நிலத்தை மீட்டது விவேகானந்தப் பள்ளிவாரியம், மேல்முறையீட்டில் விவேகானந்த ஆசிரமம் தோல்வி!

சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு பெட்டாலிங்ஜெய விவேகானந்தத் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக மத்திய அரசாங்கம் வழங்கியதாகக் கருதப்படும் ரிம 60 இலட்சத்தின் ஒரு பகுதியையும், தற்போது அந்தப்பள்ளி அமைந்துள்ள நிலத்தையும், பள்ளி வாரியத்திடம் ஒப்படைக்கக் கோரி விவேகானந்த ஆசிரமத்தின் மீது அந்தப் பள்ளியின் வாரியத்தினர் 2019-இல் வழக்கு தொடுத்தனர்.

அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால் அதை மீண்டும் மேல்முறையீடு (Court of Appeal) செய்ததில் பள்ளி வாரியம் வெற்றி பெற்றது.

கடந்த, 26.01.2022 – புதன்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. மூவர் அடங்கிய நீதிபதிகளில், தலைமை நீதிபதி இரவீந்திரன் பரமகுரு தீர்ப்பை வாசித்தார்

அதன்படி, பள்ளியின் நிலப்பட்ட மீண்டும் பள்ளி வாரியத்தின் பெயருக்கு மாற்றப்படவேண்டும் எனவும், இதற்கு முன்பு ஆசிரமம் தனது பெயருக்கு மாற்றம் செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதோடு நீதி மன்றச் செலவிற்காக ரிம 40,000-ஐ பள்ளி வாரியத்திற்கு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

இது சார்பாக இன்று (28.1.2022) பெட்டாலிங் ஜெயாவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் மருத்துவர் செல்வம் செல்லப்பன், அதன்  துணைத்தலைவர் இரா. ஜெகா, பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர்கள் நா. இராஜரத்தினம், க. சுப்பிரமணியம்,  வழக்கறிஞர் தினகரன் மற்றும் பள்ளி மேலாளர் வாரியச் செயலவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஷா ஆலாம் உயர்நீதி மன்றத்தில் இம்மாதம் 2009ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் பிரதிவாதியாக  விவேகானந்த ஆசிரமம், அவர்களுக்கு உடந்தையாக இருந்த பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூன்று உறுப்பினர்கள் மற்றும் நில உரிமத்தைப் பெயர் மாற்றம் செய்த நில உரிமப் பதிவு அதிகாரி ஆகியோர் அடங்குவர் என்று இந்த வழக்கின் வழக்கறிஞர் தினகரன் பத்துமலை தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்தப்பள்ளியின் வாரியம் 2016-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது என்றும்,  இப்பள்ளியின் நில உரிமம் பள்ளியின் பெயரிலேயே 50 ஆண்டுகள் (1959-2009) இருந்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், அந்த உரிமம் கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தின் பெயரில் ஒரே ஒரு ரிங்கிட்டுக்கு, 16.08.2012-இல் பெயர் மாற்றப்பட்டது. இதற்கு உடந்தையாக  மூன்று முன்னால் பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலவை உறுப்பினர்கள் (தலைவர் உட்பட ) கையொப்பமிடப்பட்ள்ளதாக தெரிகிறது.

அதோடு,  விவேகானந்தா பள்ளிக்குக் கல்வி அமைச்சு 2012 வாக்கில் வழங்கிய  ரிம 60 இலட்சம் பணத்தில் எதையும்  விவேகானந்தா ஆசிரமம்  இது வரையில் இந்தப் பள்ளியின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்த வில்லை.

பள்ளியில் ஒரு நான்கு மாடி கட்ட மேம்பாட்டுக்காக  இந்தப் பண ஒதுக்கீடு இருந்தும் இதுவரையில் எந்தவொரு கட்டிட மேம்பாடு வேலைகளும் விவேகானந்தா ஆசிரமம் மேற்கொள்ளவில்லை.

நிலத்தையும் எடுத்துக்கொண்டு பணத்தையும் எடுத்துக்கொண்டு எதையும் பள்ளிக்குச் செய்யாமல் விவேகானந்த ஆசிரமம் இருப்பது ஒரு பயனற்ற செயலாக இருப்பதாகவும், நில உரிமை அற்றநிலையில் பள்ளி வாரியம் எந்த ஒரு மேம்பாட்டையும் பள்ளியின் நலன் கருதிச் செய்ய இயலாது என்பதும் பள்ளி வாரியத்தின் வாதமாகும் என்கிறார் அதன் தலைவர் செல்வம்.

இந்தப்பள்ளியை துரிதமாக மேம்படுத்த நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளோம், நில உரிமம் இல்லாமல் எதையும் செய்ய இயலாது. எனவேதான் இந்த வழக்கு தொடுக்கும் சூழலுக்கு வந்தோம் என்கிறார் இந்தப்பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவரும் தற்போதைய வாரியத்துணை தலைவருமான இரா. ஜெகா. இந்தப்பள்ளியின் மேம்பாட்டுக்குப்  பாலர்பள்ளி உட்படப் பல வசதிகளை உருவாக்கியவர் இவராகும்.

மேலும் விவரிக்கையில், இந்த வழக்கு இதோடு ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்ற ஆதங்கம் இருப்பதாகச் செல்வம் தெரிவித்தார்.

விவேகானந்த ஆசிரமம் இந்த வழக்கை அடுத்த கட்டமாகக் கூட்டரசு நீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

இந்த வழக்கில் பள்ளி வாரியத்தைப் பிரதிநிதித்து வழக்குரைஞர்கள் ஜி.கே. கணேசன், ப. தினகரன், கே.என்.கீதா மற்றும் ஜெ.டி.பிராப் ஆகியோரும், ஆசிரமத்தின் வழக்குரைஞர்களாக அம்பிகா சீனிவாசனும் சாராஹோ-வும் வழக்கில் வாதாடினார்கள்.