ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.), N49 கோத்தா இஸ்கண்டார் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) நேற்று வெளியிட்டது.
நேற்று மாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் மற்றும் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் முன்னிலையில் அத்தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஜொகூர் பி.ஆர்.என்.-இல், முதல் முறையாக போட்டியிடும் பி.எஸ்.எம்., மக்களின் அடிப்படைத் தேவைகளை முன்னிறுத்தும் 3 முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் இந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளதாக டாக்டர் ஜெயக்குமார் சொன்னார்.
“எங்கள் தேர்தல் அறிக்கை வீட்டுரிமை திட்டங்கள், வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கும் திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது,” என்றார் அவர்.
அதனைத் தொடர்ந்து, கட்சி வேட்பாளர் அரங்கண்ணல் இராஜு தேர்தல் அறிக்கையின் உள்ளடக்கத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
ஜொகூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் வீட்டுரிமைத் திட்டங்கள் மக்களுக்குப் பயனளிக்கும் ஒன்றாக இல்லையென ‘அரா’ என்று அனைவராலும் அறியப்படும் அரங்கண்ணல், கங்கார் பூலாயில் இயங்கும் தேர்தல் நடவடிக்கை மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“பி40 குழுவினர் மட்டுமல்லாது, எம்40 நடுத்தரக் குழுவினரும் வீடு வாங்க முடியாத நிலையில் உள்ளனர். வீட்டுவசதி என்பது வசிப்பதற்காக அல்லாமல், ஒரு முதலீடாகவும் வணிகமாகவும் இங்கு மாறிவிட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வீடுகள் வாங்க போதுமான கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்படாததால், சந்தை விலை அதிகம் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஜொகூரில் வீட்டு வாடகையும் மிக அதிகமாக இருப்பது பி40 குழுவினருக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது,” என்றார் அவர்.
“எனவே, பி.எஸ்.எம். கட்சிக்கு வாய்ப்பளித்தால், மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வீட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நாங்கள் முயற்சிப்போம். RM100,000-க்குட்பட்ட விலையிலான வீடுகள் மற்றும் பி.பி.ஆர். ‘வாடகை-வாங்குதல்’ (sewa beli) திட்டத்தில் வீடுகள் அதிகம் நிர்மாணிக்க வலியுறுத்துவோம்,” என அவர் கூறினார்.
மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்கும் திட்டங்கள் சிலவற்றையும் பி.எஸ்.எம். தனது தேர்தல் அறிக்கையில் கொண்டுள்ளது.
“சமீபகாலமாக, ஜொகூரில் காய்கறி விலைகள் தினசரி உயர்ந்து வருகின்றன. இருப்பினும், மாநிலத்தின் 40% காய்கறிகள் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகளின் செல்வாக்கு காரணமாக, கோத்தா இஸ்கண்டாரில் பொருட்களின் விலை மிக அதிகமாக உள்ளது. ஒரு சிலரின் வாங்கும் சக்தியானது, கட்டுப்பாடற்ற சந்தையில் விலைவாசியை உயர்த்தி, சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவினத்தை அதிகரிக்கிறது,” என்றார் அரா.
“எனவே நாங்கள், ஜொகூர் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிபடுத்துவதோடு; உள்ளூர் உணவு தொழில்துறையை மேம்படுத்த ஜொகூர் மாநில அரசை வலியுறுத்துவோம்.
“மக்களின் அன்றாட உணவுப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, அரசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றியமைக்கலாம்,” என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.
சுத்தமான நீர் வழங்கல், சுகாதாரச் சேவைகள் போன்ற அடிப்படைச் சேவைகள் எப்போதும் அரசாங்கத்தின் பராமரிப்பில் இருப்பதையும், இலாபத்திற்காக தனியார் மயமாக்கப்படாமல் இருப்பதையும் பி.எஸ்.எம். உறுதிசெய்யும் எனவும் அவர் சொன்னார்.
மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அல்லது பெருநிறுவனங்களுக்கு ஊக்குவிப்புகளை வழங்குவதன் மூலம் வீணடிக்கப்படும் அரசாங்க நிதியை, மக்களுக்கான மானியங்களாக மாற்றி, அவற்றை முறையாகப் பராமரிக்கவும் அதிகரிக்கவும் வழி காணவுள்ளதாக கூறிய அவர், அதன்வழி பொருள்களின் விலை எப்போதும் மக்களின் வாங்கும் திறனுக்குள் இருப்பதை உறுதிபடுத்தலாம் என்றும் கூறினார்.
“அரசாங்க நிதி உதவிகள் கோடிஸ்வரர்களுக்குக் கிடைக்க வேண்டியவை அல்ல, வறுமையில் வாடும் கோடிகணக்கான மக்களுக்குக் கொடுக்க வேண்டியவை,” என கோத்தா இஸ்கண்டார் தொகுதியின் ஆக இளைய வேட்பாளரான அரங்கண்ணல் இராஜ் தெரிவித்தார். (#BantuanUtkJutaanRakyatBukanJutawan)
அதுமட்டுமின்றி, நாளுக்கு நாள் உயர்ந்துவரும் விலைவாசிக்கு ஏற்ப, தொழிலாளர்களின் வருமானமும் உயர வேண்டும். அதற்காக தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த குரல் கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் வேலை செய்யும் சுமார் 200,000 ஜொகூர்வாசிகளில் பலர், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக வேலைகளையும் வருமான ஆதாரங்களையும் இழக்கும் நிலை தொடர்வதாக அவர் சொன்னார்.
“ஜொகூர்வாசிகளான நாம் சிங்கப்பூரிடம் ஏன் கெஞ்சி நிற்க வேண்டும்? நமக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்தினால், இந்நிலையை மாற்றியமைக்கலாம்.
“தொற்றுநோய் காரணமாக, வேலை இழந்த சாதாரண மக்கள் தங்கள் சொந்த வருமானத்தை ஈட்டுவதற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்த மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்.
“வேளாண்மைத் துறை, வனப் பாதுகாப்பு, கடலோரப் பகுதிகள் மற்றும் ஆறுகள் போன்று நீண்ட காலத்திற்கு மக்களுக்குப் பயனளிக்கும் துறைகளில் அரசு வேலைகளை உருவாக்க வேண்டும். ஜொகூரில், விவசாயம் செய்ய நிலங்கள் கிடைப்பது அரிதாக உள்ளதால், வெறுமனே கிடக்கும் மாநில அரசுக்குச் சொந்தமான நிலங்களைப் பயிர்செய்ய வழங்க வேண்டும்.
“பொதுப் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பு, மலிவுவிலை வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள், குறிப்பாக குறைந்த கட்டண சுகாதார கிளினிக்குகளை மேம்படுத்தும் துறைகளில்கூட இவர்களுக்கான வேலை வாய்ப்புகளை மாநில அரசு உருவாக்கலாம்.
“ஏழைகள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் பூர்வக் குடிமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்; அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்; வறுமையை ஒழிக்க வேண்டும்; அதற்கு அவர்களை மையமாகக் கொண்ட சமூகப் பணித் துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.
இதுதவிர, கோத்தா இஸ்கண்டார் மக்கள் எதிர்நோக்கும் வேறு சில பிரச்சினைகளும் பி.எஸ்.எம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வீட்டுவசதி
- மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில், மலிவுவிலை அடுக்குமாடி குடியிருப்புகளின் பராமரிப்பு மாநகரச் சபையால் கையாளப்பட வேண்டும்.
- மோசமான நிலையில் இருக்கும் மலிவுவிலை அடுக்குமாடி குடியிருப்புகளைப் பழுதுபார்க்க, மாநில அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
- RM100,000 குறைவான விலையில் `மக்கள் வீடு`களைக் (பிபிஆர்) கட்டுவதற்கு நிலங்கள் வழங்க, அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட வீட்டு வாடகையைச் செலுத்த இயலாத B40 குழுவினருக்கு உதவும் வகையில், பிபிஆர் வாடகை வீடுகளின் கட்டுமானத்தை அதிகரிக்க வேண்டும்.
- `வாடகை – வாங்குதல் வீடு` (Rumah Sewa/Beli) திட்டத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
சுகாதாரம்
- அரசாங்க கிளினிக்குகளில் 24 மணிநேர ஆம்புலன்ஸ் சேவையும் போதுமான அவசர சிகிச்சை வசதியும் இருக்க வேண்டும்.
- அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகளில் பல்துறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
- மக்கள் மீதான மாநில அரசின் சமூகப் பொறுப்பு (கே.பி.ஜே. போன்ற தனியார் மருத்துவமனைகளும்) ஒருபோதும் புறக்கணிக்கப்படக் கூடாது. ஜொகூர் மக்களுக்கு நியாயமான விலையில், போதுமான மருத்துவ வசதிகள் கிடைப்பதையும் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
பொது போக்குவரத்து
- கோத்தா இஸ்கண்டாரில் பொது போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை, இது அதிக கார்களை வாங்க மக்களைத் தூண்டுகிறது. மக்கள் பயணம் செய்வதற்கு வசதியான பேருந்து சேவைகளை மாநில அரசும் மாநகரச் சபையும் வழங்க வேண்டும்.
- பாமர மக்கள் வசிக்கும் பகுதிகள், மலிவுவிலை அடுக்குமாடி குடியிருப்புகள், கிராமங்கள் போன்ற இடங்களில் பேருந்து வழித்தடங்களை அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
கல்வி
- மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளின் சிக்கல்கள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை மற்றும் மாணவர்களின் அதிகரிப்புக்கு ஏற்ப புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.
திடீர் வெள்ளப் பிரச்சனைகளையும் உள்கட்டமைப்புகளையும் மேம்படுத்தல்கள்
- அடிக்கடி திடீர் வெள்ளம் ஏற்படும் லீமா கெடாய், கேலாங் பாத்தா, கம்போங் முவாபாக்காட், கம்போங் பூலாய், கம்போங் உலு பூலாய் போன்ற பகுதிகளின் பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.
- காலநிலை மாற்றம் அடிக்கடி ஏற்படுவதால், உள்கட்டமைப்பு, வடிக்கால் போன்றவை அவ்வப்போது பராமரிக்கப்பட்டு, எப்போதும் நீர் வெளியேற்றத்திற்கு இடமளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டும்.
- தனியார் மேம்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் ஒரு விரிவான இ.ஐ.ஏ. மூலம் செயல்படுத்தப்பட வேண்டும். இது, சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கங்களை மேம்பாட்டாளர்கள் அறிந்து, அதற்கு பொறுப்பேற்க ஏதுவாக அமையும்.
ஆறு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு
- சுங்கை மெலாயு, சுங்கை பெரெப்பாட் இரண்டும் அதிக மாசடைந்த நதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை கழிவுகள், கழிவுநீர் ஆலைகள், வீட்டுக் கழிவு நீர் மற்றும் குப்பைகள் உட்பட, இன்னும் பல கூறுகள் மாசுபாட்டிற்குக் காரணமாக அறியப்படுகின்றன. இந்நதிகளைச் சுத்தப்படுத்த நீண்ட கால நடவடிக்கைகளை நான் முன்மொழிவேன். இந்த நதிகளின் மறுசீரமைப்பு பணியில் மாநில அரசு முதலீடு செய்வதுடன், கோத்தா இஸ்கண்டார் மக்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்க வேண்டும்.
- அதிகப்படியான வளர்ச்சியின் காரணமாக மோசமடைந்துள்ள கடலோரப் பகுதிகளின் சூழலியலை மீட்டெடுக்க சதுப்புநில மரங்கள் நடுவதை அதிகரிக்க வேண்டும்.