்தியில் மலேசியாவின் மதிப்பு உயருமே அன்றி பாழடையாது.

சமீபத்தில் உயர்நீதிமன்றம் நாட்டில் இயங்கும் தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் குறித்து கொணரப்பட்ட வழக்கில் அவை சட்டப்படி இயங்குவதாகத் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் அந்த வழக்கைப் பற்றிய கருத்தை மேல்முறையீட்டுக்குப் பிறகு கவனிப்போம். (முற்றும்)