வெள்ளப் பிரச்சினை: மக்கள் மீது பழியா?

இராகவன் கருப்பையா- கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு மக்களவைக் கூட்டத்தின் போது வெள்ளப் பேரிடர் தொடர்பாகப் பிரதமர் சப்ரி ஆற்றிய உரை எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களையும் வேதனைக்குள்ளாக்கியது என்றே சொல்ல வேண்டும்.

அப்பேரிடரை எதிர்கொண்ட விவகாரத்தில் அரசாங்கத்தின் கையாலாகாத்தனமும் அதனாலான குளறுபடிகளும் மக்களுக்கு எவ்விதமான பாதிப்பையும சங்கடத்தையும் ஏற்படுத்தியது என்பது வெள்ளிடை மலை.

இந்நிலையில் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை, குறைந்த பட்சம் ‘வருந்துகிறோம், எதிர்வரும் காலங்களில் அவ்வாறு நடக்காது’, என்ற ஆறுதல் வார்த்தைகள் அரசாங்கம் மீதான மக்களின் சினத்தைச் சற்றுக் குறைத்திருக்கும்.

அதனை விடுத்து வெள்ளப் பாதிப்புக்குச் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தையும் எதிர் கட்சியினரையும் பொது மக்களையும் குறை கூறிய சப்ரி தனது நிலையைத் தாழ்த்திக் கொண்டதாகவே தெரிகிறது.

பெருவெள்ளம் ஏற்பட்டுக் குறைந்தது 2 நாள்கள் வரையில் சம்பந்தப்பட்ட அரசாங்க இலாகாக்களைச் சேர்ந்த ஒரு நாதியையும் கண்ணுக்கு எட்டிய வரையில் எங்குமே காணவில்லை.

தங்களுடைய வீடுகளின் கூரைகள் மீது ஏறி அமர்ந்து இரவு பகலாகப் பசிப் பட்டினியில் பரிதவித்தவர்களுக்குக் கை கொடுத்தது ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள்தான் என்பதை நாடு அறியும்.

குறிப்பாக நம் இன இளைஞர்கள் சில தருணங்களில் தங்களுடைய உயிர்களையும் பணயம் வைத்து நீந்திச் சென்று இனப் பேதமின்றி மக்களைக் காப்பாற்றிய காட்சிகளையும் கூடச் சமூக வலைதளங்களில் நம்மால் காண முடிந்தது.

இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் சில அமைச்சர்கள் வெளி நாடுகளில் உல்லாசமான விடுமுறைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். இங்கிருந்த மற்ற சில அமைச்சர்களோ பத்திரிகையாளர்களை அழைத்து, மேடைப் போட்டு, விருந்தோம்பலோடு, தன்னார்வலர்களுக்கான அறிமுக விழாவைச் சாவகாசமாக நடத்திக் கொண்டிருந்தனர்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, பாங்ஙி உறுப்பினர் ஒங் கியான் மிங், செகாம்புட்டின் ஹன்னா இயோ, மூவார் உறுப்பினர் சைட் சாடிக், ஷா அலாம் உறுப்பினர் காலிட், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் கணபதிராவ் மற்றும் சபாய் தொகுதியின் காமாச்சி முதலியோர் களமிறங்கி மக்களுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

இதுவெல்லாமே சப்ரிக்கும் இதர அமைச்சர்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளுக்கு இரவு பகலாகத் தான் சென்றதாகவும் எதிர்க்கட்சியினர் யாரையும் காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டது எல்லாருக்குமே கோபத்தை ஏற்படுத்தியது.

பொது மக்களுக்கு முன் அறிவிப்பு செய்யப்பட்டதாகவும் வீட்டை விட்டு வெளியேற அவர்கள் மறுத்ததால் நிலைமை மோசமானது என்றும் அவர்கள் மீதே பழியைப் போட்டதானது, மக்களின் துயரத்தை அவர் உணரவில்லை என்றே தெரிகிறது.

இரவு பகலாக மீட்புப் பணிகளையும் உதவிகளையும் தன்னிச்சையாகவே மேற்கொண்ட பல்லின இளைஞர்களைக் கூட அவர் பாராட்டத் தவறியது வருந்தத்தக்க ஒன்றுதான்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளைக் கூட அவர் கிஞ்சிற்றும் பொருள்படுத்தவில்லை. இவ்விவகாரத்தை அரசியலாக்கி, அவையில் விரைவு ரயிலைப் போலப் பேசித் தனது உரையை முடித்துக் கொண்டார் பிரதமர்.

தகுதியும் திறமையும் இல்லாத அமைச்சரவையை நிர்வகித்து வருகிற போதிலும் குறைந்த பட்சம் நடந்த தவறை அவர் ஒப்பு கொண்டிருந்தால் அவருடைய பெருந்தன்மையை அது புலப்படுத்தியிருக்கும்.

அதனை விடுத்து நாடாளுமன்றத்தில் வீரவசனம் பேசி, மக்களையும் எதிர் கட்சியினரையும் தாக்கிப் பேசியது தனது அரசாங்கத்தின் குறைபாடுகளைச் சிரமப்பட்டு மறைப்பதற்கு அவர் முற்பட்ட ஒரு வீண் நடவடிக்கை என்றால் அது மிகையில்லை.

தனது அரசாங்கத்தின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் வகையிலான அவருடைய பேச்சு இப்பேரிடரில் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்த 50கும் மேற்பட்டோரின் குடும்பங்களுக்கும் எவ்விதத்திலும் ஆறுதலாக அமைந்திருக்காது என்பது வேதனையான ஒன்றுதான்.