கா. ஆறுமுகம் – கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழ்மை நிலையிலுள்ள இந்தியர்கள் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் வாழும் இவர்களின் வாழ்வாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பதை அரசாங்கம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
மேலோட்டமாக பார்த்தாலே போதும் கீழ்மட்டத்தில் இருக்கும் இந்தியர்கள் திக்கற்ற நிலையில் உள்ளது தெரியும். இந்தியர்களை அடிப்படை நடைமுறை வாழ்வாதாரத்திற்கு அரசாங்கத்தின் திட்டங்கள் அத்தியாவசியமானவை. அவை மட்டுமே துணை புரியும்.
இந்த நாட்டின் இனவாத அரசியல், பெரும்பான்மை மக்களாக இருக்கும் மலாய் இனத்தவருக்கு மட்டுமே அரசியலமைப்பின் அடித்தளத்திலிருந்து செயல்படுகிறது. அரசாங்கத்தின் பல்வகை அமைப்பு முறைகளும் பொருளாதார திட்டங்களும் அவர்களின் வறுமையை அகற்றுவதற்கு நேரிடையாகவே துணைபுரிகின்றன.
இது போன்ற திட்டங்கள் ஏழை இந்தியர்களுக்குக் கிடைப்பதில்லை சமூக பொருளாதார நிலையிலிருந்து இவர்கள் ஒதுக்கப்பட்ட நிலையிலும் ஓரங்கட்டப்பட்ட சூழலிலும் வாழ்ந்து வருவது நாம் அறிந்ததுதான்.
இந்தியர்களின் பிரதிநிதியாக அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகளின் வழியாகத்தான் இந்தியர்களின் பிரச்சனைகள் அரசாங்கத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்ற வகையில்தான் நடைமுறை அரசியல் இருக்கின்றது.
இந்த நாட்டில் இருக்கும் மக்கள் வறுமையில் பாதிக்கப்படும் பொழுது, அவர்கள் சமூக பொருளாதார வேறுபாடுகள் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு அதற்கான திட்டங்களின் வழி பயன்பெற வழிமுறைகள் வேண்டும். ஆனால், நடைமுறையில், இவர்கள் கட்சி அரசியலின் வழிதான் தங்களின் பிரச்சனைகளை அரசாங்கத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார்கள்.
இந்நிலையில் வலிமை இல்லாத சிறுபான்மையினராக இருக்கும் இந்தியர்கள் தங்களின் பிரதிநிதிகளின் வழிதான் தங்களது சமூக பொருளாதார பிரச்சனைகளை அரசாங்கத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்ல இயலும்.
அதிகாரமும் பதவியும் கொண்டுள்ள அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இந்தியப் பிரதிநிதிகளால் மட்டும்தான் இதைச்செய்ய முடியும். இந்த சூழலில் இந்தியப் பிரதிநிதிகளின் பிரதிநிதித்துவம் வலிமை அற்ற சூழலில் இருக்குமானால் அவர்கள் கொண்டு செல்லும் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்காது.
நடைமுறையில் இந்தியச் சமூகத்திற்கு, சமூகத்தின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் குன்றிப்போய் பலம் அற்றவர்களாக இருக்கின்றனர். அதற்குக் காரணம் சந்தர்ப்பவாத அரசியல் நியமனமாகும்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஏழ்மையில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவு பாதித்துள்ளது. உற்பத்தி குறைவால் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன. வருமான குறைவும், விலைவாசி ஏற்றமும், கடுமையான தாக்கத்தை ஏழ்மையில் ஏற்கெனவே கடனாளியாக வாழும், இந்தியச் சமூகத்தினருக்கு உண்டாக்கியுள்ளது.
பாதுகாப்பற்ற ஒரு வறுமையான சூழலில் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்கிறார்கள். இவர்களுடைய இந்த சூழலுக்கு எப்படிப்பட்ட தீர்வு காண்பது என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும்.
இந்த வறுமை நிலையை உணர்ந்து போதுமான நலன்னபிவிருத்தி செயல் திட்டங்களை ஏழ்மை நிலையில் உள்ள இந்தியர்களுக்கு நேரிடையாக சென்றடைய அரசாங்கம் போதுமான ஒதுக்கீடுகளையும், அதற்கான தகுந்த வழிமுறைகளையும் கையாள வேண்டும்.
அரசாங்கத்தின் காலதாமதமும், புறக்கணிப்பும் இந்தியர்களிடையே இருக்கும் சமூக சிக்கல்களை அதிகப்படுத்துவதோடு, அவை இதுவரை உருவாக்கப்பட்டுள்ள கொஞ்ச நஞ்ச சமூக மேம்பாட்டுக்கும் சவாலாக அமையும்.