கேலிக் கூத்தாகியுள்ளது அஸாம் பாக்கி மீதான ஊழல்!

இராகவன் கருப்பையா- ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்று என அனைத்துலக ரீதியில் முத்திரை குத்தப்பட்டுள்ள  மலேசியா அப்பட்டமான ஒரு ஊழல் விவகாரத்தை எப்படிக் கையாள்கிறது என்பதற்கு அஸாம் பாக்கி தொடர்பான சர்ச்சையை விட வேறு சிறப்பான உதாரணம் ஏதும் இருக்க முடியாது.

இவ்விவகாரம் தொடர்பாகச் சுடச்சுட அன்றாடம் வெளியாகும் பலதரப்பட்ட அறிக்கைகளையும் செய்திகளையும் பார்த்தால் திருப்பங்கள் நிறைந்த ஒரு ‘மேகா சீரியலை’ப் பார்ப்பதைப் போலவே உள்ளது.

எம்.எ.சி.சி. எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஆணையம் என்பது எல்லாருக்குமே தெரியும். ஆனால் வேலியே பயிரை மேய்வதைப் போல அண்மைய காலமாக அந்த ஆணையத்தைச் சேர்ந்தவர்களே சரமாரியாகப் புரியும் குற்றங்களைத் தொடர்ந்து அதன் மீதான மக்களின் நம்பிக்கை வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளது என்பதுதான் உண்மை.

அஸாம் பாக்கி

குறிப்பாக அதன் தலைவர் அஸாம் பாக்கி தொடர்பான அண்மைய சர்ச்சைகளானது நாட்டின் ஊழல் நிலவரம் எந்த அளவுக்கு  மோசமாக உள்ளது என்பதையே பறைசாற்றுகிறது.

இவ்விவகாரம் மீதான சில அரசியல்வாதிகளின் அறிவிலித்தனமான அறிக்கைகளும் அரசாங்கம் காட்டும் சுணக்கமும் நிலைமையை மேலும் மோசமாக்கி மக்களின் வெறுப்பை அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

மலேசியப் பங்குச் சந்தையில் அளவுக்கு அதிகமாக அஸாம் முதலீடு செய்துள்ளதாகவும் எம்.எ.சி.சி.யின் ஆலோசனை மற்றும் ஊழல் தடுப்புக் குழு அதனைக் கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்துகிறது என்றும் குற்றஞ்சாட்டி அக்குழுவின் மூத்த உறுப்பினரும் பொருளாதார வல்லுனருமான கோமெஸ் கடந்த ஆண்டு இறுதியில் பதவி விலகியபோது இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

அடுத்த கனமே அஸாமைத் தற்காத்துப் பேசிய எம்.எ.சி.சி. ஆலோசனை மன்றத்தின் தலைவர்  அபு ஸஹார், தங்களிடம் அஸாம் விளக்கம் அளித்துவிட்டதாகவும் அவர் குற்றம் புரியவில்லை என்றும் அறிவித்தார்.

ஆனால் அபு ஸஹாரின் விளக்கத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என அம்மன்றத்தின் இதர உறுப்பினர்கள் கூட்டாக அறிவித்ததுதான் வேடிக்கையான விசயம்.

இதற்கிடையே அவசரக்குடுக்கையாக மூக்கை நுழைத்த பாஸ் கட்சி, அஸாம் குற்றம் புரியவில்லை எனும் அபு ஸஹாரின் விளக்கத்தை ஏற்று இவ்விவகாரத்தை இதோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அஸாமின் அபிமானத்தைப் பெற முற்பட்டதை மக்கள் உணராமல் இல்லை.

இருந்த போதிலும் பாஸ் கட்சியின் அறிவிப்பை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. அடுத்த சில நாள்களில், அஸாம் மீதான குற்றச்சாட்டைத் தாங்கள் விசாரிக்கவிருப்பதாக ‘செக்கியோரிட்டிஸ் கமிஷன்’ எனப்படும் ‘பங்கு பரிவர்த்தனை ஆணையம்’ அறிக்கை வெளியிட்டது.

அந்த ஆணையம் எவ்வித நடவடிக்கையையும் முடுக்கிவிடும் முன் அஸாம் செய்த ஒரு திடீர் அறிவிப்பு அவருடைய பலத்தைக் காட்டும் வகையில் இருந்தது. அதாவது பங்கு பரிவர்த்தனை ஆணையத்தின் சில உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் வந்துள்ளதாகவும் அவற்றைத் தாங்கள் விசாரிக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டது இப்பிரச்சினைக்குப் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

புலி போலக் கர்ஜித்த அவ்வாணையம் அஸாமின் அறிக்கைக்குப் பிறகு பூனை போலப் பதுங்கியதுதான் வேடிக்கை. அஸாம் விவகாரத்தைத் தாங்கள் விசாரித்துவிட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை  இல்லை என்றும் அந்த ஆணையம் செய்த அறிவிப்பு மக்களின் கோபத்தை அதிகரிக்கவே செய்தது.

இந்த முடிவை எல்லாத் தரப்பினரும் ஏற்று இப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனப் பிரதமர் சப்ரி செய்த அறிவிப்பு நிலைமையை மேலும் மோசமாக்கியது என்றே சொல்ல வேண்டும்.காவல் துறையினரும் கூட இதுவரையில் அஸாமை விசாரணைக்கு அழைத்ததாகத் தெரியவில்லை. இவ்விவகாரத்தை முதலில் அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் லலிதாவைத்தான் அவர்கள் விசாரணைக்கு அழைத்தனர்.

லலிதா மீது தனிப்பட்ட முறையில் அவதூறு வழக்கு தொடுத்துள்ள அஸாம், விசாரணைக்காக அழைத்த நாடாளுமன்றச் சிறப்புக் குழுவையும் உதாசீனப்படுத்தியது வியப்பாகத்தான் உள்ளது. சில சட்ட விதிகளைக் காரணம் காட்டி அக்குழுவின் அழைப்பை அவர் நிராகரித்தார்.

தமக்கு ஆதரவாகப் பங்கு பரிவர்த்தனை ஆணையம் செய்த அறிவிப்பைச் சாதகமாக இருக்கப் பிடித்துக் கொண்டு தான் ஒரு நிரபராதி எனச் சுயமாகவே அவர் பிரகடனப்படுத்திக்கொண்டார்.

விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு ‘C4’ எனப்படும் ஊழல் தடுப்பு அரசு சாரா அமைப்பும் எதிர்க்கட்சியினரும் அந்த ஆணையத்திற்குத் தொடர்ந்தார்போல் அறைகூவல் விடுத்து வருகிற போதிலும் ஒரு அணுவும் நகர்ந்தபாடில்லை.

தொடக்கத்தில் தனக்கு எதிராகக் குரல் எழுப்பிய சுங்ஙை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசாவின் ஊழியர்கள் மீது திடீர் விசாரணை மேற்கொண்ட அஸாம், எம்.எ.சி.சி. தனக்கு வழங்கியுள்ள பலத்தை இப்போது முழுமையாகப் பயன்படுத்துவதைப் போல் தெரிகிறது.

அஸாம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த மாதம் எதிர்க்கட்சி இளைஞர்கள் குழு ஒன்றுக்குத் தலைமையேற்று அமைதி மறியல் செய்த முன்னாள் கல்வியமைச்சர் மஸ்லியையும் அவர் விடவில்லை.

ஜொகூர், சிம்பாங் ரெங்காமில் உள்ள தமது அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த எம்.எ.சி.சி. அதிகாரிகளும் காவல் துறையினரும் தமது பணியாளர்களையும் ஆதரவாளர்களையும் மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாக மஸ்லி கடந்த வாரம் குற்றஞ்சாட்டினார்.

நிலைமை இவ்வாறு இருக்க அரசாங்கத் தரப்பில் கிட்டத்தட்ட எல்லாருமே மௌனம் சாதிப்பதானது, பொது மக்களின் பலதரப்பட்ட யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.

‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ எனும் பழமொழிக்கு ஏற்ப அஸாமைத் தீண்டுவதற்குத் துணிச்சல் இல்லாமல் மௌனச் சாமியார்களாக நடுங்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளையும், தன்னை யாரும் அசைக்க முடியாது எனும் தோரணையில் காய்களை நகர்த்தி வரும் அஸாமையும் பொது மக்கள் சமூக வலைதளங்களில் மானாவாரியாக விமர்சித்த வண்ணமாகவே உள்ளனர்.

இதுவெல்லாமே ஊழலில் ஊறிக் கிடக்கும் நம் நாட்டின் சீர்கேட்டைத்தான் பிரதிபலிக்கிறதே தவிர ஊழலை ஒழிப்பதற்கு எவ்வகையிலும் உதவியாக இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.