இராகவன் கருப்பையா – கடந்த 70ஆம் மற்றும் 80ஆம் ஆண்டுகளில் நம் நாட்டின் பூப்பந்துத் துறையில் கொடி கட்டிப் பறந்த பஞ்ச் குணாளன் மற்றும் ஜேம்ஸ் செல்வராஜ் ஆகிய இரு ஜாம்பவான்களையும் நம்மில் நிறையப் பேர் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
மலேசியாவைப் பொறுத்த வரையில் பூப்பந்து விளையாட்டு சீனர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு விளையாட்டாகவே இன்று வரையிலும் இருந்து வருகிறது.
கடந்த 80ஆம் ஆண்டுகளிலும் 90ஆம் ஆண்டுகளிலும் சிடேக் சகோதரர்கள் இவ்விளையாட்டை ஆக்கிரமித்திருந்த சமயத்தில் நம் இனத்தைச் சேர்ந்த ஒரு சிலர் அவ்வப்போது தேசிய நிலையில் தலைகாட்டிச் சென்றது அவ்வளவாக நம் நினைவில் நிலைத்திருக்கவில்லை.
ஆனால் தற்போது 3 இந்தியப் பெண்கள் ஒரு சேர நமது தேசியக் குழுவில் இடம்பெற்று அனைத்துலக நிலையில் நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருவது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
கிசோனா செல்வதுரை நாட்டின் முதல் நிலை ஒற்றையர் ஆட்டக்காரராகவும் லெட்ஷனா கருப்பதேவன் 3ஆம் நிலை ஒற்றையர் ஆட்டக்காரராகவும் இருக்கும் வேளையில் தீனா முரளிதரன் இரட்டையர் ஆட்டத்தில் மிளிர்கிறார்.
சிரம்பானைச் சேர்ந்த 23 வயதுடைய கிசோனா கடந்த 2019ஆம் ஆண்டில் ஃபிலிப்பின்ஸில் நடைபெற்ற 30ஆவது தென் கிழக்காசியப் போட்டிகளின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி அனைத்துலகப் போட்டிகளில் வாகைச் சூடிய அவர் கடந்த ஆண்டில் நடைபெற்ற ஸ்பெய்ன் பொதுப் பூப்பந்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார்.
தற்போது உலகின் 53ஆவது இடத்தில் இருக்கும் அவர் மொத்தம் 5 மொழிகளில் சரளமாகப் பேசும் வல்லமை பெற்றவராவார்.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் ஃப்ரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராகிவரும் கிசோனா 4 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைக்குட்டியாவார்.
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான அவருடைய தந்தை செல்வதுரை, தாய் வளர்மதி, சகோதரர்கள் தினகரன், மகேந்திரன் மற்றும் அக்கா கண்மணி ஆகிய அனைவருமே பூப்பந்து விளையாட்டாளர்கள்தான்.
சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுடைய லெட்ஷனா இளநிலை ஆட்டக்காரர்களின் பிரிவிலிருந்து தேசியக் குழுவிற்கு மிகக் குறுகிய காலத்தில் தரம் உயர்த்தப்பட்ட ஆட்டக்காரர்களில் முதன்மையானவர் என்பது விசேஷமான ஒன்று.
கடந்த 2012ஆம் ஆண்டிலும் 2014ஆம் ஆண்டிலும் மலேசியப் பள்ளிகளுக்கான ஒற்றையர் பிரிவில் வெற்றிபெற்ற அவர் தேசிய இளநிலை வெற்றியாளர் விருதைத் தொடர்ந்தார்போல் 5 ஆண்டுகளுக்குத் தக்க வைத்துக் கொண்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டில் 14 வயதே நிரம்பிய லெட்ஷனா 18 வயதிற்கும் குறைவானவர்களுக்கான தேசியப் பூப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றுப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் கழித்து 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான போட்டிகளிலும் அபார வெற்றியடைந்து எல்லாரது கவனத்தையும் ஈர்த்த அவர் கடந்த ஆண்டில் மோரிஷஸில் நடைபெற்ற அனைத்துலக ஒற்றையர் பிரிவில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து எகிப்தில் நடைபெற்ற அனைத்துலகப் போட்டிகளில் 3ஆவது இடத்தைப் பெற்ற லெட்ஷனா பிறகு செப்டம்பர் மாதத்தில் ஃபின்லாந்தில் நடைபெற்ற சுடிர்மான் கிண்ணப் போட்டிகளிலும் ஒக்டோபர் மாதத்தில் டென்மார்க்கில் நடைபெற்ற உபர் கிண்ணப் போட்டிகளிலும் நாட்டைப் பிரதிநிதித்தார்.
தற்போது உலகின் 473ஆவது இடத்தில் உள்ள அவர் மிகத் துரிதமாக வளர்ந்து வரும் மலேசிய ஆட்டக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது நமக்குப் பெருமைத் தரக்கூடிய விசயமாகும்.
லெட்ஷனாவின் சகோதரி பிருந்தாவும் ஒரு முன்னாள் தேசிய ஆட்டக்காரராவார். 22 வயதுடைய அவர் தற்போது உயர் கல்விக்கூடத்தில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டிருக்கிறார். அதே வேளையில் மென்பொருள் பொறியியல் துறையில் பட்டப் படிப்பை மேற்கொண்டிருக்கும் 20 வயதுடைய அவரது அண்ணன் ஜோதிஸ்வரன் ஒரு முன்னாள் சிலாங்கூர் மாநில ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சிலாங்கூர் மாநில ஆட்டக்காரரான 24 வயதுடைய தீனா கடந்த 8 ஆண்டுகளாகத் தேசியக் குழுவின் இரட்டையர் பிரிவில் இடம் பெற்றுள்ளார்.
பொறியியலாளர் முரளிதரன் – டாக்டர் பரிமலா தேவி தம்பதியரின் 2ஆவது பிள்ளையான இவர் நாட்டின் முதல் நிலை இரட்டையர் ஆட்டக்காரராவார்.
பெர்லி தானுடன் ஜோடி சேர்ந்த தீனா கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக விருதுக்கான போட்டிகளின் இரட்டையர் பிரிவில் மகத்தான வெற்றி பெற்று நாட்டிற்குப் புகழ் சேர்த்தார். இவருடைய தங்கை செலினாவும் ஒரு முன்னாள் மாநில ஆட்டக்காரர்தான்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு பூப்பந்துத் துறையில் நம் இனத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் சிங்கப் பெண்களாக வலம் வரும் இந்த 3 தாரகைகளும் அடுத்த நிலையில் உள்ள நமது இளையோருக்கு ஒரு உந்துதலாக இருப்பார்கள் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.