இராகவன் கருப்பையா- நம் நாட்டில் அறிந்தோ அறியாமலோ சிறார்கள், குறிப்பாக இந்து மதத்தைச் சார்ந்த பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்படுவது அண்மைய காலமாக கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் பெற்றோரால் கைவிடப்படும் பிள்ளைகளும் கணவன்-மனைவி விவாகரத்தின் விளைவால் இலக்கு இழந்து பரிதவிக்கும் பிள்ளைகளுமே இத்தகைய பரிதாபகரமான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இம்மாதிரியான சூழலில் அவர்களுடைய பலவீனத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில தரப்பினர் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் தோரணையில் மத மாற்றம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
பெரும்பாலான சமயங்களில் தங்களுடைய மதம் மாற்றப்படுகிறது என்ற விவரம் அறியாமலேயே அவர்கள் இந்நிலைக்கு ஆளாகின்றனர் என்பது மிகவும் கவலையளிக்கிறது.
நம் இனம் சார்ந்த ஒரு சில அரசு சாரா இயக்கங்கள் ஆதரவற்றோருக்கான இல்லங்களை ஆங்காங்கே நடத்தி வருகிற போதிலும் இஸ்லாமிய மற்றும் தேவாலயங்களின் கீழ் இயங்கும் மையங்களைப் போல ஆக்க கரமாக இல்லை என்றேத் தெரிகிறது.
இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு நாடு தழுவிய நிலையில் உள்ள இந்து ஆலயங்கள், குறிப்பாக வசதி படைத்தக் கோயில்களின் நிர்வாகத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து யோசிக்க வேண்டும்.
புதிதாக நிர்மாணிக்கப்படும் ஆலயங்கள் அல்லது மறு சீரமைப்புச் செய்யப்படும் கோயில்கள் ஆதரவற்றப் பிள்ளைகளுக்கான ஆசிரமம் ஒன்றையும் சேர்த்தேக் கட்டவேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு உன்னது முன்னெடுப்புக்கு பொது மக்களின் ஆதரவு வற்றாமல் இருக்கும் என்பதில் ஐயமில்லை. கோயில் வளாகத்தில் இல்லாவிட்டாலும் மிக அருகாமையில் குறைந்த பட்சம் வாடகைக்காவது ஒரு இல்லத்தை ஏற்பாடு செய்யலாம்.
இவ்வாறான முயற்சிகள் ஆதரவற்ற நம் பிள்ளைகள் தடம் மாறி மதம் மாறிப் போவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க உதவும். அவர்களை இந்து சமய போதனைகளோடு வளர்ப்பதற்கும் ஏதுவாக இது அமையும்.
அது மட்டுமின்றி அவர்களைத் தமிழ் பள்ளிக்கு அனுப்பி அவர்களுடைய வாழ்க்கையை நெறிப்படுத்துவதில் சம்பந்தப்பட்ட ஆலயங்கள் பெரும் பங்காற்ற முடியும்.
இத்தகைய பயன்மிக்க நடவடிக்கைகளை ஆலய நிர்வாகஸ்த்தர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மேற்கொள்வது அவசியம் என்பதை அண்மையில் எல்லாரது கவனத்தையும் ஈர்த்த, லோ சியூ ஹோங் எனும் தனித்த வாழும் தாயின் பரிதவிப்பு நமக்கு உணர்த்துகிறது.
தனது முன்னாள் கணவர் நாகேசுவரனால் தனக்குத் தெரியாமலேயே வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்ட தனது 3 பிள்ளைகளும் தன்னிடம் மீண்டும் வந்துள்ள போதிலும் அந்தக் குடும்பம் இன்னமும் நிம்மதியிழந்துதான் பரிதவிக்கின்றது.
பெற்றோர் இருவரின் இணக்கமும் இல்லாமல் செய்யப்படும் பிள்ளைகளின் மத மாற்றம் செல்லாது எனக் கூட்டரசு நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்துள்ள போதிலும்,
புத்த மதத்தைச் சேர்ந்த சியூ ஹோங்கின் பிள்ளைகள் முஸ்லிம்களாகவே வளர்க்கப்பட வேண்டும் எனப் பல இஸ்லாமியத் தரப்பினர் அக்குடும்பத்திற்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர்.
இல்லையேல் அம்மூன்றுப் பிள்ளைகளும் தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டால் எந்தத் தாயிற்குத்தான் நிம்மதியிருக்கும்!
சியூ ஹோங் தனது உரிமைக்காகவே துணிச்சலாகப் போராடியதால் இந்த முழு விவகாரமும் வெளிச்சத்திற்கு வந்தது. திரை மறைவில் இம்மாதிரி எத்தனைக் குடும்பங்கள் மாட்டிக் கொண்டு அவதிப்படுகின்றன என்று தெளிவாகத் தெரியவில்லை.
ஆக இதுபோன்ற குளறுபடிகள் மேலும் தொடர்ந்து நமது சமுதாயத்தை வாட்டி வதைக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இந்து ஆலயங்கள் உடனடியாக நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.